Home » அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கு நடவடிக்கை எடுக்கவும்

அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கு நடவடிக்கை எடுக்கவும்

விவசாய அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்புரை

by damith
November 7, 2023 6:00 am 0 comment

அரிசி உற்பத்தியில் நாடு, தன்னிறைவு அடையும் வகையில் அடுத்த ஆறு பயிர் காலங்களில் நெற்செய்கையை இரட்டிப்பாக்கத் தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விவசாய அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நெல் உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்துள்ள நிலையிலுங்கூட, நாடளாவிய ரீதியில் உள்ள சகல மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான நெல் அறுவடையை பெற முடியவில்லை. நாட்டில், நெல்லின் சராசரி விளைச்சல் ஹெக்டேருக்கு 2.5 முதல் 4.5 மெட்ரிக் தொன் நெல் வரை மாறுபடும். மேலும், தென்கிழக்கு ஆசியாவிலேயே ஒரு ஹெக்டேருக்கு அதிக நெல் விளைச்சல் என நாட்டின் சில மாவட்டங்களிலுள்ள விவசாயிகள் 11 மெட்ரிக் தொன்கள் வரை பதிவு செய்துள்ளனர். நாட்டின் நெற்செய்கையின் விளைச்சலை அதிகரிப்பதுடன், அரிசியின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் இலங்கை அரிசிக்கான சர்வதேச தேவையை உயர்வாக பேணுவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.எனவே, விவசாயிகளுக்கு நெல் விளைச்சலை அதிகரிக்க புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் அதேவேளை, விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இதற்குத் தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அரசாங்கம் வழங்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தற்போது இலங்கையில் நெல் வயல்களின் எண்ணிக்கை 800,000 ஹெக்டேர்களாகும். இரண்டு பருவங்களில் பயிரிடப்படும் நெல்லின் அளவு ஆண்டுக்கு 1.3 மில்லியன் ஹெக்டேயராகும். நெல்லின் மொத்த விளைச்சல் சுமார் 5.2 மில்லியன் மெட்ரிக் தொன்னாக உள்ளது. இதனால்,உற்பத்தி செய்யக்கூடிய அரிசியின் அளவு 3.1 மில்லியன் மெட்ரிக் தொன் ஆகும். அதேவேளை 2.4 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசி நாட்டில் வருடாந்தம் நுகர்வுக்கு தேவைப்படுகிறது. நாட்டில் போதியளவு அரிசியிருந்த போதிலும், அரசாங்கத்தின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, குறைந்த விலையில் அரிசியை பெறுவதற்கு இடமளிப்பது அவசியம். இந்நோக்கில் அரிசி உற்பத்தியை அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்காகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT