இஸ்ரேலுக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்க சிரிய அரசு உறுதி | தினகரன்

இஸ்ரேலுக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்க சிரிய அரசு உறுதி

சிரிய நிலத்தில் இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல் நடத்த வந்தால் அது மேலும் அதிர்ச்சியை சந்திக்க வேண்டி ஏற்படும் என்று சிரிய அரசு எச்சரித்துள்ளது. இஸ்ரேலின் மேம்பட்ட போர் விமானம் ஒன்றை சிரியா கடந்த சனிக்கிழமை சுட்டு வீழ்த்திய நிலையிலேயே இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

இஸ்ரேல் எல்லைக்குள் ஈரான் ஆளில்லா விமானத்தை செலுத்தியதாக கூறி சிரியாவில் வான் தாக்குதல் நடத்த சென்ற ஏப்–16 போர் விமானமே சுட்டு வீழ்த்தப்பட்டது. கடந்த ஏழு ஆண்டுகளாக நீடிக்கும் சிரிய உள்நாட்டு யுத்தத்தில் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசுக்கு ஈரான் உதவி வருகிறது.

“ஆக்கிரமிப்பாளர்கள் மிகப் பெரிய அதிர்ச்சியை சந்திப்பார்கள் என்று நான் உறுதியாக இருக்கிறேன். இந்த யுத்தம் பல ஆண்டுகள் நீடிப்பதால் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் இருப்பதாக அவர்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்” என்று சிரிய உதவி வெளியுறவு அமைச்சர் அயிமன் சுசன் குறிப்பிட்டுள்ளார்.

“சிரியா மீது அவர்கள் எப்போது தாக்குதல் நடத்த நினைத்தாலும் இறைவன் நாடினால் அவர்கள் மேலும் அதிர்ச்சியை சந்திப்பார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1982 லெபனான் யுத்தத்திற்கு பின்னர் எதிரிகளின் தாக்குதலில் இஸ்ரேல் தனது போர் விமானத்தை இழந்த முதல் சந்தர்ப்பமாகவே ஏப்–16 விமானம் வீழ்த்தப்பட்டது அமைந்தது. 


Add new comment

Or log in with...