Friday, March 29, 2024
Home » ‘டைம் அவுட்’ முறையில் ஆட்டமிழந்தார் மத்தியூஸ்
சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறை

‘டைம் அவுட்’ முறையில் ஆட்டமிழந்தார் மத்தியூஸ்

by damith
November 7, 2023 9:26 am 0 comment

ஐ.சி.சி போட்டி விதிகளின்படி இரண்டு நிமிடங்களுக்குள் முதல் பந்துக்கு முகம்கொடுக்காததால் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக அஞ்சலோ மத்தியூஸ் ஒரு பந்துக்குக் கூட முகம்கொடுக்காமல் ‘டைம் அவுட்’ முறையில் ஆட்டமிழந்தார்.

பங்களாதேஷுக்கு எதிராக டெல்லி, வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற உலகக் கிண்ண லீக் போட்டியில் மத்தியூஸ் ஆறாவது வீரராக துடுப்பெடுத்தாட ஆடுகளம் வந்தபோது துடுப்பெடுத்தாடும் முன்னரே தலைக் கவசத்தை மாற்ற முயன்றார்.

ஷகீப் அல் ஹசனின் பந்துக்கு துடுப்பெடுத்தாடுவதற்கு தனது தலைக் கவசத்தை சரிசெய்யும்போது அதன் பட்டி அறுந்தது. இந்தத் தருணத்தில் துடுப்பாட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய 2 நிமிடங்களும் கிட்டத்தட்ட முடிந்திருந்தது.

எனினும் சாமிக்க கருணாரத்ன மாற்று தலைக்கவசத்தை எடுத்துவரும்போது ஷகீப் ஆட்டமிழப்புப் பற்றி நடுவரிடம் கோரியதை அடுத்து நடுவர் மரைஸ் எரஸ்முஸ், மத்தியூஸுக்கு ஆட்டமிழப்பை வழங்கினார்.

ஆரம்பத்தில் மத்தியூஸ் இதனை நகைச்சுவையாக கருதியபோதும், உண்மையை அறிந்ததை அடுத்து நடுவருடன் நீண்ட விவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து கோபத்தில் வெளியேறி அவர் தனது தலைக்கவசத்தை பெளண்டரி ஓரத்தில் வீசிவிட்டுச் சென்றார்.

இதன்போது நடுவர், ஷகீபிடம் தமது முறைப்பாட்டை வாபஸ் பெறுவது தொடர்பில் கோரிக்கை விடுத்தபோதும், மத்தியூஸ் அவருடன் பேசியபோதும் அவர் அதனை வாபஸ் பெறவில்லை.

இலங்கை அணி 24.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை பெற்றிருந்தபோதே இந்த ஆட்டமிழப்பு நிகழ்ந்தது.

கிரிக்கெட் விதிகளின்படி ஒரு விக்கெட் வீழ்த்தப்பட்டு அல்லது துடுப்பாட்ட வீரர் காயத்தில் வெளியேறிய பின் அடுத்து வரும் வீரர் இரண்டு நிமிடத்துக்குள் பந்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்தர கிரிக்கெட்டில் 6 முறை டைம் அவுட் முறையில் ஆட்டமிழப்புகள் இடம்பெற்றிருந்தபோதும் சர்வதேச கிரிக்கெட்டில் இது தான் முதல் முறை.

சரித் அசலங்கவின் சதத்துடன் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் 279 ஓட்டங்களை பெற்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT