ஐ.நாவின் நிலுவையை செலுத்த முடியாமல் தடுமாறும் வடகொரியா | தினகரன்

ஐ.நாவின் நிலுவையை செலுத்த முடியாமல் தடுமாறும் வடகொரியா

வங்கி தடைகள் காரணமாக ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை செலுத்த முடியவில்லை என்று வட கொரியா குறிப்பிட்டுள்ளது.

இந்த பணத்தை பெறுவது குறித்து ஐ.நா தலைமை முகாமையாளர் ஐ.நாவுக்கான வட கொரிய தூதுவர் ஜா சொங் நாம்மை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

வட கொரியா ஐ.நாவுக்கு வழங்க வேண்டிய சுமார் 121,500 டொலரை வங்கிகள் ஊடே பரிமாற்றம் செய்ய முடியவில்லை என்று வட கொரியா குறிப்பிட்டுள்ளது. வட கொரியாவின் நிதி பரிமாற்றங்களைக் கையாளும் அதன் வெளிநாட்டு வர்த்தக வங்கிக்கு எதிராக கடந்த ஓகஸ்ட் மாதம் தடைகள் விதிக்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வட கொரியா கூறியது.

கடனைக் கட்டுவதற்கான வழிகளை வட கொரியாவுடன் இணைந்து காணவிருப்பதாக ஐ.நா கூறியது.

வட கொரியா தனது நிலுவை தொகையை செலுத்தாத பட்சத்தில் ஐ.நா பொதுச்சபையில் வாக்களிக்கும் உரிமையை அது இழக்க நேரிடும் வாய்ப்பு உள்ளது.

ஐ.நாவுக்கான நிலுவையை செலுத்தாததால் ஏற்கனவே மத்திய ஆபிரிக்க குடியரசு, டொமினிக்கா, எக்குவடோரியல் கினியா, கிரேனடா, லிபியா, சூரினாம், வெனிசுவேலா மற்றும் யெமன் நாடுகள் வாக்களிக்கும் உரிமையை இழந்துள்ளன. 


Add new comment

Or log in with...