பேராசிரியர் கஸ்தூரிரங்கனின் யோசனை தமிழக மாற்றத்துக்கு உதவும் - கமல்ஹாசன் நம்பிக்கை | தினகரன்

பேராசிரியர் கஸ்தூரிரங்கனின் யோசனை தமிழக மாற்றத்துக்கு உதவும் - கமல்ஹாசன் நம்பிக்கை

 

அமெரிக்காவில் சந்தித்த பேராசிரியர் கஸ்தூரிரங்கனின் யோசனை தமிழக மாற்றத்துக்கு உதவும் என்று கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் உள்ள ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் பேசினார்.

அப்போது தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமத்தை தத்து எடுக்கப்போவதாக கூறினார்.

அவர் அளித்த பேட்டியில், நானும் ரஜினியும் நண்பர்களாக இருந்தாலும், அரசியல் என்பது வேறு. அரசியலில் எனது நிறம் காவியாக இருக்காது என்றும் தெரிவித்தார். நாளை நமதே என்ற இணையதளத்தையும் தொடங்கினார்.

தமிழ் கலாசாரப்படி கமல் வேட்டி அணிந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடினார். பேராசிரியர்களை சந்தித்து பேசினார்.

அப்போது கஸ்தூரி ரங்கன் என்ற தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியரை சந்தித்தார்.

அவரிடம் தமிழ்நாட்டின் மாற்றத்துக்கு என்ன செய்யவேண்டும். அதற்கு எவ்வாறு செயல்படலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.அவர் கூறிய ஆலோசனைகள் குறித்து கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

பேராசிரியர் கஸ்தூரி ரங்கனை போஸ்டனில் சந்தித்தேன். போஸ்டனில் நடந்த சந்திப்பின் போது புதிய யோசனை கூறிய அவருக்கு நன்றி.

தமிழக மாற்றத்துக்கு காஷ் என்கிற கஸ்தூரிரங்கனின் ஆலோசனை உதவும்.

உங்களுடைய கருத்துக்கள் தமிழகத்தின் ஒளிமயமான மாற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும் என்ற உத்திரவாதத்தை எனக்கு அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Add new comment

Or log in with...