தனி அரசு அமைக்க ஐ.தே.க எம்.பிக்கள் பிரதமரிடம் வலியுறுத்து | தினகரன்

தனி அரசு அமைக்க ஐ.தே.க எம்.பிக்கள் பிரதமரிடம் வலியுறுத்து

"தேசிய அரசினால் முக்கிய தீர்மானங்களை எடுக்க முடியாமல் போனதாகவும் சுட்டிக்காட்டு"

தனித்து அரசாங்கம் ஒன்றை அமைப்பதே சிறந்தது என ஐ.தே.க.விலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐ.தே.கட்சி தனியானதொரு அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் அதற்கு அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்தி அதற்கான தீர்மானத்தை அறிவிப்பதாக தம்மிடம் கூறியதாகவும் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசிய அரசாங்கம் காரணமாக நாட்டின் முக்கியமான தீர்மானங்களை முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும் இம்முறை தேர்தல் முடிவிற்கிணங்க நாட்டு மக்கள் ஐ.தே.கட்சியில் தனியானதொரு அரசாங்கத்தையே எதிர்பார்ப்பதாகவும் அதற்கான செய்தியே இந்த தேர்தல் முடிவின் ஊடாக வெளிப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். நேற்றைய தினம் அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் ஐ.தே.கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர். நளீன் பண்டார, வசந்த திஸாநாயக்க, காவிந்த ஜயவர்தன, ஹெக்டர் ஹப்புஹாமி, துசார இந்துனில் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவே மேற்படி கருத்துக்களை தெரிவித்தன. இவர்கள் ஐ.தே.க. தனி அரசாங்கம் அமைப்பதே தற்போது நாட்டின் முக்கிய தேவையாக உள்ளது என்றும் கட்சிக்குள் நிலவும் மாற்றங்கள் தொடர்பில் பின்னர் கவனித்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஐ.தே.கட்சியானது தனி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது. விரும்புபவர்கள் எம்முடன் இணைந்து கொள்ளலாம். ஸ்ரீல.சு.கட்சியில் இருந்து ஒரு தரப்பினர் எம்மோடு இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். நாட்டு மக்கள் எமக்கு சிறந்த சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளனர். அதனாலேயே நாம் தனி அரசாங்கத்தை அமைக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அவர் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி சிறந்த தீர்மானமொன்றை வழங்குவார். இம்முறை தேர்தல் முடிவானது ஐ.தே.கட்சியினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவர்கள் நீதியை நிலைநாட்டுவதற்காக அரசாங்கமொன்றை அமைக்க எதிர்பார்த்திருக்கின்றனர். முதலில் அரசாங்கத்தை அமைத்துவிட்டு அதில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் தொடர்பில் கவனமெடுக்கலாம்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை பாரமெடுப்பதற்கு தயார் இல்லை என்று தெரிவித்திருந்தார். நாட்டை மோசமான நிலைக்கு தள்ள முடியாது. ஐ.தே.கட்சியினரின் வேண்டுகோள் ஐ.தே.க. அரசாங்கமொன்றை அமைப்பதே. கடந்த இரண்டு வருடங்களாக நாம் முன்னேற்றகரமான பயணத்தை முன்னெடுக்க முடியாததன் காரணம் தேசிய அரசாங்கமே. நாட்டிற்கு சேவையாற்றுவதோடு கட்சியினரையும் பலப்படுத்துவதே எமது நோக்கமாகும். கடந்த 2 ½ வருடங்களாக அது இடம்பெறாததனாலேயே அவர்கள் எதிர்தரப்பினருக்கு ஆதரவளித்துள்ளனர் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். (ஸ) 


Add new comment

Or log in with...