தாய்நாட்டின் தனித்துவம் காக்க இறுதி மூச்சுவரை போராடிய வீரர் | தினகரன்

தாய்நாட்டின் தனித்துவம் காக்க இறுதி மூச்சுவரை போராடிய வீரர்

கல்வியியலாளராகவும், மதப் பற்றுள்ளவராகவும், சமூகப் பற்றுடையவராகவும் விளங்கி, பின்னர் சுதந்திரப் போராட்ட வீரராகத் தன்னை மாற்றிக் கொண்டவர் டி.பி. ஜயதிலக்க. களனியில் உள்ள வராகொட கிராமத்தில் டொன் டானியல் ஜயதிலக்க - டோனா எலிசியானா (எலிசி) பெரேரா வீரசிங்க தம்பதியினருக்கு மூத்த ஆண் மகனாக 1868 பெப்ருவரி 13இல் டி.பி. ஜயதிலக்க பிறந்தார்.

பௌத்த மதமும் தேசியவாதமும் புத்துயிர் பெற்றிருந்த காலப் பகுதியிலேயே டி. பி. ஜயதிலக்க பிறந்தார்.

வித்தியாலலங்கார பிரிவெனாவின் தாபகரமான வணக்கத்திற்குரிய ரத்மலான ஸ்ரீதர்மலோக மகா நாயக்கதேரர் டி. பி. க்கு வித்தியாரம்பம் செய்து வைத்து அவரை கல்விப்பாதையில் பயணிக்க வைத்தார். ஏழுவயதில் அவர் தனது ஆரம்பக் கல்வியை வராகொடவில் உள்ள ஞானஸ்நான பாடசாலையில் பெற்றார். அதே வருடம், அவர் பௌத்தம், பாளி, சிங்களம் மற்றும் சமஸ்கிருதம் ஆகியவற்றை வித்தியாலங்காரவில் பயின்றும் வந்தார். அவருக்கு 13 வயதாக இருக்கும் போது, மேலதிக கல்வியைப் பெற்றுக் கொள்ளவென கொழும்பு வெஸ்லி கல்லூரியில் தனது திறமைகளை வெளிப்படுத்திய அன்னார் தனது ஆழ்ந்த நூலறிவுத் தாகத்தைத் தணித்துக் கொள்வதில் ஏற்பட்டிருந்த தடைகள் அத்தனையையும் தகர்த்தெறிந்தார்.

தனது 22ஆவது வயதில் தனது உயர்தரக்கல்வியை வெஸ்லிக் கல்லூரியில் நிறைவு செய்து கொண்ட அவர், இந்தியாவில் உள்ள கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பைத் தொடர்வதென தீர்மானித்தார்.

இந்த நேரத்தில்தான், நாட்டில் பௌத்தமத வளர்ச்சிக்கு ஆதரவளித்துவந்தவரும் பௌத்த பாடசாலைகளை தாபிப்பதில் முன்னோடியாகவும் திகழ்ந்தவருமான ஹென்றி ஸ்ரீ ஒல்கொட் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு டி. பி.க்கு கிடைத்தது. கண்டியில் பௌத்த உயர் பாடசாலையை (தற்போதைய தர்மராஜ கல்லூரி) தாபிப்பதற்கான தனது ஆதரவை ஒல்கொட்டுக்கும் பிரம்பஞான சங்கத்திற்கும் வழங்கிய பின்னர், அந்தப் பாடசாலையின் அதிபராக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு 22 வயதே ஆகியிருந்த போதிலும், மேற்கத்தைய மற்றும் பௌத்த கல்வி முறைமைகளில் நிரம்பிய அறிவாற்றல் மிக்கவராக அவர் திகழ்ந்ததுடன் ஒல்கொட்டினால் முன்னின்று தாபிக்கப்பட்டிருந்த புதிய பௌத்த கல்வி இயக்கத்தில் தலைமைத்துவ வகிபங்கை ஆற்றுவதற்கு முற்றிலும் பொருத்தமானவராகவும் விளங்கினார்.

