யூத குடியேற்றங்கள் தொடர்பில் இஸ்ரேலுக்கு டிரம்ப் எச்சரிக்கை | தினகரன்

யூத குடியேற்றங்கள் தொடர்பில் இஸ்ரேலுக்கு டிரம்ப் எச்சரிக்கை

இஸ்ரேலிய குடியேற்றங்கள் பலஸ்தீனத்துடனான அமைதி முயற்சியில் சிக்கலை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அந்த விவகாரம் தொடர்பில் அவதானம் செலுத்த வலுயுறுத்தியுள்ளார்.

பலஸ்தீனர்கள், அதேபோன்று இஸ்ரேலியர்களும் அமைதியை ஏற்படுத்த தயாராக இல்லை என்று தான் நம்புவதாகவும் அவர் இஸ்ரேலிய பத்திரிகை ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

ஜெரூசலத்தை இஸ்ரேல் தலைநகராக கடந்த டிசம்பரில் அங்கீகரித்த டிரம்ப் மீது பலஸ்தீனர்கள் கோபத்தை வெளியிட்டு வருகின்றனர். எனினும் பலஸ்தீன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்பும் வரை அதன் உதவிகளை நிறுத்தி வைப்பது குறித்து டிரம்ப் எச்சரித்து வருகிறார்.

இந்நிலையில் இஸ்ரேலிய பழைமைவாத ‘யிஸ்ராயெல் ஹயோம்’ பத்திரிகைக்கு டிரம்ப் வழங்கிய பேட்டியில் அவர் இந்த புதிய கருத்தை வெளியிட்டுள்ளார். இந்த பேட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசுரிக்கப்பட்டது.

இதில் அமெரிக்கா எப்போது தனது அமைதித் திட்டத்தை முன்வைக்கும் என்று கேட்கப்பட்டபோது, “என்ன நடக்கிறது என்று நாம் பார்ப்போம். தற்போதைய நிலையில் பலஸ்தீனர்கள் அமைதியை ஏற்படுத்துவதாக இல்லை, அவர்கள் அதற்குள் நுழையவில்லை. இஸ்ரேலை எடுத்துக் கொண்டால், அவர்களும் அமைதியை ஏற்படுத்த விருப்பம் கொண்டவர்களா என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. என்ன நடக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது” என்றார் டிரம்ப்.

இஸ்ரேலிய குடியேற்றங்கள் அமைதி முயற்சியின் ஓர் அங்கமாக இருக்குமா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “குடியேற்றங்கள் பற்றி நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம். குடியேற்றங்கள் ஒருவகையில் மிகச் சிக்கலானது. அமைதியை ஏற்படுத்துவதில் எப்போதும் சிக்கலானது. எனவே, குடியேற்றங்கள் தொடர்பில் இஸ்ரேல் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று டிரம்ப் குறிப்பிட்டார். 1967இல் மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது தொடக்கம் அங்க சுமார் 140 குடியேற்றங்களில் 600,000க்கும் அதிகமான யூதர்கள் வாழ்கின்றனர். இந்த குடியேற்றங்கள் சட்ட விரோதம் என்ற சர்வதேச சட்டம் கருதுகிறது. 


Add new comment

Or log in with...