டைட்டானிக்ைக மூழ்கடித்த பனிப்பாறை உருவான இடம் | தினகரன்

டைட்டானிக்ைக மூழ்கடித்த பனிப்பாறை உருவான இடம்

கிரீன்லாந்து மக்களின் வசிப்பிடங்கள்

1912-ம் வருடம், ஏப்ரல் மாதம் 14-ம் திகதி. வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல். நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. 'டைட்டானிக்' என்று அழைக்கப்பட்ட அந்தக் கப்பலுக்கு அதுதான் முதல் பயணம்.

உள்ளே 2,224 பயணிகள் இருப்பதாகத் தகவல். கப்பலைச் சுற்றிச் சுற்றி வந்து வேவு பார்க்கும் (lookout) வேலையைச் செய்து கொண்டிருந்தனர் ஃப்ரெட்ரிக் ஃப்ளீட் மற்றும் ரெஜினால்ட் லீ ஆகிய இருவரும்.

ஆனால், ஒரு பிரச்சினை. இருவரிடமும் உளவு பார்க்கத் தேவையான பைனாகுலர்கள் இல்லை. சரியாக மணி 11.40. இருவரின் குரலும் ஒன்றாய், இரண்டு வார்த்தைகளை ஒலித்தன.

டைட்டானிக் கப்பலின் முதன்மை அதிகாரி உடனே சுதாரித்து கப்பலை அந்தப் பனிப்பாறையின் மீது மோதாமல் திருப்புமாறு கட்டளையிடுகிறார். ஆனால், அந்த இருவரும் அந்தப் பனிப்பாறையை பார்த்ததே தாமதம். அதற்குப் பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கை மட்டும் எப்படிச் சரியான நேரத்தில் எடுக்கப்பட்டதாக இருக்கும்?

அந்தப் பெரிய பனிப்பாறை கப்பலின் அடிப்பாகத்தைப் பதம் பார்த்தது. தண்ணீரின் பரப்புக்கு அடியில் இருந்த கப்பல் பாகத்தில் ஓட்டைகள் உருவாகத் தண்ணீர் உள்ளே செல்லத் தொடங்கியது. கப்பலின் மேலே...

இல்லை, அந்தக் கதை வேண்டாம். நம் பார்வையை அந்தப் பனிப்பாறைக்கு உள்ளாகவே சுருக்கிக் கொள்வோம். கப்பலின் பலம் வாய்ந்த மேலோடு (hull) பாதிப்படையும் அளவிற்கு அந்தப் பனிப்பாறை வலிமையானதாக இருந்தது. அது உருவானது கிரீன்லாந்து நாட்டில்!

இது முழுக்க முழுக்கப் பனிப்போர்வையால் மூடப்பட்ட இடம். வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில், கனடாவிற்கு வடகிழக்கில் அமைந்திருக்கிறது கிரீன்லாந்து.

இந்தத் தீவின் மொத்த பரப்பளவு 836,000 சதுர மைல்கள் (2.17 மில்லியன் சதுர கிலோமீட்டர்). கிரீன்லாந்துதான் உலகிலேயே மிகப் பெரிய தீவு. கிரீன்லாந்து என்றவுடன் பச்சைப் புல்வெளி நாடு என்று கற்பனை செய்து விட வேண்டாம். சுவாரஸ்யமாக, அங்கே பெயரில் மட்டும் கிரீன் (Green) இருக்கிறது. மற்றபடி அதன் மேற்கு ஓரங்களைத் தவிர உள்ளே இருப்பது வெண்மை நிறைந்த பனிப்பாறைகள் மட்டுமே. இந்தப் பனிப்போர்வைக்குக் கொடுக்கப்பட்ட இடங்கள் தவிர்த்து, இருக்கும் நிலங்களில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். அப்படி வாழத் தகுந்த இடம் என்றால் அது வெறும் 158,000 சதுர மைல்கள் (410,000 சதுர கி.மீ.) மட்டுமே. அதாவது கிட்டத்தட்ட 80 சதவிகித நிலப்பரப்பு பனிப்பாறைகள் மட்டுமே.

பெயர் வரக் காரணம் என்ன?

