இலங்கை கிரிக்கெட்டின் இளம் திறமையை தேடும் அதிகாரி இராஜினாமா | தினகரன்

இலங்கை கிரிக்கெட்டின் இளம் திறமையை தேடும் அதிகாரி இராஜினாமா

இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் செயல்திறன் முகாமையாளரான இங்கிலாந்தைச் சேர்ந்த சைமன் வில்லிஸ் இந்த ஆண்டு ஜுன் 30ஆம் திகதிக்கு அமுலுக்கு வரும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.

ஏற்கனவே இடம்பெற்ற ஒப்பந்தத்திற்கு அமைய அவர் தனது மூன்று ஆண்டு தவணைக்காலத்தை இலங்கையுடன் இணைந்து செயற்பட இருந்தார். எனினும் தற்போதைய இந்த முடிவுக்கு அமைய அவர் இரண்டு ஆண்டுகளுடன் தனது சேவையை முடித்துக் கொள்கிறார்.

2016ஆம் ஆண்டு அப்போதைய இலங்கை கிரிக்கெட் சபையின் பயிற்றுவிப்பு தலைவரான ஜெரோம் ஜயரத்னவிற்கு பதிலாக சைமன் வில்லிஸ் நியமிக்கப்பட்டார்.

ஆறு மாதங்களுக்கு முன்னர் தனது பதவி விலகல் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கும் நிலையில் வில்லிசின் பதவிக்கு இலங்கை கிரிக்கெட் சபை ஏற்கனவே ஒருவரை தேடி வருவதாக தெரியவருகிறது. ஒரு சுமுகமான பதவி மாற்றத்திற்காக வில்லிஸ் வெளியேறுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே அந்த பதவிக்கு புதிய ஒருவரை இலங்கை கிரிக்கெட் சபை கொண்டுவர இருப்பதாகவும் மேலும் தெரியவருகிறது.

வில்லிஸை குறித்த பதவிக்கு நியமிப்பதில் இலங்கை கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் குழுவின் அப்போதைய தலைவராக இருந்த அரவிந்த டி சில்வாவே பின்னணியில் இருந்தார். இதன்போது உயர் செயல்திறன் முகாமையாளர் என்ற புதிய பதவி ஒன்று உருவாக்கப்பட்டே அவர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதோடு, இதன்மூலம் இளம் திறமைகளை அடையாளம் கண்டு வளர்ப்பதில் இந்த பதவி முக்கியமானதாக இருந்தது.

கென்ட் அணிக்காக 16 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடியிருக்கும் வில்லிஸ், இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் 4ஆம் நிலை சான்றிதழ், நான்காம் நிலையின் சிறப்பு விக்கெட் காப்பாளர் தகுதி மற்றும் பயிற்சியாளர் கல்வியின் மூன்றாம் நிலை சான்றிதழ் உட்பட பயிற்சியாளராக செயற்பட்ட அனுபவம் மிக்கவராவார். 


Add new comment

Or log in with...