இ.தொ.கா -- பொதுஐன பெரமுன 11 சபைகளில் கூட்டாட்சி | தினகரன்

இ.தொ.கா -- பொதுஐன பெரமுன 11 சபைகளில் கூட்டாட்சி

ஜனாதிபதியை இன்று சந்தித்து தெளிவுபடுத்தப் போவதாக ஆறுமுகன் அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் மலையகத்தில் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாவட்டத்தில் 11 சபைகளில் தனித்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சில இடங்களில் இணைந்தும் ஆட்சி அமைக்கவுள்ளதாக இ.தொ.கா பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

இது தொடர்பாக, இ.தொ.கா இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேசவுள்ளது. இ.தொ.கா, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்று. இந்நிலையில், ஜனாதிபதியைச் சந்தித்து அவரின் முடிவின்படியே செயற்படுவோமெனவும் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். “பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ஐ.ம.சு.மு.வுடன்தான் இருப்போம். காங்கிரஸிடம் எப்போதும் இரட்டை நிலைப்பாடு இல்லை” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் அவர்களின் எதிர்பார்ப்பையும் நிறைவேற்ற வேண்டும். இன்றைய நிலையில் எமக்கு அடுத்ததாக பொதுஜன பெரமுன இருக்கிறது. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வே முக்கியம். நாம் எடுத்துள்ள இந்த தீர்மானத்தை மக்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் எமக்கு வாக்களித்துள்ளதால் அவர்களின் நலன்களை நிறைவேற்றுவோம் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

இ.தொ.காவின் தலைமையகமான சௌமிய பவனில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

நோர்வூட் பிரதேச சபை 12 ஆசனங்களில் 11 ஆசனங்களை வென்ற நாம் 12 இடத்தை வெறும் 20 வாக்குகளால் தோற்றோம். எமக்கு ஒரு போனஸ் ஆசனமும் கிடையாது. 20 வாக்குகளால் வென்றவருக்கு ஏழு போனஸ் ஆசனங்கள் கிடைத்திருக்கிறது. அதனைப்போலவே கொழும்பிலும் ஒரேயொரு ஆசனத்தை வென்ற ஒரு அணிக்கு 9 போனஸ் ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன. இந்த கலப்பு தேர்தல் முறையானது தோற்றவர்களை தூக்கிக் கொடுக்கும். சாதாரண முறையில் நடைபெறும் தேர்தல் என்றால் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தன்னிச்சையாக காங்கிரஸ் வென்று ஆட்சியதிகாரத்தை முழுமையாக கைப்பற்றியிருக்கும். இதன் காரணமாகவே நாம் இந்த புரிந்துணர்வுக்கு வரவேண்டியிருந்தது.

உள்ளூராட்சித் தேர்தலில் நுவரெலியா மாநகரசபை தவிர்ந்த நோர்வூட் பிரதேச சபை, மஸ்கெலியா பிரதேச சபை, அம்பகமுவ பிரதேச சபை, அக்கரபத்தனை பிரதேச சபை, கொட்டகலை பிரதேச சபை, நுவரெலியா பிரதேசசபை, தலவாக்கலை லிந்துலை நகரசபை, ஹட்டன் டிக்கோயா நகரசபை, ஹங்குரங்கெத்த பிரதேச சபை, வலப்பனை பிரதேசசபை, கொத்மலை பிரதேசசபைகளில் இ.தொ.கா ஆட்சிசெய்யவுள்ளதுடன் இரத்தினபுரி, தெனியாய, மாத்தளை, கண்டி, கேகாலை எட்டியாந்தோட்டை, மாத்தறை ஆகிய இடங்களில் பரவலாக தெரிவாகியிருக்கிறார்கள். சில இடங்களில் நேரடியாக போட்டியிடாவிட்டாலும் அப்பகுதிகளில் எமக்கு போனஸ் ஆசனங்கள் கிடைத்திருக்கிறது. கடந்த காலத்தில் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 40 இருந்தது. தற்போது 125 முதல் 150 வரையான உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.

நாம் எடுத்த இந்த முடிவு குறித்து ஜனாதிபதிக்கு அறிவித்திருக்கிறோம். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கத்துவம் வகிப்பதுடன் அதன் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்ற வகையில் எந்த முடிவை எடுப்பதானாலும் அவருடன் கலந்தாலோசித்தே முடிவுகளை எடுப்போம். தாம் எது செய்வதென்றாலும் மக்களுக்காகவே செய்வோம், மக்களின் விருப்பத்திற்கமைய அவர்களின் நலன்களிலேயே அக்கறையாக செயல்படுவோம். உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகம் சீராக இயங்குவதற்கும் அதன் எதிர்கால நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுத்தும் செல்ல வேண்டியுள்ளது. ஜனாதிபதியுடனான சந்திப்பு இன்று (14) நடைபெறவுள்ளது. எமது அபிவிருத்தி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறவுள்ளோம்.

