காதலர் தினத்துக்கு இடமில்லை, கட்டுங்கள் உடனே தாலியை! | தினகரன்

காதலர் தினத்துக்கு இடமில்லை, கட்டுங்கள் உடனே தாலியை!

 

"தாலியை இப்போதே கட்டுகிறீர்களா, இல்லையா" என காதலர்களை நெருக்கடிக்குள்ளாக்கிய, இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. காதலர் தினமான நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காதலர்கள் தங்களின் காதல் ஜோடிகளை சந்தித்து பேசி வந்தார்கள். ஒவ்வொரு ஊரிலும் காதலர்கள் சந்திக்க சில இடங்கள் இருக்கும். சென்னைக்கு மெரீனா பீச் போல, வேலூருக்கு கோட்டை என்பது காதலர்களின் 'புண்ணிய' பூமியாகும்.

புண்பட்ட மனதை இங்குதான் காதலர்கள் புகை போட்டு பழுக்க வைப்பார்கள் என்று ஊர்க்காரர்கள் பெருமையாக சொல்லிக் கொள்ளும் இடம் கோட்டை. நேற்று காதலர் தினம் என்பதால் நூற்றுக்கணக்கான ஜோடிகள் இங்கு வருகை தந்திருந்தன. இந்த நிலையில், காதலர் தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தாலிக் கயிறு மற்றும் மலர் மாலைகளுடன் ஒன்று கூடிய இந்து முன்னணியினர், அந்தக் காதலர்களிடம் கொடுத்து, இப்போதே தாலிகட்டுங்கள் என வற்புறுத்தினர்.

இதனால் பீதியடைந்த காதலர்கள் அங்கிருந்து நழுவினர். இதை எதிர்பார்த்திருந்த பொலிஸார் அங்கே விரைந்தனர். அப்போது பொலிஸார் மற்றும் இந்து முன்னணியினர் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ் தலைமையில் ஒருங்கிணைந்த இந்து முன்னணியினர் பொலிஸாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

பொலிஸார் இந்து முன்னணியினரை கலைந்து செல்லும்படியும், இல்லையென்றால் கைது செய்துவிடுவோம் என்றும் எச்சரித்தனர். அதையும் மீறி காதலர்களுக்கு தொல்லை கொடுத்த இந்து முன்னணியினரை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர் பொலிசார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து இந்து முன்னணியினர் நிருபர்களிடம் கூறுகையில், "பல்லை உடைப்போம், இங்கு என்ன வித்தையா காட்டுகிறீர்கள்" என்று பொலிஸ் ஆய்வாளர் எங்களை மிரட்டினார்.'செருப்பால் அடிப்பேன்' என்று பொலிசார் ஆவேசமாக கூறி வலுக்கட்டாயமாக எங்களை கைது செய்தனர்" என்று தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...