அமெரிக்க அரசு மீண்டும் முடக்கம் | தினகரன்

அமெரிக்க அரசு மீண்டும் முடக்கம்

புதிய வரவு செலவு திட்டம் ஒன்றுக்கு அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்காததால் அமெரிக்க அரசு இந்த ஆண்டில் இரண்டாவது முறையாகவும் முடங்கியுள்ளது.

ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த மத்திய நிதி காலாவதியாவதற்குள் ஒரு புதிய வரவு செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், குடியரசு கட்சியின் செனட் உறுப்பினர் ரேண்ட் போல், செலவினம் தொடர்பான வரம்புகளை பராமரிப்பதில் தான் கொண்டுவந்த திருத்தங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று சபையில் கோரிக்கை விடுத்த போது வரவுசெலவு திட்டம் மீதான விரைவு வாக்கெடுப்பு எதிர்பார்ப்பு தகர்ந்து போனது.

கடந்த ஜனவரி மாதம், இதே போன்று ஒரு தோல்வியினால் அமெரிக்க அரசாங்கத்தின் பணிகள் மூன்று நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

இந்நிலைியில் கடந்த வியாழக்கிழமை, செனட் உறுப்பினர் ரேண்ட் போல் தொடர்ந்து தனது வாக்கை பதிவுசெய்ய தாமதித்து வருவதால், ஒரு சாத்தியமான அரச முடக்கத்திற்கு தயாராகி வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

செனட் மற்றும் பிரநிதிகள் சபை இரண்டும் அமெரிக்க அரசு இயங்குவதற்கான இரண்டாண்டு வரவு செலவு ஒப்பந்தத்தை அங்கீகரிக்க வேண்டும்.

மேற்கொண்டு என்ன மாதிரியான நடவடிக்கைகளை பாராளுமன்றம் எடுக்கப்போகிறது மற்றும் பொது சேவைகள் எப்படி பாதிக்கப் போகின்றன போன்ற தகவல்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை.

இந்த சமீபத்திய ஒப்பந்தத்தில் செலவினம் தொடர்பான வரம்புகளை 300 பில்லியன் டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரம்பு அதிகரிப்பிற்கு தான் ஆதரவு தெரிவிக்க முடியாது என்று செனட் உறுப்பினர் போல் வலியுறுத்தியுள்ளார். 


Add new comment

Or log in with...