Friday, March 29, 2024
Home » போர் நிறுத்த அழைப்புகளுக்கு மத்தியில் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் தீவிரம்

போர் நிறுத்த அழைப்புகளுக்கு மத்தியில் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் தீவிரம்

by damith
November 7, 2023 6:00 am 0 comment

போர் நிறுத்தத்திற்கான அழுத்தங்களை பொருட்படுத்தாத இஸ்ரேல் காசா மீதும் தொடர்ந்து உக்கிர வான் தாக்குதல்களை நடத்தி வருவதோடு அதன் தரைப்படை பலஸ்தீன போராளிகளுடன் சண்டையிட்டு வருகிறது.

சனநெரிசல் மிக்க காசாவில் இஸ்ரேலிய துருப்புகள் ஹமாஸ் போராளிகளுடன் வீடு வீடாக சண்டையிட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் ஏற்கனவே 1.5 மில்லின் மக்கள் பாதுகாப்புத் தேடி வீடுகளில் இருந்து வெளியேறி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசா நகரை சுற்றிவளைத்ததாக குறிப்பிட்டிருக்கும் இஸ்ரேல் இராணுவம், முற்றுகையில் உள்ள காசாவை இரண்டாக பிரித்திருப்பதாக தெரிவித்துள்ளது. “அது வடக்கு காசா மற்றும் தெற்கு காசா என்று மாறியுள்ளது” என்று இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் டானி ஹகரி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார். ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலிய போரில் இது முக்கியமான கட்டம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இஸ்ரேலிய துருப்புகள் அடுத்த 48 மணி நேரத்திற்குள் காசா நகருக்குள் நுழையும் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் இஸ்ரேலிய துருப்புகள் பலஸ்தீன போராளிகளிடம் இருந்து தொடர்ந்தும் கடும் எதிர்ப்பை சந்தித்தித்து வருகின்றன. சுரங்க பாதைகளில் மறைந்து போராளிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இஸ்ரேலின் மற்றொரு வீரர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் இராணுவம் நேற்று உறுதி செய்தது. கவசப் படையின் 9ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக அது கூறியது.

இதன்படி இஸ்ரேல் காசாவில் தரை நடவடிக்கையை ஆரம்பித்தது தொடக்கம் கொல்லப்பட்ட இஸ்ரேலிய வீரர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது.

காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல் ஆரம்பித்தது தொடக்கம் கடந்த 24 மணி நேரத்தில் வான், தரை மற்றும் கடல் மார்க்கமாக தாக்குதல் உச்சம் பெற்றிருந்ததாக அங்கிருக்கும் ரோய்ட்டர்ஸ் செய்தியாளர் ஒருவர் விபரித்துள்ளார்.

இந்த உக்கிர தாக்குதல்களுக்கு முன்னதாக காசாவில் இணையதளம் மற்றும் தொலைபேசி இணைப்புகள் மீண்டும் ஒரு முறை துண்டிக்கப்பட்டன. இதனால் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும் ஸ்தம்பித்தன. காசா நகர் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை இலக்கு வைத்தே பெரும்பாலான தாக்குதல்கள் இடம்பெற்றன. இதில் இந்தோனேசிய மருத்துவமனை மற்றும் ஜபலியா அகதி முகாமுக்கு அருகிலும் தாக்குதல்கள் இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய காசாவில் இருக்கும் இரு அகதி முகாம்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டதோடு மகாசி அகதி முகாமில் நடத்திய தாக்குதலில் மேலும் 40 பொதுமக்கள் பலியாகினர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 200 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்தது தொடக்கம் காசாவில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 9,922 ஆக உயர்ந்துள்ளது.

போர் நிறுத்தம்

உயிரிழப்புகள் அதிகரிக்கும் சூழலில் சர்வதேச கவலையும் அதிகரித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து வெளியிட்ட கூட்டு அறிவிப்பில், காசாவில் பொதுக்களின் உயிரிழப்புகள் குறித்து கோபத்தை வெளியிட்டதோடு, உடன் மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தது.

“சுமார் ஒரு மாதமாக, இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பிரதேசத்தில் நிகழ்ந்து வரும் நிலைமையை உலகம் அதிர்ச்சி மற்றும் திகிலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் யுனிசெப், உலக உணவுத் திட்டம் மற்றும் உலக சுகாதார அமைப்பு உட்பட நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளடங்குகின்றனர்.

“எமக்கு அவசர மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்று தேவை. இப்போது 30 நாட்களாகிறது. இது போதும். நிறுத்தப்பட வேண்டும்” என்று அரிதாக வெளியிடப்பட்ட இந்த கூட்டு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும் போர் நிறுத்தம் ஒன்றை இஸ்ரேல் தொடர்ந்து மறுத்து வருகிறது. மத்திய கிழக்கிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கனிடம் அரபுத் தலைவர்கள் அவசர போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழுத்தம் கொடுத்திருந்தனர். ஆரம்பத்தில் இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்ட அவர் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை, ஜோர்தான், ஈராக், சைப்ரஸ் மற்றும் துருக்கிக்கும் பயணித்தார்.

துருக்கி இஸ்ரேலுக்கான தனது தூதுவரை திரும்ப அழைத்து பென்ஜமின் நெதன்யாகுவுடனான தொடர்புகளை துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் துண்டித்திருக்கும் நிலையிலேயே பிளிங்கன் நேற்று துருக்கி சென்றிருத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் போர் நிறுத்தம் ஒன்று பற்றி அமெரிக்கா உறுதியான நிலைபாடு எதனையும் வெளியிடவில்லை. போர் நிறுத்தம் ஹமாஸ் அமைப்புக்கு சாதகமாக அமையக் கூடும் என்று அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது.

எனினும் நெதன்யாகு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதோடு, “பணயக்கைதிகள் திரும்பும் வரை போர் நிறுத்தம் ஒன்று இல்லை” என்று நெதன்யாகு உறுதி அளித்துள்ளார்.

இஸ்ரேலிய துருப்புகளிடம் கடந்த ஞாயிறன்று பேசிய நெதன்யாகு, “தமது அகராதியில் இருந்து இதனை (போர் நிறுத்தம்) அவர்கள் நீக்க வேண்டும். எமது நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் இதனை கூறிக்கொள்கிறோம்” என்றார். “நாம் வெற்றிபெறும் வரை முன்னேறுவோம். எமக்கு மாற்று வழி இல்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

தெற்கு செல்ல அழுத்தம்

அகதி முகாம்கள் பிரதான நீர் மூலங்கள் தாக்கப்படுவதன் மூலம் வடக்கில் உள்ள மக்கள் வாழ முடியாத சூழலை ஏற்படுத்த இஸ்ரேல் முயல்வதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர். வடக்கில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களை தெற்கு காசாவுக்கு செல்லும்படி இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது தெற்கு காசா மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதேபோன்று வடக்கு மற்றும் தெற்கிற்கான வீதி இணைப்புகளையும் அது அழித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜோர்தான் விமானப்படை காசாவுக்குத் தேவையான மருத்துவ விநியோகங்களை வான் வழியாக வழங்கியுள்ளது. காசாவில் காயமடைந்திருக்கும் சகோதரர்களுக்கு உதவுவது தமது பொறுப்பாகும் என்று ஜோர்தான் மன்னர் இரண்டாவது அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.

தமது நட்பு நாடான ஜோர்தானுடனான ஒருங்கிணைப்பில் இந்த உதவிகள் வானில் இருந்து வழங்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

காசாவில் இஸ்ரேல் முழுமையான முற்றுகையை செயற்படுத்தி இருக்கும் நிலையில், அங்கு உணவு, எரிபொருள் மற்றும் நீர் விநியோகங்கள் தீர்ந்து வருகின்றன.

காசாவில் இதுவரை 200,000க்கும் அதிகமான குடியிருப்பு கட்டடங்கள் தகர்க்கப்பட்டிருப்பதோடு அது காசாவின் மொத்த குடியிருப்புப் பகுதிகளில் 50 வீதம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தவிர பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தில் 42 கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் காசாவில் சராசரிப் பலஸ்தீனர் ஒரு நாளைக்கு வெறும் 2 ரொட்டித் துண்டுகளை உண்டு வாழ்ந்துவருவதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எகிப்திலிருந்து ராஃபா எல்லை வழியாக நாளொன்றுக்குச் சராசரியாக 30 லொறிகள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த லொறிகளில் மருந்து, உணவு, தண்ணீர் ஆகியவற்றுடன் மற்ற அத்தியாவசியப் பொருட்களும் கொண்டுசெல்லப்படுகின்றன. ஆனால் எரிபொருளைக் கொண்டுசெல்ல அனுமதியில்லை.

போர் ஆரம்பிப்பதற்கு முன் காசா வட்டாரத்துக்குள் அன்றாடம் சுமார் 500 லொறிகள் நுழைவது வழக்கம்.

இதற்கிடையே ராஃபா எல்லை வழியாகக் காசாவிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

காசாவுக்கு அப்பால் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் மூன்று குழந்தைகள் மற்றும் அவர்களின் பாட்டி கொல்லப்பட்டதாக லெபனான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் ஐக்கிய நாடுகளிடம் முறையிடப்போவதாக லெபனான் வெளியுறவு அமைச்சர் அப்துல்லாஹ் பவு ஹபிப் தெரிவித்துள்ளார்.

இதில் எட்டு தொடக்கம் 14 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களே கொல்லப்பட்டதாக இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பின்த் ஜிபைல் பகுதியைச் சேர்ந்த ஹிஸ்புல்லா பாராளுமன்ற உறுப்பினரான அப்துல்லாஹ் பவு ஹபீப் தெரிவித்துள்ளார். “பொதுமக்களுக்கு எதிரான குற்றத்திற்காக எதிரிகள் விலைகொடுப்பார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

காசாவில் போர் வெடித்தது தொடக்கம் இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையே பரஸ்பரம் தாக்குதல் இடம்பெற்று வருகின்றன. மேற்குக் கரையிலும் பதற்றம் நீடிப்பதோடு நேற்றும் ஒரு பலஸ்தீனர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் கடந்த ஒக்டோபர் 7 தொடக்கம் அங்கு கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 154 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT