மஹிந்தஅணி முன்வைக்கும் தவறான வாதங்கள்! | தினகரன்

மஹிந்தஅணி முன்வைக்கும் தவறான வாதங்கள்!

உள்ளூராட்சித் தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் நடந்து முடிந்திருக்கின்றது. இதனை இத்தேர்தலில் போட்டியிட்ட எல்லா அரசியல் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் ஏற்றுக் கொண்டுள்ளதோடு, இத்தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட அமைப்புகளும் உறுதிப்படுத்தி உள்ளன.

சுதந்திர இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் நடைபெற்ற மிகவும் அமைதியானதும், வன்முறைகள் மிகவும் குறைந்ததுமான தேர்தலாகவே இத்தேர்தல் விளங்குகின்றது. இம்முறை புதிய தேர்தல் முறைமையை அடிப்படையாகக் கொண்டுதான் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் முறைமையில் விருப்புவாக்கு முறைமை கிடையாது. மாறாக வட்டார மற்றும் விகிதாசார முறைமைகளை உள்ளடக்கிய கலப்பு முறைமைத் தேர்தலே இது.

நாட்டிலுள்ள 340 உள்ளூராட்சி மன்றங்களுக்காக 8293 மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கென கடந்த சனியன்று (10.02.2018) நடாத்தப்பட்ட இத்தேர்தலில் சுமார் 60 ஆயிரம் அபேட்சகர்கள் களமிறங்கி இருந்தனர். 15.8 மில்லியன் மக்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்த இத்தேர்தலில், சுமார் 12 மில்லியன் மக்கள் வாக்களித்து தம் பிரதிநிதிகளைத் தெரிவு செய்துள்ளனர். இதனூடாக ஒவ்வொரு வட்டாரமும் தம் மக்கள் பிரதிநிதிகளைப் பெற்றுக் கொண்டுள்ளன.

இத்தேர்தல் முடிவுகளின்படி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 49,419,952 வாக்குகளைப் பெற்றுள்ளது. அதாவது அளிக்கப்பட்டுள்ள வாக்குகளில் 44.65 வீதமாகும். ஆனால் அளிக்கப்பட்ட வாக்குகளில் 45.35 வீதமான வாக்குகள் இப்பெரமுனவு-க்கு அளிக்கப்படவில்லை. இதற்கு இப்பெரமுனவுக்கு எதிரான நிலைப்பாடு அல்லது இப்பெரமுனவை விரும்பாமை காரணமாக அமைந்திருக்க முடியும்.

இருந்த போதிலும் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளத் தவறியுள்ள முன்னாள் ஜனாதிபதியான பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, இப்பெரமுன நேற்றுமுன்தினம் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு, 'இது அரசுக்கு எதிரான மக்களின் வெளிப்பாடு. அதனால் அரசாங்கம் பாராளுமன்றத்தைக் கலைத்து , பாராளுமன்றத் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்றுஅரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்திருக்கின்றார்.

ஆனால் இந்தக் கோரிக்கையை விடுப்பதற்கு முன்னர் பல விடயங்களை இவர் மறந்துள்ளார் என்பது மறைக்க முடியாத உண்மை. அதாவது 44.65 வீத மக்கள்தான் இப்பெரமுனவுக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் அரைவாசிக்கும் மேற்பட்ட மக்கள் இப்பெரமுனவுக்கு வாக்களிக்கவில்லை. அதனால் 44.65 வீதமான வாக்குகளை மாத்திரம் வைத்துக் கொண்டு அதனை முழுநாட்டு மக்களினதும் அபிப்பிராயம் என்று எந்த அடிப்படையில் குறிப்பிட முடியும் என்ற வினா எழுகின்றது.

அதேநேரம், 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு 5.77 மில்லியன் வாக்குகளை அதாவது 47.58 வீதமான வாக்குகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த பெற்றார். ஆனால் இம்முறை அவர் ஆதரவு நல்கிய பெரமுன 4.95 மில்லியன் வாக்குகளையே, அதாவது 44.65 வீத வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளது. இது ஜனாதிபதித் தேர்தலை விடவும் இம்முறை இவர் ஆதரவு நல்கிய பெரமுன பெற்றுள்ள வாக்குகளில் தெளிவான வீழ்ச்சியை வெளிப்படுத்தி நிறுகின்றது.

மேலும், இது உள்ளூராட்சி மன்றங்களுக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தலாகும். இவ்வகைத் தேர்தலில் குடும்பம், உறவு முறைகளுக்கும் ஊருக்கும்தான் அதிக முன்னுரிமை அளிப்படுமேயொழிய தேசிய மட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.

அத்தோடு உள்ளூராட்சித் தேர்தலானது ஜனாதிபதியையோ, பிரதமரையோ, அரசாங்கத்தையோ மாற்றக் கூடிய தேர்தலும் அல்ல. இங்கு கிராம மட்ட உட்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகளுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும். அதனால் இவ்வாறான விடயங்களை முன்னாள் ஜனாதிபதி வசதியாக மறந்தபடியே இக்கோரிக்கையை விடுத்திருக்கின்றார்.

அதனால்தான் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, 'இத்தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், எமக்கும் மாத்திரமல்லாமல் முன்னாள் ஜனாதிபதியான பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எதிராக வாக்களித்துள்ள 6.1 மில்லியன் மக்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை' என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

அதுதான் உண்மை. பொதுஜன பெரமுன பெற்றுக் கொண்ட வாக்குகளை விடவும் அதற்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள வாக்குகளே அதிகமாகக் காணப்படுகின்றன. இதனை மறுக்க முடியாது.

ஆகவே தவறான வாதங்களை முன்வைத்து அரசியல் நலன்களை அடைந்து கொள்ளும் வகையில் மக்களை பிழையாக வும், தவறாகவும் வழிநடத்த முயற்சிப்பது ஆரோக்கியமானதல்ல. அது நாட்டின் பொருளாதார விமோசனத்திலும் சுபீட்சத்திலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்துவதாக அமைந்துவிட முடியும். அது நாட்டுக்கு ஏற்ற நடவடிக்கையும் அல்ல.மாறாக நாட்டின் முன்னேற்றத்திலும், அபிவிருத்தியிலும் சிரத்தை கொண்டு செயற்பட வேண்டியது முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட ஒவ்வொருவரதும் பொறுப்பும் கடமையும் ஆகும் என்பதுதான் மக்களின் நம்பிக்கையாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.


Add new comment

Or log in with...