கண்டியில் தனது விருப்பத்திற்குரிய சிங்கள மக்களின் வரலாறு மற்றும் இலக்கியம் ஆகிய பாடங்களை அனைவரும் கற்றுத் தேற வழிவகுத்தார். 'சத்தியோதய' எனும் பெயரில் பத்திரிகையொன்றை ஆரம்பித்து அதற்கு பல கட்டுரைகளை எழுதி வந்தார். சிங்கள மக்களின் கடந்தகால வாழ்வியற் கோலங்களையும் சாதனைகளையும் கற்றுத் தேர்ந்த டி.பி, அத்தகைய தலைவர்களில் ஒருவரான வெலிவிட்ட சங்கராஜ தேரரைப் பற்றி ஆய்வு செய்து எழுதினார். கடந்த 1896 ஆம் ஆண்டில் ஆங்கிலம் மற்றும் இலத்தீன் மொழியில் சிறப்புத் தரத்தில் பட்டதாரியானார். அதனைத் தொட்ர்ந்து, கண்டிப் பாடசாலையின் தரத்தை உயர்த்துவதற்கென அவர் மேற்கொண்ட அயரா உழைப்பினைக் கருத்திற் கொண்டு கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் உப அதிபராக நியமிக்கப்பட்டார். இரண்டு வருடங்கள் கழிந்த நிலையில், மேற்படி கல்லூரியின் முதலாவது இலங்கை அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனந்தாக் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றி வந்த காலப் பகுதியிலேயே, பிரபல பௌத்த புலமையாளரும் ஆர்வாளருமான டொன் அந்திரிஸ் டி. சில்வா பதுவந்துவவின் புதல்வியான மல்லிக்காவைத் திருமணம் செய்தார். பெண்கள் கல்வித்துறையில் பின்தங்கியிருந்த அந்தக் காலப்பகுதயில், மல்லிகா விதிவிலக்காகத் திகழ்ந்தார். சிங்களம், பாளி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றின் நன்கு கற்றறிந்தவரான அவர், தனது கணவரின் செயற்பாடுகளுக்குப் பக்கபலமாக விளங்கினார்.

கல்வித்துறையில் மட்டுமின்றி, சமூகப்பணியிலும் டி. பி. தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டார். தனது அன்புத் தயாராரின் வழியில் தானம் வழங்கும் நிகழ்வில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திய அவர், 1890இல் இளம் பௌத்த வாலிபர் சங்கத்தை தாபித்தார்.

டி. பி. ஜயதிலக்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சங்கங்களின் ஆதரவுடன் தீவிர மதுவிலக்குப் போராட்டத்தில் இறங்கினார். குடியேற்ற நாடுகளுக்கான அரசின் செயலாளரைச் சந்திப்பது கடினமான காரியமாக இருந்த போதிலும், அவர் தலைமையில் துதுக்குழுவொன்று பிரித்தானியா சென்றது. 1913 இலங்கை திரும்பிய டி. பி. ஜயதிலக்க, இலங்கை உச்ச நீதிமன்ற வழக்குரைஞராக கொழும்பு புதுக்கடையில் உள்ள உயர் நீதிமன்ற நீதியரசர் வோல்டர் பெரேரா முன்னிலையில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். அதனையடுத்து, அவர் கொழும்பு, கண்டி, இரத்தினிபுரி மற்றும் குருநாகல் ஆகிய நீதிமன்றங்களில் வழக்குரைஞராக செயற்பட்டுவந்தார். எவ்வாறிருப்பினும், மதுவிலக்குப் போராட்டத்தை முன்னெடுக்கும் பொருட்டு, எப். ஆர். சேனநாயக்கவுடன் ஒன்றிணைந்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தவறணைகள் பலவற்றை மூட வைப்பதில் வெற்றிகண்டார்.

கடந்த 1915 இல் நடைபெற்ற சிங்கள- முஸ்லிம் கலவரத்தின் பின்னர், நியாய விசாரணைகள் எதுவும் நடாத்தப்படாத நிலையில், பிரித்தானிய ஆட்சியாளர்களால் சிறையில் அடைக்கப்பட்ட பௌத்த தலைவர்களுள் டி. பியும் ஒருவராக இருந்தார். அவர்களை விடுவிப்பதில் போராடிய நிலையில், பிரித்தானிய அரசுக்கும் கவுன்சிலுக்கும் அவர்களின் நியாயங்களை எடுத்துரைக்கும் பொருட்டு ஈ. டபிள்யூ. பெரேராவும் சேர். பொன். இராமநாதனும் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் அனைவரும் 46 நாட்களின் பின்னர் நியாய விசாரணை எதுவுமின்றி விடுதலை செய்யப்பட்டனர். அப்பாவி மக்களை சிறையிலிருந்து விடுவிக்கவென டி. பி. 1915 டிசம்பரில் இங்கிலாந்து சென்று வாதாடினார். அவரின் இத்தகைய சமூகப்பற்றுமிக்க சேவைகள் அவரை ஒரே இரவில் அரசியல்வாதியாக்கியதெனலாம். இங்கிலாந்தில் இருந்த காலகட்டத்தில், இலங்கை தேசிய காங்கிரஸின் செயற்பாடுகளை அங்கு மேற்கொண்ட அவர், இந்திய, பர்மிய சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் கைகோர்த்து செயற்பட்டார். பிரித்தானிய அரசு வேறுபட்ட குழுக்களை புறம்பான உரிமைகளை வழங்க முற்பட்ட போது, இலங்கை 2000 வருடங்களுக்கு மேலாக பல்லின, பல கலாசாரம் மிக்க கொண்டநாடாக விளங்குவதாக விவாதித்து அத்தகைய நடவடிக்கையை எதிர்த்தார்.

கடந்த 1919 இல் டி. பி. ஜயதிலக்க இலங்கையில் மறுபடியும் கால் பதிக்கையில் அவர் தேசியத் தலைவரொருவராக மதிக்கப்பட்டதுடன் அவருக்கு மகத்தான வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பம்பாயில் கப்பலில் இருந்து இறங்கிய அவர் மன்னார் ஊடாக கொழும்புக்குப் பயணம் செய்தார். மக்கள் வெள்ளம் திரண்டு வந்து அவரை வரவேற்றபோது “வரவேற்புக்களையோ அல்லது ஊர்வலங்களையோ ஏற்பதில்லையென நான் தீர்மானித்துள்ளேன். எதுவித எதிர்பார்ப்பும் எல்லாமலேயே எனது தாய் நாட்டிற்கு என்னாலானவற்றை செய்வதில் நம்பிக்கைகொண்டுள்ளளேன். எளிமையான முறையில் சாதாரண பொதுமக்களுடன் கூடி வாழ்வதிலேயே நான் திருப்தி காண்கின்றேன்" எனவும் கூறினார்.

கடந்த 1931 இல் டொனமூர் சிர்திருத்தங்களின் கீழ் தேர்தல்கள் நடைபெற்றபோது, டி. பி. களனி தேர்தல் தொகுதியில் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். சபை முதல்வராகவும் உள் நாட்டலுவல்கள் அமைச்சராகவும் நிகழ்ந்த அவர், கல்வியின் முக்கியத்துவத்தையும் வறுமை ஒழிப்பையும் வலியுறுத்தி முதலாவது அரசசபையில் கடந்த 1931 செப்டெம்பரில் வரவு செலவுத் திட்ட உரை நிகழ்த்தியிருந்தமை குறிப்பி்டத்தக்கது. அன்னார் கடந்த 1944 மே 29இல் காலமானார்.

விமுக்தி பெர்னாண்டோ


Add new comment

Or log in with...