பத்மாவதியை தொடர்ந்து மணிகர்னிகாவுக்கும் எதிர்ப்பு | தினகரன்

பத்மாவதியை தொடர்ந்து மணிகர்னிகாவுக்கும் எதிர்ப்பு

வெள்ளைக்காரரை காதலித்தாரா ஜான்சிராணி?

'பத்மாவத்' படத்தைத் தொடர்ந்து ஜான்சி ராணியின் வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் 'மணிகார்னிகா' படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நடிகை தீபிகா படுகோன் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் பத்மாவத்.

ராணி பத்மாவதியை தவறாக சித்தரிக்கும் வகையில் 'பத்மாவத்' படம் உள்ளது என கூறி ராஜபுத்திர அமைப்புகளும் இந்து அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்தன. பத்மாவம் படத்திற்கு எதிராக வட மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து படத்தில் சில காட்சிகள் வெட்டப்பட்டு படத்தின் பெயர் 'பத்மாவத்' என மாற்றம் செய்யப்பட்டது.

இயக்குநர் சஞ்சய் பன்சாலி, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் பலமுறை எடுத்துக் கூறியும் போராட்டக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் படம் வெளியான பின்பே உண்மையை உணர்ந்தனர்.

இந்நிலையில் 'பத்மாவத்' படத்திற்கு எழுந்த எதிர்ப்பைப் போன்றே ஜான்சிராணியின் வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் 'மணிகார்னிகா' படத்திற்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழில் சிம்பு, அனுஷ்கா நடித்த 'வானம்' படத்தை இயக்கியவர், தெலுங்கு பட இயக்குனர் கிரீஷ். தற்போது அவர் ஹிந்தியில் 'மணிகார்னிகா' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜான்சிராணி லட்சுமிபாய் வரலாற்றை மையமாக வைத்து உருவாகிறது 'மணிகார்னிகா' படம். இதில் ஜான்சிராணி வேடத்தில் கங்கனா ரனவத் நடிக்கிறார்.

கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 'பத்மாவத்' படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது போல், இப்போது கங்கனா ரனவத் நடிக்கும் ஜான்சிராணி படத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சுதந்திரத்துக்காகப் போராடிய ஜான்சிராணி, வெள்ளைக்கார அதிகாரி ஒருவரைக் காதலிப்பது போல் காட்சிகள் சித்தரிக்கப்படுகின்றன. எனவே இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்று பிராமண அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், அதுபோன்ற காட்சிகள் படத்தில் இல்லை என்று படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். 'பத்மாவத்' படத்திற்கான போராட்டங்கள் ஓய்ந்துள்ள நிலையில், புதிதாக முளைத்திருக்கிறது மணிகார்னிகாவுக்கு எதிரான போராட்டம். படம் வெளியான பின்புதான் இந்த போராட்டங்களும் முடிவுக்கு வரும் போலத் தெரிகிறது.


Add new comment

Or log in with...