அணுகுண்டு தாக்குதல் நடந்தால் ட்ரம்ப் எங்கு ஒளிந்து கொள்வார்? | தினகரன்

அணுகுண்டு தாக்குதல் நடந்தால் ட்ரம்ப் எங்கு ஒளிந்து கொள்வார்?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் கூறியதைப் போன்று அவருக்கும், மற்ற அனைத்து முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகளிடமும் அணுசக்தி தாக்குதலை தொடங்குவதற்கான பொத்தான் உள்ளது. ஆனால், ஒருவேளை அமெரிக்கா மீது வேறொரு நாடு அணுசக்தி தாக்குதலை நடத்தினால் ட்ரம்ப் எங்கு செல்வார்?

பெரும்பாலும், உடனடியாக இரகசிய இடம் ஒன்றிற்கு டொனால்ட் ட்ரம்ப் அழைத்துச் செல்லப்படுவார்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் பாதுகாப்பாக மறைந்து கொள்வதற்கென சில இடங்கள் உள்ளன. ஒன்று, வெள்ளை மாளிகைக்கு அடியில் எவ்வித தாக்குதலையும் தாங்கக் கூடிய வகையில் 1950களில் அமைக்கப்பட்ட இரகசிய இடமாகும். மற்றொன்று வேர்ஜினியாவின் ப்ளூ ரிட்ஜ் மலைத்தொடரில் உள்ளது.

மேலும், ட்ரம்ப்பிற்கு புளோரிடாவிலுள்ள எஸ்டேட் மர்-எ-லாகோவிலும், பொதுவாக வெடிகுண்டுகளை தேக்கி வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் வெஸ்ட் பாம் பீச்சிலுள்ள கோல்ஃப் மைதானத்தில் மற்றொரு அறையும் உள்ளது.

ட்ரம்ப்பின் அணுகுண்டு பதுங்குகுழிகள் குறித்து வெளிவந்துள்ள விடயங்கள் கடந்த பல தசாப்த காலங்களாக அணுசக்தி போருக்காக அமெரிக்கர்கள் தங்களைத் தயார் செய்து கொள்வதற்கு கையாண்ட வழிமுறைகளை பிரதிபலிக்கின்றன.

அணுசக்திப் போர் என்பது சிலருக்கு நினைத்துப் பார்க்க முடியாத விடயமாக இருக்கலாம். ஆனால், அதேவேளையில் பலர் அதுகுறித்த திட்டங்களை தீட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அணுசக்தி போருக்குத் தயாராவதற்கான வழிமுறைகள் பற்றியும் அல்லது போருக்கு பிந்திய விளைவுகளை பற்றியும் அடிக்கடி பல ஆச்சரியத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஆனாலும், இதுவரை நேரடியான அணுசக்தி தாக்குதலை தாங்கக் கூடிய பதுங்குகுழிகள் அமைக்கப்படவில்லை.

"மிகப் பெரிய குண்டு வெடிப்பு மற்றும் வெப்பத்திற்கு எதிரான பாதுகாப்பு இல்லை" என்கிறார் One Nation Underground: The Fallout Shelter in American Culture என்ற புத்தகத்தின் ஆசிரியரான கென்னெத் ரோஸ்.

ஆரம்பகட்டத் தாக்குதலிலிருந்து ட்ரம்ப் தப்பித்தாலும், அவர் உடனடியாக அருகிலுள்ள பதுங்குகுழிக்கு அழைத்துச் செல்லப்படுவார். உலகமே பற்றி எரிந்து கொண்டிருந்தாலும் நாட்டை அமைதியாக வழிநடத்துவதற்கான பாதுகாப்பான இடங்கள் ஜனாதிபதிக்குத் தேவை.

நாட்டில் அதிகாரத்தின் உட்சபட்ச நிலையில் உள்ளவர்களாக கருதப்படும் ஜனாதிபதிக்கும், மற்ற சில தனி நபர்களுக்கும் பதுங்குகுழிகளுக்குள் செல்வதற்கான அனுமதி சார்ந்த முன்னேற்பாடுகளை அமெரிக்க அரசு அதிகாரிகள் செய்துள்ளதாக 9/11 தாக்குதலின்போது வெள்ளை மாளிகையின் பதுங்குகுழியில் இருந்த கடற்படை அதிகாரியான ​ெராபர்ட் டார்லிங் கூறுகிறார்.

டார்லிங் கூறுவதைப் போன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டுமே ஜனாதிபதிக்கான பதுங்குகுழிக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதாவது, இவ்விடத்தில் சமூக அதிகாரமானது வாழ்வா, சாவா என்ற நிலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிலையில், அரசாங்கத்தின் முக்கியமான செயல்பாடுகளில் பதுங்குகுழிகளை அமைப்பதும் ஒரு அங்கம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நாகசாகி நகரத்தின் மீது அமெரிக்கா நடத்திய அணுசக்தி தாக்குதலில் உடனடியாக உயிரிழந்த 30 சதவீத மக்களை அங்கு கதிர்வீச்சு தடுப்பு முகாம்களை அமைந்திருந்தால் பிழைக்க வைத்திருக்க முடியும் என்று அமெரிக்க அரசின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

பல தனிநபர்கள் தங்களுக்கான பதுங்குகுழிகளை அமைத்துக் கொண்டுள்ளார்கள். அதிலொன்றுதான் மார்ஜோரி மெர்ரிவெத்தர் போஸ்ட் என்பவர் புளோரிடாவிலுள்ள மர்-எ-லாகோ தோட்டத்தில் அமைத்த பதுங்குகுழியாகும்.

போஸ்டினுடைய அந்த தோட்டத்தை 1985இல் டொனால்ட் ட்ரம்ப் பதுங்குகுழியோடு சேர்த்து வாங்கினார். மேலும், அந்த பதுங்குகுழி தகர்க்கமுடியாத வகையில் வலுவான கட்டமைப்பை கொண்டிருந்தது.

அடுத்ததாக அமெரிக்காவை இலக்கு வைத்து அணுசக்தி தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க ஜனாதிபதி, அவரது ஆலோசகர்கள் மற்றும் பலர் தங்குவதற்குரிய பிரம்மாண்டமான பதுங்குகுழி ஒன்று வேர்ஜினியா மாகாணத்திலுள்ள ப்ளூ மவுண்ட்டின் 1754 அடிகள் கொண்ட உயர்ந்த சிகரமான மவுண்ட் வெதரில் உள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென மேற்கு வேர்ஜினியாவிலுள்ள சுல்புர் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் பதுங்குகுழிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்த இடத்தை பயன்பாட்டிலிருந்து நீக்கிய 1992 ஆம் ஆண்டுதான் இப்படி ஒரு பதுங்குகுழி இருப்பதாகவே ஊடகங்கள் வாயிலாக வெளியுலகிற்கு தெரிவிக்கப்பட்டது.


Add new comment

Or log in with...