Friday, March 29, 2024
Home » யாழ். போதனா வைத்தியசாலையில் 5 நாட்களில் 1052 பேருக்கு இலவச கண்புரை சத்திர சிகிச்சை
'புனர்வாழ்வு புதுவாழ்வு' அமைப்பின் ஏற்பாட்டில்

யாழ். போதனா வைத்தியசாலையில் 5 நாட்களில் 1052 பேருக்கு இலவச கண்புரை சத்திர சிகிச்சை

வட மாகாண ஆளுநர் சார்ள்ஸ் உட்பட பிரமுகர்கள் பங்கேற்பு

by damith
November 7, 2023 10:56 am 0 comment

யாழ் வைத்தியசாலையில் ஐந்து நாட்களில் 1052 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவுக்கு வந்துள்ளது. கண் பார்வை குன்றிய வயது முதிர்ந்த அனைவருக்கும் கண்புரை சத்திர சிகிச்சையின் மூலம் வடக்கில் தொடர்ந்து உதவிகள் வழங்க தயாராக உள்ளதாக ‘புனர்வாழ்வு புதுவாழ்வு’ அமைப்பின் இங்கிலாந்து நாட்டுக்கான தலைவர் பொறியியலாளர் கலாநிதி வேலாயுதம் சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் உலக பார்வையாளர் தினத்தை முன்னிட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கான கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொள்கின்ற செயற்றிட்டத்தின் கீழ் கடந்த 30 ஆம் திகதி முதல் இம்மாதம் 3 ஆம் திகதி வரை வைத்தியசாலை அத்தியட்சகர் சத்தியமூர்த்தியின் வழிகாட்டலுடன் கண் சிகிச்சை வைத்திய நிபுணர் மலரவன் தலைமையில் இடம்பெற்றது.

இதன் ஆரம்ப நிகழ்வில் வட மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். இரத்தினபுரி, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் வைத்தியசாலைகளின் கண் சிகிச்சை வைத்திய நிபுணர்கள் மற்றும் தாதிமார் குழுவினர்கள் கலந்து கொண்டனர். இதில் அநுராதபுரம், யாழ்ப்பாணம், மதவாச்சி, பதவிய, வவுனியா பகுதிகளிலுள்ள 1052 பேர் ஐந்து நாட்களில் கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து நாட்டின் ‘புனர்வாழ்வு புதுவாழ்வு’ அமைப்பின் தலைவர் பொறியியலாளர் கலாநிதி சர்வேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்;

நாடளாவிய ரீதியில் கண்பார்வை குன்றிய அனைத்து மக்களுக்கும் கண்புரை சத்திர சிகிச்கையினை இலவசமாக மேற்கொண்டு இந்நாட்டில் முற்றாக இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்த சத்திர சிகிச்சையின் மூலம் யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் இரு கண்களுக்கும் சத்திர சிகிச்சை மேற்கொள்ளக்கிடத்தமையை பாக்கியமாக கருதுகின்றனர். கடந்த காலங்களில் எமது புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பின் ஊடாக ஒரு கண் பார்வை குன்றியவர்களுக்கு கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு பார்வை பெற்றுக் கொண்டவர்கள் இத்தினத்தில் மறு கண்ணையும் கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொண்டு கண் பார்வையைப் பெற்றுக் கொள்வது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாக இருக்கிறது. ஒரு நோயாளி ஏற்கனவே தன்னுடைய வலது கண்ணுக்கு கண்புரை சத்திர சிகிச்சை செய்து கண்ணொளியைப் பெற்றுக் கொண்டவர் விசேடமாக இத்தினத்தில் இடக் கண்ணில் கண்புரை சத்திர சிகிச்சையினை மேற்கொண்டு கண் பார்வையைப் பெற்றுக் கொண்டார். இதற்கு முக்கிய காரணம், யாழ் போதனா வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் மலரவனின் பங்களிப்பும் அவருடைய விடா முயற்சியும் கடும் உழைப்புமாகும்.

முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய வைத்தியசாலைகளின் கண் சத்திர சிகிச்சை நிபுணர்களை ஒருங்கிணைத்து யாழ்ப்பாணத்தில் செய்வதற்கான அனுமதியை வழங்கியமை விசேட அம்சமாகும்.