கடந்த மூன்று வருடங்களாக நாங்கள் ஆட்சியில் இல்லாத காரணத்தினால் மலையகத்தில் எம்மால் ஒன்றும் செய்யமுடியாது போய்விட்டது. தற்போது கிடைத்துள்ள உள்ளூராட்சி மன்ற வெற்றியை வைத்து நாங்கள் மக்களின் தேவைகளை நிறைவேற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களில் இ.தொ.காங்கிரஸின் அதிகாரத்தின் கீழ் மக்களின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றுவோம் என்ற உறுதிமொழியை ஊடகங்கள் மூலம் வழங்குவீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, 101 சதவீதம் மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அதற்காகவே காங்கிரஸ் இந்த முடிவை எடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஐ.தே.கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கும் நிலையில் இ.தொ.கா என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என கேட்டபோது,

என்னைப் பொறுத்தவரையில் இ.தொ.கா ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்று. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவு என்னவோ அதன்படியே செயற்படுவோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ஐ ம.சு.முன்னணியுடன்தான் இருப்போம். காங்கிரஸிடம் இரட்டை நிலைப்பாடு இல்லை. அதனை ஐயாவின் காலத்திலிருந்தே பார்த்திருப்பீர்கள். முழுமையாக ஐ.ம.சு.மு.வுடனேயே இருப்போம்.

யார் ஆட்சியமைக்க வந்தாலும் நாங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன்தான் முழுமையாக கைகோர்த்து இருப்போம் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றார். நுவரெலியாவிலும் நாங்கள் ஆட்சியை சிறப்பாக கொண்டு செல்வோம். கொழும்பு மாவட்டத்தில் இ.தொ.காவின் எதிர்கால அரசியல் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளதுடன் கடந்த தேர்தலில் பிரபா கணேசனுடன் ஒரு கூட்டணியில் இருக்கின்றோம். அவருடனும் கலந்துபேசி எமது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வோம் என்றும் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

கூட்டணி அமைப்பதற்கு ஏதாவது நிபந்தனைகள் இருக்கின்றனவா? அவர்கள் ஏதேனும் நிபந்தனைகளை விதித்திருக்கிறார்களா? என ஆறுமுகன் தொண்டமான எம் பியிடம் கேட்டபோது,

நிபந்தனைகள் எதுவுமில்லை. சபைக்குள் நடக்கும் விடயங்களுக்காகவே இந்த கூட்டணியை அமைத்திருக்கிறோம். மக்களின் நலனுக்காக சில மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் அவர்களின் ஒத்துழைப்பு தேவைப்படலாம். இரு தரப்பும் ஒரு புரிந்துணர்வு அடிப்படையில் செயற்பட வேண்டும் என்பதற்காகவே. அது எந்த விதத்திலும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

உள்ளூராட்சி சபைகளின் நிர்வாக செயற்பாடுகளில் தோட்டங்கள் புறக்கணிக்கப்படுவது பற்றி கேட்டபோது,

உள்ளூராட்சி சபைகளுடாக தோட்டப்புறங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதானால் தோட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற வேண்டும். அத்துடன் சட்டரீதியான சிக்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. இப்போது அந்தப் பிரச்சினை இல்லை. ஏற்கனவே பிரதேச சபைகளூடாக பெருந்தோட்டப்பகுதிகளில் வீதிகளை அமைத்திருக்கிறோம். காங்கிரஸைப் பொறுத்தவரையில் மக்களுக்காக என்ன செய்ய வேண்டுமானாலும் எவரது அனுமதியும் தேவையில்லை. மக்களின் ஒத்துழைப்பு இருந்தாலே நிச்சயமாக செய்து முடிப்போம்.

இணைந்து செயற்படுவது குறித்து பொதுஜன பெரமுன தீர்மானிக்காத நிலையில் இ.தொ.காவின் அறிவிப்பது குறித்து தமிழ் முற்போக்குக் கூட்டணி இந்த நிலையில் மாற்றமடையலாம் எனக்கூறுகிறதே ?

தேர்தல் நடந்த அன்றிரவு ஹட்டன் டிக்கோயா நகரசபையில் அவர்கள் 7 உறுப்பினர்களையும், இ.தொ.கா 6 உறுப்பினர்களையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனை 2 உறுப்பினர்களும், கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒரு ஆசனமும் பெற்றிருப்பதாக வந்த செய்தியையடுத்து எங்கெங்கு எமது ஆதரவாளர்கள் இருந்தார்களோ அவர்களது வீடுகளுக்கு முன்னால் பட்டாசு வெடித்து ரகளையில் ஈடுபட்டதுடன் சிலரிடம் நேரடியாகவே அச்சுறுத்தல் விடுத்தனர் எதிரணியினர்.

ஆனால் ஞாயிறன்று மாலையே நாம் இணைந்து செயற்படுவதென முடிவெடுத்து அவர்களது சவால்களை முறியடித்தோம் என்றும் ஆறுமுகள்தொண்டமான் எம்.பி தெரிவித்தார்.

பி. வீரசிங்கம்


Add new comment

Or log in with...