வடகொரிய தலைவர் உன்னின் சகோதரி தெற்கிற்கு விஜயம் | தினகரன்

வடகொரிய தலைவர் உன்னின் சகோதரி தெற்கிற்கு விஜயம்

வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன்னின் சகோதரி கிம் யோ ஜொங் தென் கொரியாவை வந்தடைந்துள்ளார்.

1950 – 1953 கொரிய யுத்தம் தொடக்கம் வடக்கின் ஆளும் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தென் கொரியாவுக்கு விஜயம் மேற்கொள்வது இது முதல் முறையாகும்.

அவரும் கொரியாவின் பதவி நிலை அரச தலைவர் யொங் நாமும் தென் கொரியாவில் நேற்று நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப வைபவத்தில் பங்கேற்றார்கள்.

கிம் யோ ஜொங் தனது சகோதரருடன் நெருக்கமான தொடர்பு வைத்திருப்பவராக கருதப்படுகிறார். கடந்த ஆண்டு அவர் வட கொரியாவின் பலம் மிக்க அரசியல் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். எனினும் அவர் வட கொரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்க தடை பட்டியலில் இருப்பவராவார்.

குளிர்கால ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வில் இரு கொரியாக்களும் ஒரே கொடியின் கீழ் அணிவகுத்துச் சென்றன. இந்த விளையாட்டு விழாவுக்கு வட கொரியா 22 வீரர்களுடன் 400 பேர் கொண்ட தூதுக் குழுவை அனுப்பியுள்ளது.

இந்த விளையாட்டு இராஜதந்திர செயற்பாடுகள் மூலம் இரு கொரியாக்களுக்கும் இடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டபோதும் அது பிராந்தியத்தில் நீடிக்கும் பதற்றத்தை குறைப்பது குறித்து அரசியல் ஆய்வாளர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

1950–23 யுத்தத்தில் கொரிய தீபகற்பம் பிளவுபட்ட நிலையில் இரு தரப்புக்கும் இடையில் இதுவரை அமைதி உடன்படிக்கை ஒன்று எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

30 வயதுடையவர் என கருதப்படும் கிம் யோ ஜொங் தனது சகோதரரை விடவும் 4 வயது இளையவராவார். அவரது விஜயம் தென் கொரியாவுடன் உறவை மேம்படுத்த வட கொரியா விருப்பம் காட்டுவதை வெளிப்படுத்துவதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் கடந்த வியாழக்கிழமை வடகொரியா இராணுவ அணிவகுப்பொன்றை நடத்தியதோடு அதில் கிம் ஜொங் உன்னும் பங்கேற்றிருந்தார்.

இந்த இராணுவ அணிவகுப்பு பொதுவாக ஏப்ரல் மாதத்திலேயே நடத்தப்படுகின்ற நிலையில் அது முன்கூட்டி நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 


Add new comment

Or log in with...