ரொஹிங்கிய அகதிகள் மியன்மார் திரும்ப இன்னும் அனுமதியில்லை | தினகரன்

ரொஹிங்கிய அகதிகள் மியன்மார் திரும்ப இன்னும் அனுமதியில்லை

ரொஹிங்கிய அகதிகள் மியன்மாருக்கு செல்ல இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை என்று அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் பிலிப்போ கிராண்டி பாதுகாப்பு சபையிடம் குறிப்பிட்டுள்ளார்.

“668,000 ரொஹிங்கியர்கள் தமது வீட்டுக்கு திரும்ப மியன்மாரின் நிலைமை இன்னும் உகந்ததாக இல்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு ரக்கினேவில் கடந்த ஓகஸ்ட் மாதம் மியன்மார் இராணுவம் ஆரம்பித்த படை நடவடிக்கை ஒன்றை அடுத்தே இந்த அகதிகள் அண்டை நாடான பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றனர்.

“அவர்கள் வெளியேறியதற்கான காரணம் இன்னும் பேசப்படவில்லை, இந்த வெளியேற்றம் மற்றும் கடந்த பல தசாப்தங்களாக ஊடறுத்த உரிமை மறுப்பு, பிரஜா உரிமை மறுக்கப்படுவது தொடர்பான பேச்சுகளில் இன்னும் முன்னேற்றம் காணப்படவில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

ரகினே மாநிலத்தில் மியன்மார் இராணுவத்தால் நூற்றுக்கணக்காக கிராமங்கள் தீவைத்து அழிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஐ.நா அகதிகள் அலுவலகத்திற்கு அங்கு செல்ல முடியாதிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரொஹிங்கிய அகதிகளுக்கு பங்களாதேஷ் அரசு மற்றும் மக்கள் அடைக்கலம் வழங்கியபோதும், மார்ச் மாதம் பருவமழை ஆரம்பிக்கவிருக்கும் நிலையில் அங்கு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று கிராண்டி குறிப்பிட்டுள்ளார்.

கிராண்டி பாதுகாப்பு சபையில் தனது பரிந்துரைகளை முன்வைத்த பின் அங்கு உரையாற்றிய ஐ.நாவின் அமெரிக்க தூதுவர் நிக்கி ஹேலி, மியன்மார் பிரச்சினைக்கு பதில் வழங்குவதில் ஐ.நா தோல்வி கண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.

ரொஹிங்கியர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க தவறிய அமைதிக்கான நோபல் விருது வென்ற அந்நாட்டின் நடைமுறை தலைவி ஆங் சான் சுக்கி மீது ஹேலி குற்றம் சாட்டினார். 


Add new comment

Or log in with...