Thursday, March 28, 2024
Home » இயேசு பறைசாற்றும் வெளிவேடக்காரர்கள்

இயேசு பறைசாற்றும் வெளிவேடக்காரர்கள்

by damith
November 7, 2023 11:42 am 0 comment

பொதுக்காலத்தின் 31ஆம் ஞாயிறை கடந்த 5ஆம் திகதி நாம் நினைவு கூர்ந்தோம். அன்றைய வாசகங்கள் தங்களை மக்களின் தலைவர்களாகக் காட்டிக்கொள்பவர்கள் எப்படிப்பட்ட எடுத்துக்காட்டான வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதை நமக்குக் கற்பிக்கின்றன.

இஸ்ரயேல் மக்களை ஆண்ட தலைவர்களிடம் விளங்கியதை அன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. “நீங்களோ நெறி தவறி நடந்தீர்கள். உங்கள் போதனையால் பலரை இடறி விழச்செய்தீர்கள். லேவியோடு நான் செய்த உடன்படிக்கையைப் பாழாக்கிவிட்டீர்கள்.” என்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர். “ஆதலால் நானும் உங்களை மக்கள் அனைவர் முன்னிலையிலும் இழிவுக்கும் தாழ்வுக்கும் ஆளாக்குவேன்; ஏனெனில், நீங்கள் என் வழிகளைப் பின்பற்றி ஒழுகவில்லை; உங்கள் போதனையில் ஓரவஞ்சனை காட்டினீர்கள்.”

என்று வெளிப்படும் இறை தந்தையின் கடுமையான வார்த்தைகள் குருக்களின் இறை நம்பிக்கையற்ற வாழ்வையும் கடவுளுக்கு எதிராக அவர்கள் இழைத்த துரோகச் செயல்களையும் எடுத்துக்காட்டுகின்றன.

ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் மக்கள் மத்தியில் தங்களைத் தலைவர்களாகக் காட்டிக்கொண்டு எடுத்துக்காட்டான வாழ்க்கை வாழாத மறைநூல் அறிஞரையும், பரிசேயரையும் கடுமையாகக் கண்டிக்கிறார் இயேசு. “மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள். சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வரமாட்டார்கள். தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள்மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள்” என்று இயேசு கூறும் வார்த்தைகள்,

இறை தந்தை வெளிப்படுத்திய கடுமையான வார்த்தைகளை ஒத்திருக்கின்றன.

இயேசு ஆண்டவர் மறைநூல் அறிஞரையும், பரிசேயரையும் கண்டிப்பதை மிக நீண்டதாகக் கொடுத்திருக்கின்றார் மத்தேயு நற்செய்தியாளார்.

அதாவது 1- முதல் 36 வசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் முதல் 12 வசனங்களே இன்றைய நற்செய்தியாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்விருவரின் தவறான வாழ்வியல் நெறிமுறைகளையும், பொய்யும் புரட்டும் நிறைந்த போலியான வாழ்வையும் மக்களுக்கு எடுத்துக்காட்டும் இயேசு, அவர்கள் கூறுவது அனைத்தையும் செய்யுங்கள் என்று கூறுகின்றார்.

அப்படியென்றால் என்ன அர்த்தம்? இயேசு கூறும் இறையியல் கருத்துக்கள் பரிசேயரின் இறையியல் கருத்துக்களுடன் ஒத்திருந்தன. அவர்கள் வழிநின்று பழைய உடன்படிக்கையின் 39 நூல்களையும் இயேசு ஏற்றுக்கொண்டிருந்தார். அவர்களின் மரபு போதனைகளில் காணப்பட்ட திருச்சட்டச் சுருக்கமும், அவர்கள் போதித்து வந்த உயிர்த்தெழுதல் பற்றிய நம்பிக்கையும் அவருக்கு ஏற்புடையதாக இருந்தன.

இதுபோல இன்னும் பல போதனைகளிலும் கருத்துக்களிலும் இயேசுவின் கருத்துக்கள் பரிசேயரின் கருத்துக்களையே பிரதிபலித்தன. ஆகவே, இறையியல் போதனைகளைப் பொறுத்த வரையில் பரிசேயர்களைப் பின்பற்றுங்கள், ஆனால் அறநெறி போதனைகளைப் பொறுத்தவரையில் அவர்களின் வழிகளை ஏற்கவேண்டாம் என்பது இயேசுவின் கருத்தாக இங்கு ஒலிக்கின்றது. அதனால்தான் குருட்டு வழிகாட்டிகளே என்கின்றார். அத்துடன், வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! என்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தி அவர்களைக் கடுமையாகச் சாடுகின்றார் இயேசு.

இன்றைய கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் விளம்பரம் தேடும் கிறிஸ்தவர்களாகவே இருக்கின்றனர். எல்லாவற்றிலும் தங்கள் பெயர் முதலில் இருக்கவேண்டும் என்று விரும்புவதைப் பார்க்கின்றோம். மேலும் கல்வெட்டுகளில் தனது பெயரோ அல்லது குடும்ப பெயரோ பொறிக்கப்படுவதாக இருந்தால் எத்தனை பெரிய தொகையையும் கொடுக்க முன்வருகின்றனர் பலர்.

இல்லையென்றால், நமக்கென்னவென்று அப்படியே ஒதுங்கிக்கொள்கின்றனர். ஆனால் அதேவேளையில், எங்கள் பெயரை அறிவிக்க வேண்டாம் என்று கூறி உதவிசெய்யும் எத்தனையோ கிறிஸ்தவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர். இன்றையத் துறவற வாழ்விலும் கூட பல துறவியர் தான் ஒரு அருள்பணியாளர், அருள்சகோதரி என்பதைத் தாண்டி, சபைத்தலைவர், மாநிலத்தலைவர், இல்லத்தலைவர், தாளாளர், தலைமையாசிரியர், முனைவர், ஒருங்கிணைப்பாளர், முதன்மைகுரு, மறைவட்ட குரு என்ற பட்டங்களில் எதாவது ஒன்றைத் தனதாக்கிக்கொள்ள பாடாய்ப்படுகின்றனர். அதாவது இவ்வுலகம் தரும் வெற்றுப்புகழ்ச்சிகளிலும், ஆடம்பர இன்பங்களிலும் தங்களைத் தாங்களே முற்றிலும் கரைத்துக்கொள்கின்றனர்.

இன்றைய உலகின் மக்கள் விரும்புவது வார்த்தை ஜாலங்கள் நிறைந்த தலைவர்களை அல்ல மாறாக, தங்கள் வாழ்க்கையை முற்றிலுமாக் மக்களுக்காக அர்பணிக்கக் கூடியவர்களைத்தான். நன்கு விளைந்த பயிர்கள்தாம் தலைசாயும் என்பார்கள். அவ்வாறே, அறிவிலும், அனுபவத்திலும், மனதிலும் பக்குவப்பட்ட தலைவர்கள்தாம் தாழ்மையான மனதுடன் தலைநிமிர்ந்து வாழ்வர். இதனைத்தான் இயேசுவும், “தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்” என்று நற்செய்தியின் இறுதியில் கூறுவதைக் காண்கின்றோம். ஆகவே, நாமும் பணிவும் துணிவும் கொண்டவர்களாக முன்மாதிரியான வாழ்க்கை வாழ்ந்து இயேசுவுக்குச் சான்று பகரும் உண்மைத் தலைவர்களாக ஒளிர்வோம்.

அருட்பணி சூசைமாணிக்கம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT