போனஸ் ஆசனங்களில் தெளிவில்லாத நிலை ; 9 சபைகளில் ஆட்சியமைக்க முஸ்தீபு | தினகரன்

போனஸ் ஆசனங்களில் தெளிவில்லாத நிலை ; 9 சபைகளில் ஆட்சியமைக்க முஸ்தீபு

நுவரெலியா நகர சபை, ஹற்றன் நகர சபை உள்ளிட்ட ஒன்பது உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். வட்டார தேர்தல் முறையில் (கலப்பு தேர்தல்) வெற்றி பெற்ற பிரதேசங்களில் போனஸ் ஆசனங்களில் தெளிவற்ற நிலை காணப்படுவதால் தேர்தல் ஆணையாளர் இது விடயத்தில் தெளிவான முடிவுகளை அறிவிக்க வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சிச் சபை தேர்தலின் பின்னர் இரு பிரதான கட்சிகளுக்கிடையில் தீர்க்கமான முடிவெதுவும் எட்டப்படாத நிலையில் இந்த நிலை பல்வேறு எதிர்பார்ப்புக்களை தோற்றுவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க, பிரதியமைச்சர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேச்சுவார்த்தையொன்றுக்காக அழைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, மலையகத்தில் தேர்தல் முடிவுகளையடுத்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெற்றிபெற்ற சபைகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அணியான பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கூட்டாட்சி நடத்தப் போவதாக அறிவித்திருந்தது. எனினும் அக்கட்சி நேற்று தமது முடிவை மாற்றி, ஜனாதிபதியின் அங்கீகாரத்துடனேயே எதையும் தீர்மானிப்போம் என தெரிவித்திருந்தது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த ராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன், அவர்கள் அவரசமாக எடுத்த முடிவை இப்போது மாற்றிக் கொண்டுள்ளனர். அது எவ்விதத்திலும் நம்மைப் பாதிக்காது. நாம் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து வெற்றி பெற்றுள்ள நகர மற்றும் பிரதேச சபைகளில் ஆட்சியமைப்போம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா நகர சபை, நுவரெலியா பிரதேச சபை, ஹற்றன் நகர சபை, மஸ்கெலியா பிரதேச சபை உள்ளிட்ட உள்ளூராட்சிச் சபைகளில் நாம் ஆட்சியமைப்போம். மக்கள் பிரதிநிதிகளின் பெயர்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு அங்கீகாரம் கிடைத்ததும் ஆட்சியமைக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 


Add new comment

Or log in with...