பிணையிலுள்ள ஜாலியவை கைது செய்ய மீள்உத்தரவு | தினகரன்

பிணையிலுள்ள ஜாலியவை கைது செய்ய மீள்உத்தரவு

 

அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் ஜாலிய சித்தரான் விக்ரமசூரியவை கைது செய்வதற்கான உத்தரவை மீண்டுமொருமுறை வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இலங்கைக்கான தூதரக கட்டடத்தை கொள்வனவு செய்வது தொடர்பில் வழங்கப்பட்ட 6.6 மில்லியன் அமெரிக்க டொலர்களில் 3 இலட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டொலர் அரசாங்க நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் FCID யினால் கைது செய்யப்பட்ட அவர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு, இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவருக்கு திறந்த பிடியாணை உத்தரவை நீதவான் விடுத்தார்.

சந்தேகநபர், தற்காலிகமாக வெளிநாடு சென்று மீண்டும் நீதிமன்றிற்கு கொண்டு வரும் உறுதிமொழிக்கு அமைய, சந்தேகநபரின் மனைவி குமுதினி விக்ரமசூரிய மற்றும் சகோதரியான பிரியங்கிகா துலிகா ஆகியோருக்கும் பிடியாணை உத்தரவை வழங்கினார்.

குறித்த வழக்கு கடந்த ஜனவரி 05 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை மோசடி செய்யப்பட்ட குறித்த நிதி, பி.பி. இன்டநெஷனல் நிறுவனத்தின் ஊடாக நடைமுறைக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அக்கணக்கு உள்ளிட்ட 12 வங்கிக் கணக்குகளை பரீட்சிப்பதற்கு அனுமதி தருமாறு விடுக்கப்பட்ட பொலிஸ் நிதி மோசடி பிரிவின் கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

- Subhashini Senanayake


Add new comment

Or log in with...