கண் வைத்திய நிபுணர் மலரவன் வடக்கில் இருந்து முற்றாக கண்புரை சத்திர சிகிச்சையை மேற்கொண்டு வயது முதிர்ந்த கண்பார்வை குன்றிய அனைவருக்கும் கண் பார்வை வழங்குவதே அவரது நோக்கமாகும். அதற்கு நாங்கள் முழு ஆதரவையும் வழங்கத் தயாராக இருக்கின்றோம். அதே போன்று இந்த வேலைத் திட்டத்தை முழுக்க வடமாகாணத்தில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று இல்லை. நாடு முழுக்கவும் செய்யத் தயாராக இருக்கின்றோம்.

வடக்கில் செய்வதைப் போன்று கிழக்கு, வடமேல், வட மத்திய மாகாணம் உள்ளிட்ட சகல மாகாணங்களிலும் செய்யலாம். வட மாகாணத்தில் உள்ள கண் வைத்திய நிபுணர்களினால் வழங்கப்படும் ஒத்துழைப்புக்களைப் போன்று மேற்படி மாகாணங்களிலும் கிடைக்கப்பெற்றால் ஏனைய மாகாண மட்டங்களில் இத்திட்டத்தை மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றோம். அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யவுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பின் ஊடாக இலங்கை வாழ் மக்களுக்கு சமூகப் பணியாற்றி வருகின்றேன். யுத்தத்தின்போது அரசாங்கத்தினால் மீளக் குடியேற்றப்பட்ட பகுதிகளில் பாடசாலைக் கட்டடங்கள், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் கட்டட நிர்மாணப் பணிகள், மலசல கூடங்கள், தண்ணீர் வசதிகள் எனப் பல அபிவிருத்திப் பணிகளையும் வாழ்வாதார உதவிகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து வருகின்றோம்.

வாழைச்சேனை பறங்கியாமடு, திருகோணமலை போன்ற மீள் குடியேற்றப்பட்ட பகுதிகளில் வீடமைப்பு வசதிகளையும் வாழ்வாதார உதவிகளையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம். அதே போன்று அங்குள்ள பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்காகவும் செயற்பட்டு வருகின்றோம்.

மலேசியாவிலுள்ள அலாகா பவுண்டேசன் மற்றும் ஆனந்தா பவுண்டேசன் எங்களுடைய சேவையை அவதானித்து கண்புரை சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர். 2013 ஆம் ஆண்டு முதல் இந்த கண் சத்திர சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றோம். இது வரையிலும் நாடளாவிய ரீதியில் 20,000 பேரளவுக்கு சத்திர சிகிச்சை மேற்கொண்டுள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் உரையாற்றும் போது;

கண்புரை சத்திர சிகிச்சை இலவசமாக மேற்கொள்வதையிட்டு நான் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இப்படியான வைத்தியசாலையில் முதன் முறையாக மிகவும் குறைந்த வசதிகளைக் கொண்ட மாகாணத்தில் மிகப் பெறுமதியான வேலைகளைச் செய்வது என்பது மிகமிக பாராட்டத்தக்கது. இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். வைத்தியசாலையின் அத்தியட்சகர் சத்தியமூர்த்தி, கண் சத்திர சிகிச்சை நிபுணர் மலரவன், தாதிமார்கள், உத்தியோகஸ்தர்கள் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நோயாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அரச வைத்தியர்களின் முக்கிய பொறுப்பாகும். குறிப்பாக அரச வைத்தியசாலைகள் தூய்மையாக காணப்படாத நிலைமையே காணப்படுகிறது. ஆனால் அதற்கு மாறாக இன்று வைத்தியசாலைகள் தனியார் வைத்தியசாலைகள் போன்று அரச வைத்தியசாலைகள் காட்சியளிக்கின்றது. யாழ் வைத்தியசாலையை பார்க்கின்றபோது இங்கே அனைத்துச் சேவைகளும் நோயாளிகளுக்கு உரித்தான சலுகைகளும் வசதிகளும் தனியார் வைத்தியசாலை போல இயங்குகின்ற நிலைமைதான் இங்கு பார்க்கும் போது எனக்கு வியப்பாகவுள்ளது. எனவே இதனைச் செயற்படுத்துகின்ற யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் கண் சத்திர சிகிசைக்குப் பொறுப்பான வைத்திய நிபுணர் ஆகியோருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதேபோன்றே வைத்தியசாலையின் அனைத்துச் சேவைகளும் உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். மேலும் அரச வைத்தியசாலைகளுக்கு வருகின்ற நோயாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.

