இளைய சமுதாயத்தினரின் உணர்ச்சிகளுடன் வணிக நிறுவனங்களின் விபரீத விளையாட்டு | தினகரன்

இளைய சமுதாயத்தினரின் உணர்ச்சிகளுடன் வணிக நிறுவனங்களின் விபரீத விளையாட்டு

காதலை செயற்கைப்படுத்துவது அழகிய வாழ்வை அசிங்கப்படுத்தும் செயல்

நேற்று எங்கும் இதே பேச்சாக இருந்தது. இளைய சமுதாயத்தினரின் உணர்ச்சிகளோடு விளையாடுவது போலவும் உள்ளது. காதலர் தினத்தை ஆதரிப்பவர்கள் ஒருபுறமும், கடுமையாக எதிர்ப்பவர்கள் மறுபுறமுமாக ஒரு போராட்டக் களமாக மாறியுள்ளது.

எல்லாவற்றையும் வணிகமாக மாற்றி வருகின்ற பன்னாட்டு நிறுவனங்களும், ஊடகங்களும் இது பற்றியே இடைவிடாமல் விளம்பரம் செய்கின்றன. இளைஞர்களையும் தூண்டி விடுகின்றன. எந்த மோசமான பொருளையும் விளம்பரத்தின் மூலமே விற்றுவிடலாம் என்பது அவர்களின் நம்பிக்கை.

காதலர் தினம் என்னும் பெப்ரவரி 14 அறிவிப்பும் அப்படிப்பட்டதுதான். காதலர் தினம் கடைப்பிடிக்கும்படி இளைஞர்களையும், யுவதிகளையும் வற்புறுத்துகின்றனர். இதனால் இளைஞர்கள் தவறான வழிகளில் செல்கின்றனர் என்பதுதான் சில தன்னார்வக் குழுக்களின் எதிர்ப்புக்குக் காரணம்.

காதல் வாழ்க்கை என்பது இயற்கையானது. காதலித்துத் திருமணம் செய்து கொள்வதும், திருமணம் செய்து கொண்டபின் காதலிப்பதும் எங்கும், எப்போதும் நடைமுறை வாழ்க்கையாக இருந்து வருகிறது. இதனைச் செயற்கையாக மாற்றுவது அழகிய வாழ்க்கையை அசிங்கப்படுத்தி விடும்.

பண்டைய தமிழர்கள் சங்க காலங்களில் வாழ்க்கை முறையை அகம் என்றும், புறம் என்றும் பகுத்துக் கொண்டிருந்தனர். ஒத்த அன்புடைய தலைவனும், தலைவியும் ஒன்று கூடித் தாம் துய்த்த இன்பம் இத்தகையது எனப் பிறருக்குப் புலப்படுத்த முடியாததாக விளங்குவது அகம் ஆகும். இத்தகையது என்று பிறருக்கு புலப்படுத்தும் இயல்பு வாய்ந்த பிற உணர்ச்சிகளையும், ஒழுக்கங்களையும் கூறுவது புறம் எனப்படும்.

பொதுவாக அகம் என்பது காதல் வாழ்க்கையையும், புறம் என்பது வீர வாழ்க்கையையும் குறிப்பதாக அறிஞர்களின் ஆய்வு குறிப்பிடுகிறது. இத்தகைய பாகுபாடு தமிழ் மொழியில் மட்டும்தான் காணப்படுவதாக செவ்வியல் அறிஞர்கள் கூறுகின்றனர். இதனை அகத்திணை என்றும், புறத்திணை என்றும் கூறுவர். திணை என்பது ஒழுக்கமாகும்.

புறத்திணை எனப்படும் வீரம் ஆண் மக்களுக்கே உரியது;ஆனால் அகத்திணை என்னும் காதல் ஆண், பெண் வேறுபாடு கடந்து அனைவருக்கும் உரியது. உயர்திணைக்கு மட்டுமல்லாமல் அஃறிணைகளுக்கும் பொதுவானதாகும்.

'எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்' என்பது தொல்காப்பியக் கூற்றாகும்.

இந்தக் காதல் வாழ்க்கையே உயிர்கள் பிறந்ததற்கும், பிறப்பிப்பதற்கும் அடிப்படையானது. அது ஆதி மனிதர்களாகக் குறிப்பிடப்படும் ஆதாம் ஏவாள் காலம் முதல் தொடர்ந்து வருகிறது. இது உயிர்களின் இயற்கைப் பண்பாகும்.

ஆய கலைகள் அறுபத்து நான்கனுள் காதல் என்பதும் ஒரு கலையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை என்பது ஒரு பழங்கூற்று. காலை அரும்பி பகல்எல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய் என்கிறது குறளில் காமத்துப்பால். இந்த இயற்கைப் பண்பை செயற்கையாக்கித் தெருவுக்கு வருவதால்தான் எதிர்ப்பு ஏற்படுகிறது. தேவையற்ற பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது.

தமிழ்த் திரைப்படங்களில் வரும் காதல் காட்சிகள் எல்லாம் இளைஞர்களுக்குத் தவறான புரிதலையே தருகின்றன. அவை பெரும்பாலும் ஒருதலைக் காதலையே உண்மைக் காதல் போல ஊருக்கும், உலகுக்கும் காட்டுகின்றன.

காதல் என்பது ஒருவனும் ஒருத்தியும் யாருக்கும் தெரியாமல் தனிமையில் சந்தித்து மனதிற்குள் விரும்பி, அரும்பி, வளர்ந்து முதிர்ச்சியடையும். கண்டதும் காதல் என்பது திரைப்படத்தில்தான் நடக்கும்.

கதையின் நாயகனாக வருகிறவன் கதாநாயகியை வழிமறித்து மடக்கி, ஐ லவ் யூ சொல்லச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறான். அவனுடைய நண்பர்கள் கூட்டம் அதற்குத் துணை செய்கின்றது. பொதுவிடத்தில் அடாவடியிலும், அடிதடியிலும் ஈடுபடுகின்றது.

இதனை உண்மையென நம்பிடும் இருபால் இளைஞர் கூட்டம் காதல் என்னும் சொல்லுக்கு மயங்கி, தங்கள் படிப்பையும், வாழ்வையும் பாழாக்கிக் கொள்கின்றனர்.

காதலர் தினம் என்னும் பெயரால் மதுவைக் குடித்துவிட்டுக் கும்மாளம் போடுவதும், தங்களையே இழந்துவிட்டுப் பின்னர் தவிப்பதும், தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாகின்றன.

இதனால்தான் அறிஞர் காண்டேகர், 'காதல் என்பது கானல் நீர். பைத்தியம் பிடித்த மான்கள் அதன் பின்னே ஓடி வயிறு வீங்கிச் சாகின்றன' என்று கூறினார்.

காதலைப் பற்றிய அறிஞர்களின் அனுபவம் பலவகைப்படும். அவர்களின் விளக்கங்களும் அப்படித்தான். அந்த அனுபவம் அவர்களுக்கு மட்டுமல்ல, உலகில் ஒவ்வொரு மனிதரும் வெவ்வேறான அனுபவங்களைப் பெற்றிருப்பார்கள்.

காதல் என்பது அன்பின் பெருக்கம். அன்பைவிடச் சிறந்த உணர்வு வேறு எதுவும் இருக்க முடியாது. அதனால்தான் அன்பிற்கு அடைக்கும் தாழ்ப்பாள் கிடையாது என்று குறள் கூறுகிறது.

அன்புடையவர்களின் கண்களில் கசியும் கண்ணீரே அன்பைப் புலப்படுத்தும் என்பது அவர் கருத்து.

சிலருடைய அனுபவம் இதற்கு எதிர்மாறாகவும் இருக்கலாம்.

இளைஞர்கள் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் அறிவுக்கே முதலிடம் கொடுக்க வேண்டும்.

கிடைத்தற்கரிய மானிடப் பிறவியை வாழ்ந்து காட்ட வேண்டும். நம்மை உருவாக்கிய பெற்றோருக்கும், சமுதாயத்துக்கும் உள்ள கடமையையும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். இப்போது கருத்தும் இல்லை என்னும் நிலை நோக்கி உலகம் போய்க் கொண்டிருக்கிறது. சமுதாய சிந்தனையுள்ள புதிய தலைமுறையினர் இதனை மாற்றியமைக்க வேண்டும்.

 

 


Add new comment

Or log in with...