2ஆவது இன்னிங்ஸ்: இலங்கை அணி 312 ஓட்டங்களால் வலுவான முன்னிலை | தினகரன்

2ஆவது இன்னிங்ஸ்: இலங்கை அணி 312 ஓட்டங்களால் வலுவான முன்னிலை

பங்களாதேஷுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 312 ஓட்டங்களால் வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

டாக்காவில் நடைபெற்றுவரும் போட்டியில் பங்களாதேஷ் அணியை முதல் இன்னிங்ஸில் 110 ஓட்டங்களுக்கு சுருட்டிய இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் மிக நிதானமாக ஆடி ஓட்டங்களை குவித்து வருகிறது.

கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸுக்கு 222 ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில் இரண்டாவது நாளான நேற்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பங்களாதேஷ் அணி விக்கெட்டுகளை காத்துக்கொள்ள தவறியது.

மத்திய வரிசையில் வந்த மஹ்தி ஹஸன் ஆட்டமிழக்காது பெற்ற 38 ஓட்டங்களுமே அந்த அணிக்காக பெறப்பட்ட அதிபட்ச ஓட்டங்களாகும். இலங்கை சார்பில் சுரங்க லக்மால் மற்றும் அகில தனஞ்சய 3 விக்கெட்டுகளை வீழ்த்தும்போது டில்ருவன் பெரேரா 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 112 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் நேற்று பகல்போசண இடைவேளைக்கு முன்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தபோதும் மிக நிதானத்துடன் ஆடி ஓட்டங்களை சேர்த்தது.

ஆரம்ப வீரர் திமுத் கருணாரத்ன எந்த ஒரு பெளண்டரியும் பெறாமல் 105 பந்துகளில் 35 ஓட்டங்களை பெற்று அணியின் முன்னேற்றத்திற்கு உதவினார்.

அதேபோன்று தனஞ்சய டி சில்வா வேகமாக 24 பந்துகளில் 5 பெளண்டரிகளுடன் 28 ஓட்டங்களை பெற்றார்.

மத்திய வரிசையில் வந்த அணித்தலைவர் சந்திமால் பெற்ற 30 ஓட்டங்களும் இரண்டாவது இன்னிங்ஸில் முன்னிலை பெறுவதற்கு முக்கியமானதாக அமைந்தது. எனினும் தொடர்ந்து சோபித்து வரும் ரொஷேன் டி சில்வா மற்றொரு அரைச்சதத்தை பெற்றார்.

94 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 9 பெளண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 58 ஓட்டங்களுடன் களத்தில் நீடிக்கிறார். தனது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடிவரும் ரொஷேன் சில்வா கன்னி இன்னிங்ஸில் டக் அவுட் ஆனபோதும் அடுத்த நான்கு இன்னிங்ஸ்களிலும் ஒரு சதம் மூன்று அரைச்சதங்களை பெற்றுள்ளார். இதன்மூலம் இலங்கை அணி இரண்டவாது நாள் ஆட்டநேர முடிவின்போது 52 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை பெற்றுள்ளது. இன்னும் இரண்டு விக்கெட்டுகள் கைவசம் இருக்கும் நிலையில் பங்களாதேஷ் அணிக்கு சவாலான வெற்றி இலக்கொன்றை நிர்ணயிக்க இலங்கை அணிக்கு முடியுமாகியுள்ளது.

இதன்போது பங்களாதேஷ் அணி சார்பில் இரண்டாவது இன்னிங்ஸில் முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இன்று போட்டியின் மூன்றாவது நாளாகும். 


Add new comment

Or log in with...