Thursday, March 28, 2024
Home » பலஸ்தீன மக்களுக்காக சவுதி அரேபியா மனிதாபிமான உதவி, இராஜதந்திர நகர்வு

பலஸ்தீன மக்களுக்காக சவுதி அரேபியா மனிதாபிமான உதவி, இராஜதந்திர நகர்வு

by damith
November 7, 2023 9:25 am 0 comment

பலஸ்தீனத்தின் சோகம் தொடர்கதையாகி விட்டது. அம்மக்களுக்கு இன்னும் நீதி நிலைநாட்டப்படவில்லை. அவர்கள் தமது சொந்த நாட்டில் வாழும் உரிமை பறிக்கப்பட்ட துரதிர்ஷ்டசாலிகள். செய்யாத குற்றத்திற்காகக் கொடூரமாகத் தண்டிக்கப்பட்டவர்கள். இவர்களுக்கெதிராக மிகக் கடுமையான உக்கிரமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டபோதும், சர்வதேச சமூகத்தினால் கண்டு கொள்ளப்படாதவர்கள்.

உலகிலுள்ள அதிகாரவர்க்கத்தினரும் அரசியல் பலம் கொண்டவர்களும் அநியாயமிழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வப்பாவி மக்களின் பக்கம் அவர்களுக்காகக் கைகோர்த்து அணிதிரளாமல் உள்ளனர்.

மனித உரிமைக்காகக் குரல் கொடுக்கும் நிறுவனங்களோ, நியாயசபைகளோ இந்த மக்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை. கொத்துக் கொத்தாக மடியும் பச்சிளம் பாலகர்களுக்கெதிராக இந்த உலகம் நியாயக்கண் கொண்டு இவர்களைப் பார்க்கவில்லை.

ஆனாலும் அரபு மக்கள் அவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கவில்லை. பலஸ்தீன விவகாரம் அரசியலாக்கப்படுவதையோ, பலஸ்தீன உதிரத்தை வைத்து வியாபாரம் செய்வதையோ அவர்கள் விரும்பவில்லை. விளம்பரமின்றி தம்மால் முடியுமான முன்னெடுப்புக்களை செய்தவண்ணமே இருக்கின்றனர்.

குறிப்பாக சவுதி அரேபிய அரசினால் மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர முயற்சிகள் பலருடைய தலையீடுகள், முட்டுக்கட்டைகள் காரணமாக பலனளிக்காமல் போயின.

இருப்பினும் சோர்ந்து விடாமல் இராஜதந்திர முயற்சிகளையும் தொடர்ந்தும் மேற்கொள்கின்றனர். இம்மாதம் 11 ஆம் திகதி சவுதி தலைமையிலான அரபு லீக் உச்சிமாநாட்டின் அமர்வொன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கு காசா விவகாரம் பேசப்படப் போவதாக அறிய முடிகிறது. எகிப்திய தலைநகர் கெய்ரோவில் கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற அரபுலீக் மாநாடும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பத்ஹ், ஹமாஸ் ஆகிய குழுக்களுக்கிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டபோது அவற்றின் பிரதிநிதிகளை அழைத்து சமரசம் செய்து வைப்பதற்காக, 2007 ஆம் ஆண்டு மக்கமா நகரில் நடைபெற்ற மக்கா மகாநாட்டையும் மறந்துவிட முடியாது. இம்மாநாடு மறைந்த மன்னர் அப்துல்லாஹ் பின் அப்தில் அஸீஸ் ஆல் சுஊத் அவர்களுடை தலைமையில் நடைபெற்றது.

மறுபுறம் மனிதாபிமான உதவிகளைச் செய்தவதில் சவுதி அரசு மாத்திரமன்றி மக்களும் இணைந்துள்ளனர். அவர்கள் தம்மால் முடியுமான உதவிகளை பலஸ்தீன மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இரு தினங்களுக்கு முன் ஸாஹிம் செயலியினுடாக பொதுமக்களிடமிருந்து நன்கொடைகளைச் சேகரிக்கும் திட்டமொன்றை இரு புனிதஸ்தலங்களின் காவலர் மன்னர் சல்மான் அவர்கள் தொடங்கி வைத்தார். தமது பங்களிப்பாக 30 மில்லியன் சவுதி றியால்களை அவர் வழங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து முடிக்குரிய இளவரசர் முஹம்மது பின் ஸல்மான் இருபது மில்லியன் றியால்களை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தமது நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

இரண்டாம் நாள் முடிவில் சுமார் 28 கோடி 78 இலட்சத்து 53,386 சவுதி றியால்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றது. இன்னும் சேகரிப்புத் தொடர்ந்த வண்ணமிருக்கின்றது. மன்னர் சல்மான் நிலையமே இச்சேகரிப்பை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மறைந்த மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் ஆல் சுஊத் ((ரஹ்) அவர்களின் ஆட்சிக் காலப்பகுதியில் றபாஹ் மற்றும் பைத் லாஹியா போன்ற பலஸ்தீன நகரங்களில் இஸ்ரேலினால் தாக்குதலுக்குள்ளான நகரங்களை மீளக்கட்டியெழுப்ப சவுதி பாரிய உதவிகளை பலஸ்தீன மக்களுக்குச் செய்திருக்கின்றது.

1700 குடியிருப்புத் தொகுதிகள், பாடசாலைகள், மருத்துவ நிலையங்கள், குடிநீர் வசதிகள், கலாசார நிலையங்கள் மற்றும் சந்தைத் தொகுதிகள் என தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் அமையப் பெற்ற பூரணமான நகரங்களை சவுதி அரசு தனது நிதியுதவியுடன் பலஸ்தீன மக்களுக்கு ஏற்படுத்தியிருந்தது. இப்பாரிய மனிதாபிமான உதவிகளை பலஸ்தீன மக்கள் இன்றும் நன்றியுணர்வோடு நினைவுகூருகின்றனர்.

மெளலவி எம்.ஏ.எம்.றபீஸ் (எம்.ஏ)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT