றூபி இல்லம் சம்பியன் | தினகரன்

றூபி இல்லம் சம்பியன்

அக்கரைப்பற்று சேர் றாசிக் பரீட் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை அதிபர் எஸ்.எல்.றஹீம் தலைமையில் கோலாகலமாக பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் றூபி, டயமண்ட், பேள்ஸ் என மூன்று இல்லங்கள் பிரிக்கப்பட்டு போட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இறுதிநாள் நிகழ்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும், இல்ல தெரிவுகளும் நடைபெற்றது. இல்லங்களில் முதலாம் இடத்தை மஞ்சள் நிறத்தைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்த றூபி இல்லமும், இரண்டாவது இடத்தை நீல நிறத்தினால் அலங்கரிக்கப்பட்டிருந்த டயமண்ட் இல்லமும், மூன்றாவது இடத்தை பச்சை நிறத்தைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்த பேள்ஸ் இல்லமும் பெற்று பரிசுகளையும், கிண்ணத்தையும் தட்டிக் கொண்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச்.பௌஸ் முதலாம் இடம் பெற்ற றூபி இல்லத்திற்கு கிண்ணத்தை வழங்கி வைத்தார். கௌரவ அதிதிகளாகக் கலந்து கொண்ட அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் கனிஷ்ட பாடசாலையின் அதிபர் எஸ்.றினோஸ், முன்னாள் கோட்டக் கல்வி அதிகாரி எம்.சி.ஆதம்லெப்பை, பாடசாலை விளையாட்டு விருத்தி இணைப்பாளர் ஏ.எல்.பாயிஸ் ஆகியோர் கலந்து கொண்டு ஏனைய இல்லங்களுக்கு கிண்ணத்தையும், பரிசில்களையும் வழங்கி வைத்தார்கள். மாணவர்களின் வினோத உடைப் போட்டி, கலந்து கொண்ட பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

(ஆலையடிவேம்பு விசேட நிருபர்) 


Add new comment

Or log in with...