Friday, March 29, 2024
Home » ரொட்னி விதானபத்திரணவின் ‘லண்டன் வெம்மை’ சில குறிப்புக்கள்

ரொட்னி விதானபத்திரணவின் ‘லண்டன் வெம்மை’ சில குறிப்புக்கள்

by damith
November 7, 2023 11:28 am 0 comment

இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகம், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம் இணைந்து வெளியிட்ட சு. முரளிதரன் சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த ‘ லண்டன் வெம்மை’ நாவல் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் ரொட்னி விதானபத்திரண.

ரொட்னி விதானபத்திரண நான்கு தசாப்தங்களாக ஊடகவியலாளராக செயற்பட்டு வருகிறார். மக்கள் நேசிக்கும் பாடலாசிரியராக, திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குநராக அறியப்பட்டவர். ‘தருணயா’ செய்திப் பத்திரிகையின் ஆசிரியராக 23 வருடங்கள் கடமையாற்றி ‘லங்காதீப’ பத்திரிகையின் நிறைவேற்று மட்ட ஊடகவியலாளராக செயற்படுகின்றார். இவரின் முதலாவது நாவலான ‘சாருமதிய’ வை அடுத்து இரண்டாவது நாவலாக லண்டன் வெம்மை வெளிவந்துள்ளது.

லண்டன் வெம்மை பற்றி சில குறிப்புக்கள்:

நூலாசிரியர் துப்பறியும் கதை பாணியிலான இலகு வாசிப்புக்காக இந்த நாவலை நேர்கோட்டு (linear) முறையில் எழுதி இருப்பதாகச் சொல்கிறார். அவரது அதே குறிப்பில் இன்னுமொரு இடத்தில் “சாமானியர்களின் உணர்வுகளுடன் இணைத்து வாழ்க்கை மற்றும் சமூகத்தின் யதார்த்தத்தை சித்தரிக்க இதனூடாக விரும்பினேன்” என்கிறார். மொழிபெயர்ப்பாளர் குறிப்பிடுவது போல் “இந்த Light Reading எனச் எனச்சொல்லப்படும் சரள வாசிப்புக்கான நாவல் இது என்பதால் இலகுநடையில் மொழிபெயர்த்து இருக்கிறேன்” என்கிறார்.

காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளில் காலனித்துவம் புகுத்திய ஆங்கிலக் கல்வி முறைமை, அந்தந்த நாடுகளின் மொழிகளில் நவீனத்துவத்தை கொண்டுவருவதில் பெரும் பங்காற்றி இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் காலனித்துவம் விட்டுச்சென்ற கலாசார சமூக பொரூளாதார மற்றும் அரசியல் (ஆங்கில கல்வி முறைமை உட்பட) சிந்தனைகளாலும் முறைமைகளாலும் காலனித்துவ மனோபாவத்தை தக்கவைத்துச் சென்றது. அதனால் காலனித்துவத்திலிருந்து விடுதலை அடைந்த நாடுகளின் பிரஜைகள் அதே காலனித்துவ நாடுகளில் அகதிகளாய் போனார்கள். அத்தோடு காலனித்துவ மனோபாவத்தின் நீட்சியாக, அதே நாடுகளுக்கு (மேலை நாடுகளுக்கு) கல்விக்காவும் , பணி நிமித்தமும் போனதோடு, அந்த நாடுகளின் பிரஜையாக மாறும் மோகத்தோடு சென்றார்கள். அப்படியாக சென்றவர்கள் சிலரைதான் இந்த நாவல் முக்கிய கதாபாத்திரங்களாகக் கொண்டிருக்கிறது.

அதனால்தானோ என்னவோ அவர்கள் வந்த நாட்டின்(இலங்கை) அந்தக் காலகட்டத்தின் அதாவது நாவல் நகரும் காலகட்டத்தில் இலங்கையின் சில சமூக அரசியல் பிரச்சினைகளை பற்றி பிரக்ஞையற்றவர்களாக, முழுக்க முழுக்க தனிநபர் பிரச்சினைகளுடன் ஊடாட்டம் செய்கிறார்கள். மொத்தத்தில் இலங்கைவாழ் சிங்கள் எழுத்தாளர் ஒருவர் வண்டனை தளமாகக் கொண்டு சிங்களத்தில் எழுதிய நாவலின் தமிழ்மொழிபெயர்ப்பில் வாசிப்பது என்ற வகையில், ரொட்னி விதானபத்திரணவின் ‘வண்டன் உணுசும’ என்ற பேரில் எழுதிய நாவலை சு. முரளிதனின் தமிழ்மொழிபெயர்ப்பில் ‘லண்டன் வெம்மை’ என்ற பேரில் வாசிக்கக் கிடைத்திருப்பது புதிய வாசிப்பு அனுபவமாக இருக்கிறது.

மேமன்கவி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT