மதங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்த சதி முயற்சி | தினகரன்

மதங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்த சதி முயற்சி

மன்னார் மாவட்டத்தில் அண்மைக் காலமாக இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்படுகின்ற சம்பவங்கள் மாவட்டத்தில் மதங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் சதி நடவடிக்கையாக உள்ளதாகவும், குறித்த சம்பவங்களை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக அவர் நேற்று (14) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,

மன்னார் மாவட்டத்தில் சர்வமதங்களுக்கு இடையில் ஒற்றுமை காணப்படுகின்றது.கடந்த சில மாதங்களுக்கு முன் தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கத்தோளிக்கர்கள் மற்றும் இந்துக்களின் வணக்கச் சிலைகள் மாறி மாறி உடைக்கப்பட்டு வந்தது.குறித்த சம்பவங்கள் மதங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் செயலாக காணப்படுகின்றது.

மேலும் இந்து மக்கள் உணர்வோடு அனுஷ்டிக்கும் சிவராத்திரி தினத்தில் மன்னாரில் பல்வேறு இடங்களில் ஆலய விக்கிரகங்களை உடைத்தும், களவாடிச் சென்றும் இந்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சம்பவங்களை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்பட்டும், களவாடிச் செல்லப்படுகின்ற சம்பவங்கள் தொடராத வகையில் பொலிஸாரும்,உரிய அதிகாரிகளும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் சர்வ மதங்களுக்கிடையில் உள்ள ஒற்றுமையினை கொச்சைப்படுத்தும் வகையில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.எனவே குறித்த சம்பவங்களை வன்மையாக கண்டிக்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்.றொசேரியன் லெம்பேட்

 


Add new comment

Or log in with...