இப்படியான சேவைகளை வழங்குவது இலகுவான காரியமல்ல. ஒரு சவால்மிக்க விடயம். அந்தச் சவால்களை எப்படி எதிர்கொள்வது அந்தச் சவால்களை எப்படி வெற்றிகரமாக மாற்றிக் கொள்வது என்பது நாம் எல்லோரும் நன்றாக அறிந்திருக்க வேண்டிய விடயம். இந்த விடயங்களை இந்த வைத்தியசாலை செய்து கொண்டிருக்கிறது.

பார்வை குன்றியவர்களுக்கு பார்வை வழங்குவது என்பது மிகவும் முக்கியமான விடயம். இது சாதாரண விடயமல்ல. இந்த சிகிச்சைகளை தனியார் வைத்தியசாலையில் பெறுவது என்றால் போக்குவரத்து தங்குமிடம் வசதிகள் என்று பார்த்தால் சுமார் இரண்டு இலட்சம் ரூபா செலவாகும். ஆகவே இந்த சத்திர சிகிச்சையின் பெறுமதி என்னவென்று நாங்கள் நன்கு அறிந்து கொள்ளலாம். எனவே இந்த சேவையின் பெறுமதி பற்றி நான் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. ஐந்து நாட்களுக்குள் 1000க்கும் மேற்பட்டோருக்கு கண் சத்திர சிகிக்சை மேற்கொள்ளப் போகின்றார்கள். இந்தச் சேவைக்கு நிதி உதவி செய்ய வேண்டியவர்கள் ஆதரவளிப்பவர்கள் தொடர்ந்து உதவியையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

தானத்தில் சிறந்த தானம் கண் தானம் என்பார்கள். இது ஒரு முக்கியமான பணி. இதற்காக உழைக்கின்ற அனைவரையும் இறைவன் ஆசிர்வதிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலையின் அத்தியட்சகர் சத்தியமூர்த்தி இங்கு கருத்து தெரிவிக்கையில்; 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொள்வது இலகுவான காரியமல்ல. ஏனைய வைத்தியசாலைகளிலுள்ள கண் சத்திர சிகிச்சை நிபுணர்களோடு ஒன்று சேர்ந்து இந்தச் சிகிச்சை திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றது. இதற்கு துணைபுரிகின்ற தாதியர்களாக இருக்கலாம், தொழில்நுட்பவியல் உத்தியோகஸ்தர்களாக இருக்கலாம் எவராக இருந்தாலும் திட்டமிட்டு தங்களுடைய கடமையை இரவு பகலாய் செய்வதன் மூலமே இந்தக் கண்புரை சத்திர சிகிச்சையை சிறப்பாக முன்னெடுக்க முடியும். அதேபோல், ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து வருகை தந்துள்ள வைத்திய நிபுணர்கள், தாதியர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

விசேடமாக, எல்லாவற்றிற்கும் மேலாக இங்கே இரவு பகலாக நித்திரையின்றி கடமை புரிகின்ற ஒருவர் இருக்கின்றார். அவர்தான் பொறியியலாளர் கலாநிதி வேலாயுதம் சர்வேஸ்வரன், புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பின் தலைவர். கண்சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் வைத்தியர் மலரவன் மற்றும் ஏனைய வைத்தியர்களோடு சேர்ந்து அவர், அலாகா பவுண்டேசன், ஆனந்த பவுண்டேசன் ஆகியோர்களுடைய நிதி உதவியைப் பெற்று இலங்கையில் வடக்கு மாகாணத்தில் ஆயிரக் கணக்கான கண் சத்திர சிகிச்சைகளைச் செய்வதற்கு மிகவும் காரணமானவர்.

