Thursday, March 28, 2024
Home » நீரிழிவு விடயத்தில் அலட்சியம் கூடாது!

நீரிழிவு விடயத்தில் அலட்சியம் கூடாது!

by damith
November 7, 2023 6:00 am 0 comment

தெற்காசியாவில் எழுத்தறிவைப் பெற்றவர்கள் அதிகம் வாழும் நாடாக விளங்குகிறது இலங்கை. அத்தோடு உயர்தரத்திலான சிறந்த சுகாதார சேவையைப் பெற்றுக்கொள்ளக் கூடிய நாடாகவும் திகழ்கின்றது. இந்நாட்டில் நடைமுறையில் இருக்கும் இலவச சுகாதார சேவையும் இலவசக் கல்விக் கொள்கையும் இதற்கு பாரிய பங்களிப்பு நல்கி வருகின்றன.

இந்த இரண்டு சேவைகளும் இந்நாட்டு மக்களுக்கு முற்றிலும் இலவசமாக கிடைக்கப்பெற்று வருவதால், பலவிதமான அடைவுகளையும் பிரதிபலன்களையும் நாடும் மக்கள் அடைந்து கொண்டிருக்கின்றனர். அவற்றில் போலியோ உள்ளிட்ட பல தொற்றுநோய்களும், மலேரியா, யானைக்கால் நோய் போன்றனவும் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அத்தோடு எதிர்பார்க்கப்படும் உயிர்வாழும் ஆயுட்காலம் பெரிதும் அதிகரித்துக் காணப்படுவதும் இவற்றின் பிரதிபலனே அன்றி வேறில்லை.

அண்மைக் காலத்தில் இந்நாட்டினரின் நடத்தையிலும் உணவுப் பழக்கவழக்கங்களிலும் பெரிதும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பெரும்பாலானவரின் வாழ்க்கையமைப்பு பரபரப்பாக மாற்றமடைந்திருப்பதும், உடலுழைப்பில் போதியளவில் ஈடுபடாமையும் உணவுப் பழக்கவழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கவையாகும்.

இவற்றின் விளைவாக உடல், உள ரீதியில் பல தாக்கங்களுக்கும் பாதிப்புகளுக்கும் முகம்கொடுக்கும் நிலைக்கு இந்நாட்டு மக்கள் உள்ளாகியுள்ளனர். அவற்றில் இதயநோய்கள், புற்றுநோய்கள், சிறுநீரக நோய்கள் மற்றும் நீரிழிவு போன்ற தொற்றாநோய்கள் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன. அந்நோய்களுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையில் பெரிதும் அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது. அதிலும் நீரிழிவு பாதிப்புக்கு ஆண் பெண் வேறுபாடோ, வயது வித்தியாசமோ கிடையாது. இந்நோய் எல்லா மட்டத்தினர் மத்தியிலும் அதிகரித்துக் காணப்படுகிறது. இதற்கு ‘நடத்தை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே முக்கிய காரணம்’ என்று மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை அகச்சுரப்பிகள் மருத்துவ நிபுணர்கள் கல்லூரி மேற்கொண்ட ஆய்வொன்றில் நீரிழிவு தொடர்பில் அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இந்நாட்டில் 23 வீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அதேநேரம் உலகில் நீரிழிவு நோய்க்கு உள்ளானவர்கள் அதிகளவில் காணப்படும் முதல் பத்து நாடுகளில் ஒன்றாக இலங்கையும் காணப்படுவதாக அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் நீரிழிவு தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட பேராசிரியர் டொக்டர் பிரசாத் கட்டுலந்த, ‘இந்நாட்டில் நீரிழிவு நோயினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2006 இல் நடத்தப்பட்ட ஆய்வில் நாட்டின் மொத்த சனத்தொகையில் 10 வீதமானோர் இந்நோய்க்கு உள்ளாகி இருப்பதாகத் தெரியவந்தது. அவர்களில் பெரும்பகுதியினர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ஆனால் தற்போது இது பெரிதும் அதிகரித்துள்ளது’ என்று அவர் கூறியுள்ளார்.

நீரிழிவானது முன்னொரு போதுமே இப்போது போன்ற அதிகரிப்பை இந்நாட்டில் அடைந்ததில்லை. இது மருத்துவ துறையினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினரின் அவதானத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது.

நீரிழிவு ஒரு தொற்றுநோய் அல்ல. என்றாலும் இதன் பாதிப்புகளும் தாக்கங்களும் மிகவும் பாரதூரமானவை. அதிக தாக்கம் கொண்டவை. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மரணங்களுக்கு துணைபுரிவதில் நீரிழிவு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இது உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள உண்மையாகும்.

உடலில் இயல்பாகவே இன்சுலின் சுரப்பதில் ஏற்படும் பலவீனங்களின் விளைவாகவே நீரிழிவு நோய் ஏற்படக் காரணமாக அமைகிறது. உடலின் உள்ளுறுப்புக்களை மெல்ல மெல்ல பாதிக்கச் செய்யும் இந்நோய், வெளியுறுப்புக்களையும் தாக்கக்கூடியது என்பதை மறந்து விடலாகாது. குறிப்பாக சிறுநீரகம், இதயம், கண்பார்வை நரம்புகள் என்பன மாத்திரமல்லாமல் கால், கைகளின் விரல்கள் மரத்துப் போதல் போன்றவாறான பாதிப்புக்கள் ஏற்படலாம்,

நடத்தை மற்றும் உணவுப் பழக்கவழக்கத்தை ஆரோக்கியத்திற்கு ஏற்ற முறையில் பேணிக் கொள்ளும் போது இந்நோயைத் தவிர்த்துக் கொள்ளலாம். அதேநேரம் இந்நோய்க்கு உள்ளானவர்கள் உரிய மருத்துவ ஆலோசனைகளுடன் சிகிச்சை பெற்றுக்கொள்ளும் போது இந்நோயைக் கட்டுப்பாட்டு நிலையில் வைத்துக்கொள்ள முடியும். அத்தோடு மருத்துவ ஆலோசனைகளுடன் நடத்தை மற்றும் உணவுப் பழக்கவழக்கத்தையும் ஆரோக்கியத்திற்கு ஏற்ப சீரமைத்துக் கொள்ளவும் தவறலாகாது. அப்போது நீரிழிவு ஒரு அச்சுறுத்தலாகவே இருக்கப் போவதில்லை.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT