தீர்வை வலியுறுத்தும் மாற்றுத் திட்டத்தை தமிழ்க் கூட்டமைப்பு உருவாக்குவது அவசியம் | தினகரன்

தீர்வை வலியுறுத்தும் மாற்றுத் திட்டத்தை தமிழ்க் கூட்டமைப்பு உருவாக்குவது அவசியம்

நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படும் சூழ்நிலை எழுந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை வலியுறுத்தும் மாற்றுத் திட்டமொன்றை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்குவது அவசியமென சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அணி பலம் பெற்றுள்ள நிலையில் அரசாங்கத்தின் அரசியலமைப்பில் தொடர்ந்தும் நம்பிக்கை கொள்ள முடியாது என்றும், மாற்றுச் சிந்தனை மற்றும் மாற்றுக் கொள்கையுடைய காத்திரமான திட்டமொன்றை கூட்டமைப்பு உருவாக்குவது அவசியமென்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டுடன் செயற்படும் கட்சிகளை ஒன்றிணைத்து கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்களை நடத்தி அதனூடாக முடிவுகள் எட்டப்பட வேண்டும். அந்த முடிவுகளை சிறந்த முறையில் கையாண்டு நடைமுறைப்படுத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

வெறுமனே ஊடகங்களுக்கு அறிக்கைகளை விடுப்பதைவிட்டு காத்திரமான செயற்பாடுகளில் இறங்குவது அவசியம் என குறிப்பிட்ட அவர், இதில் எதிர்க்கட்சித் தலைவரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரனுக்கும் பாரிய பொறுப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் வடக்கிலும் தெற்கிலும் ஏற்படக்கூடிய மாற்றங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-, தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என தம்மைக் கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இம்முறை உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் பலவீனமடைந்துள்ளது. அதன் வாக்குவங்கிகள் சரிவடைந்துள்ளன. எனினும் அக்கட்சி முதன்மை ஸ்தானத்திலேயே உள்ளது. இம்முறை தமிழ் மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர் என்பதைக் கூற முடியும்.

தெற்கில் மஹிந்த ராஜபக்ஷ அணி பெற்றுள்ள அமோக வெற்றியானது தமிழ் மக்களின் பிரச்சினை தீர்வுக்கான அரசிலமைப்புக்கு உகந்ததல்ல. ஏற்கனவே இடைக்கால அறிக்கையை தமிழ் மக்கள் ஏற்கவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதீத நம்பிக்கையைக் கொண்டிருந்த போதும், தற்போது அதற்கான அரசியல் சூழ்நிலை இல்லாமற் போயுள்ளது.

இந்த நிலையில் நாட்டில் அரசியல் மாற்றமொன்று ஏற்படும் நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் அதற்கான மாற்றுத் திட்டம் உள்ளதா? கடந்த கால திட்டங்கள் முடங்கிப் போயுள்ள நிலையில் மாற்றுத் திட்டமொன்று உடனடியான தேவையாகவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் இந்த உள்ளூராட்சிச் சபைத் தேர்தலை அடுத்து மாகாண சபைத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என வரிசையாகத் தேர்தல்களிலேயே கவனம் செலுத்தப் போகிறது. இந்த நிலையில் அரசிலமைப்புக்கு மஹிந்த ராஜபக்ஷவும் இடம்கொடுக்கப் போவதில்லை. இந்த வகையில் மாற்றுத் திட்டமொன்று மிக அவசியமானிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கான உடனடி நடவடிக்கையில் ஈடுபடுவது அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...