அவர் நோயாளிகளை தன்னுடைய அம்மா, அப்பா போன்று தாங்கி அழைத்து வந்து இங்கு செய்யும் தொண்டை நான் மெச்சிப் பாராட்டுகின்றேன். ஒருவர் அல்ல எல்லோரும் ஒரே குழுமமாக இருந்து செய்யும் பணி மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இரத்தினபுரி வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் ஜமென்த பீரிஸ் இங்கு கருத்து தெரிவிக்கையில்; இந்த வைத்தியசாலைக்கு நட்பு ரீதியான உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இங்கு வருகை தந்துள்ளேன். யாழ்ப்பாணம் என்பது இலங்கையில் ஏனைய பகுதிகளுக்கு ஒரு முன்மாதிரியான இடமாகக் கொள்ள முடியும் என்று நான் கருதுகின்றேன். சிகிச்சை செய்யக் கூடிய வசதி வாய்ப்புகள், அதற்குரிய ஆளணிகள், நவீன முறையில் அமைந்துள்ள வாட் வசதிகள் எல்லாம் அமைந்துள்ளன. அவை இல்லா விட்டால் இந்தப் பெரு எண்ணிக்கையிலான மக்களுக்கு கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொள்ள முடியாது. எல்லோருடைய ஒத்துழைப்பும் அதற்குரிய வசதிகளும் அவசியம். யாழ் போதனா வைத்தியசாலை அதற்கு சிறப்பாக அமைந்துள்ளது. எனினும் இலங்கை முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் முக்கியமாக பொறியியலாளர் கலாநிதி வேலாயுதம் சர்வேஸ்வரனின் பங்களிப்பு அளப்பரியவை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு எல்லைப் பிரதேசத்திலுள்ள மதவாச்சி 31 பேர், அநுராதபுரம் 69 பேர் பதவிய, கெப்பித்திகொள்ளாவ சிங்கள கிராமப்புறங்கள் உட்பட யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, வட பகுதியில் இருந்து வருகை தந்த 150 பேர் வரை எல்லாமாக மொத்தம் 217 பேர் வரை கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டன.

இதற்கான அனுசரணையினை புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்புச் செய்து வருகின்றது. இவ்வமைப்பின் தலைவர் பொறியியலாளர் கலாநிதி வேலாயுதம் சர்வவேஸ்வரன் எந்நாளும் எங்களோடு இருக்கிறார். அதற்கான உதவிகளை அவரே செய்து தருகிறார். எல்லா மருத்துவப் பொருட்களையும் அவர் வாங்கித் தருவார். நீண்டகாலமாக சத்திர சிகிச்சை செய்ய இயலாமல் இருந்த ஆட்களை அந்த இடத்தில் இருந்து இங்கு அழைத்து வந்து சிகிச்சைகளை குறைவின்றி மேற்கொண்டு வருகிறார். ஒரு நாளைக்கு 200 பேராக ஐந்து நாட்களில் 1000 க்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்தனர் என்றார்.

இங்கு சிகிச்சை பெற்ற ஒருவர் கருத்து தெரிவிக்கையில்; நான் ஊரணியைச் சேர்ந்தவன். வயது 69. இரண்டு மாதங்களுக்கு முன் எங்களுடைய ஊரில் கண் பரிசோதனை நடைபெற்றது. அப்பொழுது எனது தொலைபேசி இலக்கத்தை எடுத்துக் கொண்டு குறித்த தினத்தில் என்னை தொடர்பு கொண்டு இன்றைக்கு கண்புரை சத்திர சிகிச்சை இடம்பெறவுள்ளது என்று வரும்படி அழைத்தார்கள். போக்குவரத்து வசதிகளையும் அவர்களே ஏற்பாடு செய்து தந்தார்கள்.

நாங்கள் இங்கு நிறையப் பேர் வந்துள்ளோம். எங்களிடம் எந்தவிதமான கட்டணங்களும் அறவிடப்படவில்லை. இந்த உதவியைச் செய்து தந்தவர்களுக்கு கோடிப் புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று நல்லாசி புரிகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எஸ். சந்திரகுமார்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT