தென்னாபிரிக்க ஜனாதிபதி சுமா பதவி விலக 48 மணிநேர கெடு | தினகரன்

தென்னாபிரிக்க ஜனாதிபதி சுமா பதவி விலக 48 மணிநேர கெடு

அவரது ஆளும் கட்சி அதிரடி முடிவு

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகப் சுமா பதவி விலகுவதற்கு அவரது ஆளும் ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் கட்சி 48 மணி நேர கெடு விதித்துள்ளது.

ஆளும் கட்சியின் 107 உறுப்பினர்கள் கொண்ட பலம்மிக்க நிறைவேற்றுக் குழுவின் 13 மணிநேர மரதன் சந்திப்புக்கு பின்னரே இந்த அதரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டோரியா நகருக்கு வெளியில் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் முடிவில் சுமாவை தனது பதவியில் இருந்து திருப்பி அழைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு 48 மணி நேர கெடு விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சுமாவை பதவி விலகும்படியும் இல்லாவிட்டால் பதவி நீக்க பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்றும் துணை ஜனாதிபதி சிறில் ரமபோசா கடந்த திங்கட்கிழமை கோரியிருந்தார். எனினும் இதனை சுமா நிராகரித்ததாக தென்னாபிரிக்காவில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

ஆபிரிக்க தேசிய கொங்கிரசுக்கு கட்சி அளவில் ஜனாதிபதியை பதவி விலக அழுத்தம் கொடுக்க முடியும் என்றபோதும், அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு அதனை கடைப்பிடிக்க வேண்டிய கடப்பாடு இல்லை. இந்நிலையில் அவர் பதவி விலக மறுக்கும் பட்சத்தில் பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மூலம் சில தினங்களுக்குள் பதவி நீக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகார போட்டியின் உச்சகட்டமாக ஆபிரிக்க தேசிய கொங்கிரஸின் தலைவர் ரமபோசா, சுமாவை அவரது அலுவலகத்தில் இரவு முழுவதும் சந்தித்து பேசி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நிறைவேற்றுக் குழு கூட்டத்திற்கு பின்னரே அவர் சுமாவை சந்தித்துள்ளார்.

சுமாவுக்கு பதில் ஆபிரிக்க தேசிய கொங்கிரஸின் தலைவராக கடந்த டிசம்பரில் சிறில் ரமபோசா தேர்வு செய்யப்பட்டது தொடக்கம் சுமாவை பதவி விலகக் கோரும் அழுத்தம் அதிகரித்தது. 2009 ஆம் ஆண்டு தொடக்கம் ஜனாதிபதி பதவியில் இருக்கும் 75 வயதான சுமா மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

2016 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சுமா தனது தனிப்பட்ட இல்லத்திற்கு செலவிட்ட அரசின் பணத்தை திருப்பி செலுத்தும்படி உத்தரவிடப்பட்டது.

கடந்த ஆண்டு மேன்முறையீட்டுக்கான உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சுமா 1999 ஆம் ஆண்டு ஆயுத கொள்வனவில் இடம்பெற்ற மோசடி, பயமுறுத்தி பணம் பறித்தது, மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்திப்பதாக குறிப்பிட்டது.

அண்மையில் கூட, இந்தியாவில் பிறந்த செல்வந்த குப்தா குடும்பத்துடன் இருக்கும் சுமாவின் தொடர்பு பற்றி குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குப்தா குடும்பம் அரசில் செல்வாக்கு செலுத்துவதான குற்றச்சாட்டு சுமாவின் புகழை சரியச்செய்தது. இந்த குற்றச்சாட்டை சுமா மற்றும் குப்தா இருவரும் மறுத்தனர்.

வரும் பெப்ரவரி 22 ஆம் திகதி சுமா மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவர ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் இதற்கு முன்னதான இவ்வாறான வாக்கெடுப்புகளில் சுமா தனது பதவியை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

சுமாவுக்கு முன்னர் ஜனாதிபதியாக இருந்த தம்போ ம்பக்கி தனது அப்போது துணை ஜனாதிபதியாக இருந்த சுமாவுடனான அதிகார போட்டியை அடுத்தே 2008 ஆம் ஆண்டு பதவியை இராஜினாமா செய்தார்.

எனினும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கு ஜனாதிபதி தேர்தவில் ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் சார்பில் துணை ஜனாதிபதி ரமபோசாவே போட்டியிட உள்ளார்.

ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் 1994 ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலாவின் தலைமையில் ஆட்சிக்கு வந்தது தொடக்கம் 2016 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் மோசமான பெறுபேறை பெற்றது. இந்நிலையில் புதிய திட்டத்துடன் அடுத்த ஆண்டு தேர்தலில் குதிக்க அந்த கட்சி எதிர்பார்த்துள்ளது.

சுமா தனது இரண்டு ஆண்டு தவணையை பூர்த்தி செய்வதால் சட்ட ரீதியில் மீண்டும் அவரால் போட்டியிட முடியாது. எனினும் தனது தவணை முடியும் வரை பதவியில் இருக்க அவர் விரும்புகிறார். 


Add new comment

Or log in with...