சிரியாவில் படுகாயங்களுடன் உயிரோடு இருக்கும் பக்தாதி | தினகரன்

சிரியாவில் படுகாயங்களுடன் உயிரோடு இருக்கும் பக்தாதி

இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி கொல்லப்படவில்லை என்றும் வான் தாக்குதல் ஒன்றில் படுகாயமுற்று வடகிழக்கு சிரியாவில் மருத்துவ நிலையம் ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஈராக்கின் மூத்த அதிகாரி ஒருவர் தகவல் அளித்துள்ளார்.

வான் தாக்குதல்களின்போது பக்தாதியின் கால்களில் மோசமான காயங்கள் ஏற்பட்டிருப்பதாக ஈராக் உளவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைவர் அபூ அலி அல் பஸ்ரி அரசின் ‘அல் சபாஹ்’ நாளிதழுக்கு குறிப்பிட்டுள்ளார்.

“அல் பக்தாதி தனது சகாக்களின் உதவியோடு உயிரோடு ஒளிந்துகொண்டிருக்கிறார் என்று தீவிரவாத அமைப்புக்குள் இருந்து எமக்கு கிடைத்த மறுக்க முடியாத தகவல் மற்றும் ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது” என்று அல் பஸ்ரி குறிப்பிட்டார்.

தனது தலைக்கு 25 மில்லியன் சன்மானம் அறிவிக்கப்பட்ட உலகில் அதிகம் தேடப்படும் நபராக இருக்கும் பக்தாதி, தற்போது சிரியாவின் டெயிர் அஸ்ஸோவில் உள்ள ஜசீரா பாலைவனப் பகுதியில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர், காயங்கள், நீரிழிவு நோய், உடல் மற்றும் காலில் ஏற்பட்டிருக்கும் முறிவுகளால் உதவியின்றி நடக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அல் பஸ்ரி குறிப்பிட்டுள்ளார். சிரியாவின் ரக்கா நகருக்கு அருகில் கடந்த மே மாதம் நடத்திய வான் தாக்குதலில் அல் பக்தாதி கொல்லப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக ரஷ்யா கடந்த ஜுன் மாதம் குறிப்பிட்டபோதும், அதனை உறுதி செய்ய முடியவில்லை என்று அது பின்னர் கூறியது.

எனினும் பக்தாதி கிழக்கு சிரியாவின் யூப்ரடிஸ் பள்ளத்தாக்கில் ஒளிந்திருப்பதாக அமெரிக்க இராணுவம் கடந்த செப்டெம்பரில் கூறியது. 


Add new comment

Or log in with...