யாழ்.மேயராக ஆர்னோல்ட் ; பிரதி மேயராக ஈசன் | தினகரன்

யாழ்.மேயராக ஆர்னோல்ட் ; பிரதி மேயராக ஈசன்

தமிழ்க் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி, த.தே.முன்னணி கட்சிகள் இணைந்து கூட்டாட்சி

யாழ்.மாநகர சபையின் மேயராக இம்மானுவேல் ஆர்னோல்டையும் பிரதி மேயராக துரைராசா ஈசனையும் நியமிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. எந்தவொரு கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாத சூழ்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி மற்றும் தமிழ்த் தேசிய முன்னணி ஆகியவற்றின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகி மேயர் வேட்பாளராக போட்டியிட்ட ஆர்னோல்டை மேயராக நியமிப்பதற்கும், கூட்டமைப்பில் பங்காளிக் கட்சியான புளொட்டின் உறுப்பினர் துரைராசா ஈசனை பிரதி மேயராக நியமிப்பதற்கும் தமிழரசுக் கட்சியும் பங்காளிக் கட்சிகளும் தீர்மானித்துள்ளன.

யாழ் .மாநகர சபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் ஆராயும் சந்திப்பொன்று யாழ். மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலொவின் செயலாளர் என்.சிறிகாந்தா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கைத் தமிழரசு கட்சியின் சார்பாக மாநகர மேயராக ஆர்னோல்டை நியமிக்கவும், ரெலோ சார்பில் பிரதி மேயராக து.ஈசனை நியமிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஏகமனதாக எடுக்கப்பட்ட இத்தீர்மானத்துக்கு ஏனைய உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். எதிர்வரும் 2 வாரங்களில் இருவரும் உத்தியோகபூர்வமாகப் பதவிகளை ஏற்றுக்கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவில்லை. இரு கட்சிகளின் அறிக்கையின் பிரகாரம் மாநகரசபையில் ஆட்சியமைக்க இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசு கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

"நாம் எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவில்லை. நாம் சொல்லியிருந்த அந்த முறையை ஏற்றுக்கொண்ட பல நடுநிலையாளர்கள் வேறுகட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கின்றார்கள். அதன் பிரதிபலனாகவோ என்னவோ, யாழ்.மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் இரு கட்சிகள் தாமும் அதே நிலைப்பாட்டில் இருப்பதாக அறிக்கைகள் விடுத்துள்ளார்கள். அது வரவேற்கத்தக்கது" என்றார்.

இவ்வாறானதொரு சுமுக சூழலில் எந்தவித தடையுமின்றி அனைத்து சபைகளுக்குமான நிர்வாகம் உருவாக்கப்படுமென்று எதிர்பார்க்கின்றோம். மாநகர சபையில் கூடுதலாக எண்ணிக்கை கொண்ட கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே ஆட்சியமைக்க முடியும். எமது யோசனையினை முன்வைத்த பின்னர், இது நல்ல யோசனை எதிர், நடுநிலையாளர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றைய இரு கட்சிகளுடனும் பேசியது எமக்குத் தெரியும்.

ஆதன் பிரதிபலனாகத் தான் ஏனைய இரு கட்சிகளும், அவ்வாறான நிலைப்பாட்டிற்கு வந்துள்ளார்கள் போன்று தோன்றுகின்றது.

நடுநிலையாளர்கள் எம்மோடும் அது தொடர்பில் பேசியிருக்கின்றார்கள். பொது இணக்கப்பாட்டிற்கு வருவதைப் போன்று தோன்கின்றது. ஆவ்வாறு இல்லாமல், சபைகளை அமைப்பதும், வேலை செய்வதும், கடினமானதாக இருக்கும் ஆகையினால், பொறுப்போடு அனைத்துக் கட்சியினரும் செயற்படுவார்கள் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

  

 


Add new comment

Or log in with...