சிரியாவில் அமெரிக்க வான் தாக்குதலில் ரஷ்யர்கள் பலி | தினகரன்

சிரியாவில் அமெரிக்க வான் தாக்குதலில் ரஷ்யர்கள் பலி

 

வடகிழக்கு சிரியாவில் கடந்த வாரம் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது இரு ரஷ்ய போராளிகள் கொல்லப்பட்டதாக அவர்களது சகாக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கூலிப்படையினர் சிரிய அரச துருப்புகளுக்கு ஆதரவாக தனியார் இராணுவ நிறுவனங்களால் அமர்த்தப்பட்டவர்களாவர். இந்த உயிரிழப்புகள் குறித்து ரஷ்யா உறுதி செய்யாத நிலையில் அமெரிக்க ஊடகங்கள் முதல்முறை செய்தி வெளியிட்டிருந்தன.

கடந்த வாரம் நடந்த இந்த வான் தாக்குதலில் 100 க்கும் அதிகமான சிரிய அரச ஆதரவு போராளிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா குறிப்பட்டது. எனினும் கொல்லப்பட்டவர்களில் ரஷ்ய ஒப்பந்ததாரர்கள் இருப்பது குறித்து தமக்கு தகவல் கிடைக்கவில்லை என்று பாதுகாப்பு செயலாளர் ஜிம் மெட்டிஸ் குறிப்பிட்டார். ரஷ்யாவின் விக்னர் என்ற நிறுவனமே இந்த இரு ரஷ்ய போராளிகளையும் பணியில் அமர்த்தி இருப்பதாக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்துக்கு ஆதரவாக 2015 செப்டெம்பர் 30 ஆம் திகதி சிரியாவில் ரஷ்யா இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. இதுவரை 45 ரஷ்ய இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர, ரஷ்யாவின் தனியார் இராணுவ ஒப்பந்ததாரர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர். 


Add new comment

Or log in with...