தமிழ் அரசியல் தலைமைகள் உணர வேண்டிய யதார்த்தம்! | தினகரன்

தமிழ் அரசியல் தலைமைகள் உணர வேண்டிய யதார்த்தம்!

மைத்திரி_ -ரணில் கூட்டரசாங்கம் உருவாக்கப்பட்ட பின்னர் இந்த நாட்டில் பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான முதலாவது தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கின்றது. கிராமிய மற்றும் பிரதேச அபிவிருத்தியுடன் தொடர்புடைய இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே அந்த நோக்கத்திற்கும் அப்பால் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாக நோக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் 'சிறிலங்கா பொதுஜன பெரமுன' என்ற பெயரில் செயற்பட்டு வந்த மஹிந்த தரப்பு தனது செல்வாக்கை மீள வெளிப்படுத்துவற்கான ஒரு தளமாக இதனைப் பயன்படுத்தி இன்று அது தென்னிலங்கை அரசியலை சூடு பிடிக்கச் செய்துள்ளது. கூட்டரசாங்கம் அமைந்துள்ள ஜனாதிபதி மைத்திரியினுடைய சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பிரதமர் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டும் பாரிய பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன.

கூட்டரசாங்கத்தின் செயற்பாடுகள் தென்னிலங்கையில் மக்களைத் திருப்திப்படுத்துமுகமாக இல்லை என்பதை இது வெளிப்படுத்தியிருக்கின்றது. இதனால் கூட்டரசாங்கத்தை கொண்டு நடத்துவது தொடர்பிலும் இழுபறி தோன்றியிருக்கிறது. உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற்றால் மஹிந்த தரப்பு தனது செல்வாக்கை மீள நிலைநிறுத்தும் என முன்னரே பலராலும் எதிர்வு கூறப்பட்டிருந்தமையும் இங்கு கவனிக்கத்தக்கது.

மஹிந்த தரப்பால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 'தாமரை மொட்டு' சின்னம் இன்று தென்னிலங்கை அரசியல் களத்தை ஆட்டம் காண வைத்துள்ளதுடன், இராஜதந்திரிகளும் இது தொடர்பில் கவனம் செலுத்தியிருக்கின்றனர்.

இந்நிலையில் வடக்கு, கிழக்கு அரசியல் நிலைமையும் இதுவரை காலமும் பிரதான கட்சியாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை கேள்விக்குட்படுத்தியுள்ளது. வடக்கு, கிழக்கில் தனது வாக்கு வங்கியில் பாரிய சரிவை சந்தித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு, யாழ் மாவட்டத்தில் இரு நகரசபைகளையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் பறிகொடுத்திருக்கின்றது.

யாழ் மாநகரசபையில் கூட தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கதிகலங்க வைத்துள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகளினால் அடையாளம் காட்டப்பட்ட ஒரு அமைப்பாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பை நோக்கி வந்தனரென்பதை எவரும் மறுக்க முடியாது.

இதன் காரணமாக 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்ட பின்னர் தமிழ் தேசிய மக்களின் அபிலாசைகளைப் பெறுவதற்கு தொடர் ஜனநாயக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோள்களில் தானாகவே விழுந்தது.

2009 இற்கு பின்னர் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் அமோக ஆதரவையும் பெற்றது. இதன் போது தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சமஷ்டி முறையிலான ஆட்சிமுறை, வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களுடன் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமால் ஆக்கப்பட்டோரை கண்டறிதல், மக்களது காணிகளை விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை தனது தேர்தல் விஞ்ஞாபனமாக முன்வைத்தே மக்களின் ஆணையைக் கோரியது தமிழ்க் கூட்டமைப்பு. அதற்கு மக்களிடம் இருந்து ஆணையும் கிடைத்தது.

மைத்திரி_ -ரணில் கூட்டரசாங்கம் அமைப்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவை தமிழ்க் கூட்டமைப்பு வழங்கியது. அதுமாத்திரமன்றி எதிர்க்கட்சித் தலைவர், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் உள்ளிட்ட பதவிகளும் தமிழ்க் கூட்டமைப்புக் கிடைத்தன. எதிர்க்கட்சி என்ற பெயரில் மைத்திரி_ - ரணில் அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்து வருகின்றது தமிழ்க் கூட்டமைப்பு. அரசாங்கத்துடன் தமக்குள்ள இந்த தொடர்பைப் பயன்படுத்தி தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்க்க காத்திரமான நடவடிக்கைகளை தமிழ்க் கூட்டமைப்பு தலைமை எடுக்க தவறியிருக்கின்றது என்ற குற்றச்சாட்டு தமிழ் மக்கள் மத்தியில் பரவலாகவே உள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குறிப்பாக தமிழரசுக் கட்சியின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கம் பதவியேற்று 3 ஆண்டுகள் கடந்த நிலையில், தமிழ் மக்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கவில்லை.அச்சம் நீங்கிய வாழ்வு மட்டுமே கிடைத்தது.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் கடந்த ஒரு வருடமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன என நீதி கோரியும், தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் வீதிகளில் இருந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த மக்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் அந்த மக்களின் பிரதிநிதிகளாகவுள்ள கூட்டமைப்புத் தலைமை காத்திரமாக உழைக்கவில்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டு. சர்வதேச சமூகத்திற்கோ அல்லது இலங்கை அரசாங்கத்திற்கோ கூட்டமைப்புத் தலைமை இது தொடர்பில் போதிய அழுத்தம் கொடுத்ததாகத் தெரியவில்லை. இது பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை உருவாக்கியிருந்தது.

ஜனாதிபத் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிட்ட போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்தல், தேர்தல் மறுசீரமைப்பு, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணல் ஆகிய மூன்று கோரிக்கைளை அவர் முன்வைத்திருந்தார். இதில் முதல் இரு விடயங்களும் நடைமுறை அரசியல் யாப்பின் துணையுடன் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மூன்றாவது வாக்குறுதியான தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணல் தொடர்பாக புதிய அரசியலமைப்பு உருவாக்க முற்சிகள் நடைபெற்று அது தொடர்பான இடைக்கால அறிக்கையும் வெளிவந்திருந்தது. அந்த இடைக்கால அறிக்கையில் ஒற்றையாட்சி முறையிலான ஆட்சி, வடக்கு - கிழக்கு இணைப்பு சாத்தியமற்றது, பௌத்தத்திற்கு முதலிடம் எனக் கூறப்பட்டிருந்தது.

தமிழ் மக்களது நீண்ட கால அபிலாசைகளுக்கு மாறான இந்த இடைக்கால வரைபை தமிழரசுக் கட்சித் தலைமை ஏற்றுக் கொண்டு அது தொடர்பான பிரசாரங்களை முன்னெடுத்திருந்தது. இதனை வடக்கு முதலமைச்சர், தமிழ் மக்கள் பேரவை, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் சட்டத்தரணிகள் சங்கம், பொது அமைப்புக்கள், மனிதவுரிமை செயற்பாட்டு அமைப்புகள், ஈபிஆர்எல்எப் என்பன கடுமையாக எதிர்த்து வந்தன. ஆனாலும் அரசாங்கத்துடன் இணைந்து அதனை நிறைவேற்றுவதற்கான ஒரு ஆணையாக உள்ளூராட்சித் தேர்தலை தமிழரசுக் கட்சி கையாள முனைந்தது. இது தமிழ் மக்கள் மத்தியில் தமிழரசுக் கட்சிக்கான எதிர்ப்பு அலை ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையகத்தில் இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணை வழங்கி நிறைவேற்றிய தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாமல், மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை பெற்றுக் கொடுத்து, சர்வதேச அழுத்தங்களில் இருந்து அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை உதவியிருந்ததாகவும் தமிழ் மக்கள் மத்தியில் ஆதங்கம் இல்லாமலில்லை.

தமிழரசுக் கட்சியின் இன்றைய செல்வாக்குச் சரிவுக்கு இவையெல்லாம் காரணங்களாக அமைந்து விட்டன. இதனால் தமிழ் மக்கள் தெளிவடைந்தவர்களாக தமக்கான ஒரு மாற்றுத் தலைமை பற்றிய தேடல்களை ஆரம்பித்தனர். அதுவே அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி எழுச்சி பெற வழிவகுத்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. தேர்தல் முடிவு அதனை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

தமிழரசுக் கட்சிக்கு எதிராக பங்காளிக் கட்சிகளால் முன்வைக்கப்பட்டு வந்த குற்றச்சாட்டுக்களும், ஈபிஆர்எல்எப் கட்சியின் வெளியேற்றமும் தமிழரசுக் கட்சியை விமர்சனத்திற்குள்ளாக்கின. தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளும், தேர்தல் வேட்பாளர் நியமனத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் குறித்த கேள்வியை மக்களிடத்தில் ஏற்படுத்தியிருந்தன.

வடக்கு - கிழக்கில் இருந்து இராணுவத்தை அகற்றக் கோரும் ஒரு தரப்பின் தேர்தல் கூட்டத்திற்கு சென்ற பாதிக்கப்பட்ட அதே தரப்பைச் சேர்ந்த மக்களை, பாதுகாப்பு தரப்புடன் தொடர்புடையவர்கள் சல்லடை போட்டு சோதனை செய்யும் நிகழ்வும் தேர்தல் நேரத்தில் அரங்கேறியது. இது தமிழ் மக்களின் தன்மானத்தின் மீது கேள்வியை ஏற்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாங்கு வங்கியில் சரிவை ஏற்படுத்துவதற்கான காரணங்களில் ஒன்றாகி விட்டது. இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வேறு கட்சிகளின் ஆதரவுடனேயே ஆட்சி அமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் அணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியாக செயற்பட்டு வந்தது. 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களின் போது ஒரு ஆசனத்தைக் கூட பெற முடியாத நிலைக்கு தளப்பட்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற கோரிக்கையுடன் தொடர்ந்தும் பயணித்தது. அவர்களது செயற்பாட்டுக்கு தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கமும் உந்துசக்தியைக் கொடுத்திருந்தது.

மக்கள் எழுச்சியுடன் 'எழுக தமிழ்' நடைபெற்ற போது அதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பங்களிப்பும் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முதன் முறையாகப் போட்டியிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான அதிருப்தியாளர்களை அந்தக் கட்சி தன்வசப்படுத்தியுள்ளது.

குறிப்பாக வடமாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 282 ஆசனங்களைப் பெற்று முதன் நிலையில் உள்ள. தமிழ் தேசிய மக்கள் முன்னணி 90 ஆசனங்களைப் பெற்று தமிழ் தேசிய அரசியலை முன்னகர்த்தும் இரண்டாவது தரப்பாக எழுச்சி பெற்றிருக்கின்றது.

அதிலும் சாவகச்சேரி நகரசபை, பருத்தித்தித்துறை நகரசபை என்பவற்றையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழ்க் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி ஈபிஆர்எல்எப் கூட்டு அமைத்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் வடக்கில் 40 ஆசனங்களைப் பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

'ஏக்கிய ராஜ்ஜிய' என்ற இடைக்கால அறிக்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏகபிரதிநிதிகள் என்ற நிலைமை இப்போது மாறியிருக்கின்றது. தனது வாக்கு வங்கி சரிவுக்கான காரணம் குறித்து ஆராய வேண்டிய தேவை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு குறிப்பாக தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்டிருக்கின்றது. இதன் மூலமே அடுத்து வரும் தேர்தல்களில் தனது சரிவைக் கட்டுப்படுத்த முடியும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான விமர்சனங்களை சாதகமாகப் பயன்படுத்தி தென்னிலங்கை பெரும்பான்மைக் கட்சிகளின் பிரதிநிதிகளாக வடக்கு, கிழக்கில் செயற்படுகின்றவர்கள் தாங்களும் தமிழ் தேசிய இனத்தின் மீது பற்றுள்ளவர்களாகவும், பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிராகவே குரல் கொடுப்பவர்களாகவும் காட்டிக் கொள்வதன் மூலம் வாக்கு வாக்குவங்கியை அதிகரித்துள்ளதையும் தேர்தல் முடிவு எடுத்துக் காட்டுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி வடக்கில் 92 ஆசனங்களையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி 73 ஆசனங்களையும், சிறிலங்கா பொதுஜன பெரமுன 27 ஆசனங்களையும் பெற்றுள்ளன. இந்த நிலைமை, தமிழ் தேசிய அரசியலை முன்னகர்த்தும் தரப்புக்கள் ஒற்றுமையாக தமிழ் மக்களது அபிலாசைகளை அடைவதற்காக ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய அவசியத்தை மீளவலியுறுத்தி இருக்கின்றது. கொள்கை சார் ஒற்றுமையுடன் எந்தவித விட்டுக் கொடுப்புமின்றி தமிழ் மக்களது அபிலாசைகளை அடைவதற்கான தமிழ் தேசிய அரசியலை முன்னகர்த்த தமிழ் தேசியத் தலைமைகள் முன்வர வேண்டும் என்ற செய்தியை மக்கள் தமது வாக்கின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள். இதனை தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே அந்த மக்களின் எதிர்பார்ப்பாகும்.

சிவகிருஷ்ணா


There is 1 Comment

illangargala election kekka vainga ellam koodum thadhpothu yaal nagar illangarala than iruku kaiyil illangargal 5 peyar kaanum maatram ondidku athan kaaranam than tna ku pinnaidaivu ....... varum therthalil vaaipu kudungal illangargaluku....

Add new comment

Or log in with...