Thursday, March 28, 2024
Home » இலங்கை கிரிக்கெட்டுக்கு அர்ஜுன ரணதுங்க தலைமையில் ‘இடைக்கால சபை’ நியமனம்

இலங்கை கிரிக்கெட்டுக்கு அர்ஜுன ரணதுங்க தலைமையில் ‘இடைக்கால சபை’ நியமனம்

by damith
November 7, 2023 6:00 am 0 comment

இலங்கை கிரிக்கெட் சபையை நேற்று (06) கலைத்த விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க முன்னாள் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடைக்கால சபை ஒன்றை நியமித்துள்ளார்.

உலகக் கிண்ணத்தில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணி 55 ஓட்டங்களுக்கே சுருண்டு மோசமான தோல்வியை சந்தித்து சில நாட்களிலேயே அமைச்சர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

எனினும் இலங்கையின் மிகச் செல்வந்த விளையாட்டு அமைப்பாக உள்ள இலங்கை கிரிக்கெட் சபைக்கும் விளையாட்டு அமைச்சருக்கும் இடையில் பல மாதங்களாக முறுகல் நீடித்து வந்தது. குறிப்பாக இலங்கை கிரிக்கெட் ஊழல் விவகாரங்கள் தொடர்பில் அமைச்சர் குற்றம்சாட்டி வந்தார்.

1996 ஆம் ஆண்டு இலங்கைக்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த அணித் தலைவரான 59 வயது அர்ஜுன ரணதுங்க புதிய இடைக்கால சபையின் தலைவராக செயற்படுவார் என்று அமைச்சரின் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டை கட்டியெழுப்புவதற்கு ரணதுங்க பொருத்தமானவர் என்று அமைச்சர் கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “அணியின் ஆட்டத் திறமையை மேம்படுத்துவதற்கே முன்னுரிமை அளிக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏழு பேர் கொண்ட இந்த இடைக்கால சபையில் ஊழல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு உதவியாக மூன்று நீதிபதிகள் நியமிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில் கிரிக்கெட்டை கட்டியெழுப்பும் சவாலை ஏற்றதாக ரணதுங்க தெரிவித்துள்ளார். “நாட்டில் ஊழல் மிக்க நிறுவனமாக இலங்கை கிரிக்கெட் மாறியுள்ளது” என்று கூறிய அவர், “அந்த நிலையை மாற்ற நான் விரும்புகிறேன்” என்றார்.

இலங்கை கிரிக்கெட்டில் இரண்டாவது உயர் பதவி வகிக்கும் அதிகாரியான, செயலாளர் மொஹான் டி சில்வா பதவி விலகி ஒருநாளைக்குப் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி இந்தியாவிடம் 302 ஓட்டங்களால் தோல்வி அடைந்ததை அடுத்து இலங்கை கிரிக்கெட் சபையின் அனைவரும் பதவி விலக வேண்டும் என்று அமைச்சர் ரணசிங்க முன்னதாக கூறியிருந்தார்.

இந்தியா நிர்ணயித்த 358 ஓட்ட வெற்றி இலக்கை துரத்திய இலங்கை ஒரு கட்டத்தில் 14 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்ததோடு 55 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து உலகக் கிண்ண வரலாற்றில் நான்காவது மிகக் குறைந்த ஓட்டங்களை பதிவு செய்தது.

இந்தத் தோல்வியை அடுத்து இலங்கை கிரிக்கெட்டுக்கு எதிர்ப்பு வலுத்ததோடு சிலர் இலங்கை கிரிக்கெட் சபை தலைமையகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் நேற்றைய தினத்திலும் அங்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

1999 ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு காரணங்களுக்காக விளையாட்டு அமைச்சரால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு இதுவரை 10 தடவைகள் இடைக்கால சபைகள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் சர்வதேச கிரிக்கெட் கெளன்சில் கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசியல் தலையீட்டை எதிர்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அமைச்சர் ரணசிங்க கடந்த சனிக்கிழமை (04) ஐ.சி.சி. முழு அங்கத்துவ நாடுகளுக்கு தனிப்பட்ட முறையில் எழுதிய கடிதத்தில் தனது நிலைப்பாட்டை வெளியிட்டிருந்ததோடு, இடைக்கால நடவடிக்கை ஒன்று பற்றியும் கூறியிருந்தார்.

கடந்த மே மாதம் தொடர்ந்து மூன்றாவது தடவையாக இலங்கை கிரிக்கெட் சபை தலைவராக நியமிக்கப்பட்டிருந்த ஷம்மி சில்வாவை நீக்கியது தொடர்பில் ஐ.சி.சி உடன் எந்த பதிலும் அளிக்கவில்லை என்பதோடு ஷம்மி சில்வா தரப்பில் இருந்தும் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT