இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலும் பங்களாதேஷ் அணித் தலைவர் இல்லை | தினகரன்

இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலும் பங்களாதேஷ் அணித் தலைவர் இல்லை

 

இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து பங்களாதேஷ் அணித்தலைவர் சகிப் அல் ஹஸன் விலகியுள்ளார்.

சகிபின் உபாதை முழுமையாக குணமாகவில்லை என்பதால் இரு அணிகளுக்குமிடையில் நடைபெறவுள்ள டி20 தொடரிலும் அவர் விளையாட மாட்டார் என அந்நாட்டு கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் மின்ஹாஜுல் ஆப்டீன் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், “டி20 குழாமில் சகிப் இணைக்கப்பட்டுள்ள போதிலும், அவர் தொடரில் விளையாடுவது இதுவரையில் உறுதியாகவில்லை. சகிப் அல் ஹசனின் உபாதை குறித்து கருத்து தெரிவித்துள்ள வைத்தியர்கள் சகிப் அல் ஹசன் இன்னும் இரு வாரங்கள் ஓய்வில் இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அதுமாத்திரமின்றி தற்போது அவருடைய கைவிரலில் போடப்பட்ட கட்டுக்கள் அகற்றப்பட்டாலும், அது குணமடைவதற்கு இன்னும் சில நாட்கள் தேவைப்படுகின்றது.

எனவே எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சுதந்திர கிண்ண முத்தரப்பு டி20 தொடரை கருத்திற்கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரரும், இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடர் முதல் புதிய அணித்தலைவராக நியமிக்கப்பட்டவருமான 30 வயதுடைய சகிப் அல் ஹசன், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இறுதியாக இடம்பெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியின் போது இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமாலின் பிடியெடுப்பொன்றை மேற்கொள்ள முற்பட்ட வேளையிலேயே மைதானத்தில் விழுந்து உபாதைக்குள்ளானார். 


Add new comment

Or log in with...