10-ம் நூற்றாண்டில், அருகில் இருக்கும் ஐஸ்லாந்து நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட ஒருவன் கிரீன்லாந்து பக்கம் வந்து சேர்கிறான். அவன் நோர்ஸ் வைகிங் இனத்தைச் சேர்ந்த எரிக் தோர்வால்ட்ஸ்சன் (Erik Thorvaldsson, Erik the Red).

அவன்தான், கிரீன்லாந்தின் மேற்கு பக்கம் பயணம் செய்து அங்கே பச்சைப் புல்வெளிகள் நிறைந்த வளமான பகுதி இருப்பதை முதலில் கண்டறிந்தான். நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் ஐஸ்லாந்திற்கு அவன் சென்றவுடன் வளமான நாடு ஒன்றை தான் கண்டுவிட்டதாகக் கூறுகிறான். அது பச்சைப்பசேல் என இருப்பதால், அதை கிரீன்லாந்து என்று அழைக்கலாம் என்றும் கூறுகிறான். பின்னாளில், அதுவே அதன் பெயராகிப் போனது.இது ஒரு தன்னாட்சி பெற்ற நாடு என்றாலும், டென்மார்க் இராச்சியத்தின் மூன்று உறுப்பின நாடுகளில் இதுவும் ஓர் அங்கம்.

தற்போதைய நி​ைலவரப்படி அங்கே 57,000 மக்கள் வசிக்கின்றனர். கிரீன்லாந்தின் 12 சதவிகித மக்கள் டேனிஷ் இனத்தவர்களாகவும், 88 சதவிகிதம் பேர் இன்யூட் (Inuit) என்ற பூர்வகுடியைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். மொத்தத் தீவின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை, தலைநகரான நூயூக் (Nuuk) நகரில் இருக்கிறது. கிரீன்லாந்திற்கு வரும் வருவாயில் மூன்றில் இரண்டு பங்கு இன்னமும் டென்மார்க் அரசிடம் இருந்தே வருகிறது.

கிரீன்லாந்தில் முதன் முதலில் கால்பதித்தவர்கள், தற்போது கனடாவாக இருக்கும் இடத்தில் இருந்து சென்றவர்கள். இது 4,500 வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு. அதன்பின் அவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. கிரீன்லாந்தின் அதீத குளிரை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

அதன் பிறகு, கி,மு.600 முதல் கி.பி.200 வரை டோர்செட் இன மக்கள் அங்கே வசித்தனர். சிறிது காலம் கழித்து, துலே (Thule) கலாசாரத்தைப் பின்பற்றும் கயாக்ஸ் (Kayaks), டாக்ஸ்லெட்ஸ் (Dogsleds) மற்றும் ஹார்பூன்ஸ் (Harpoons) இன மக்கள் அங்கே குடியிருந்தனர். தற்போது அங்கிருக்கும் இன்யூட் இன மக்கள் இந்த துலே கலாசாரத்தின்படி வந்தவர்கள்தான்.

வெப்பநிலை பற்றி சொல்லவே தேவையில்லை. கிரீன்லாந்தின் சீதோஷண நிலை என்பது முழுக்க முழுக்க ஆர்க்டிக் வெப்பநிலைதான். முற்றிலும் பனிப்போர்வை போர்த்தப்பட்ட இடம் என்பதால் கோடைக்காலத்தில்கூடப் பகலில் 0 டிகிரி செல்சியஸ்தான் இருக்கும்.

நாட்டின் தெற்குப் பகுதியில் மட்டும் சற்று தாங்கிக் கொள்ளக் கூடிய வெப்பநிலை இருக்கும். இதனால் பெரும்பாலான மக்கள் இங்கேதான் வசிக்கின்றனர். தலைநகரான நூயூக் நகரத்தில் மைனஸ் 11 முதல் 10 டிகிரி செல்சியஸ் இருக்கும்.

டைட்டானிக்ைக... (04ஆம் பக்கத் தொடர்)

ஈரப்பதம் குறைவான பகுதி என்பதால், உலகிலேயே தூய்மையான காற்று கிடைக்கும் இடங்களில் ஒன்றாக கிரீன்லாந்து கருதப்படுகிறது. இதனால் தூரம் இருக்கும் பகுதியில் பனி இருந்தாலும் நன்றாகவே தெரியும். ஈரப்பதம் இல்லாத காற்று என்பதால், குளிரும் அவ்வளவாகத் தெரியாது.

பல பாலூட்டிகள் மற்றும் பறவை இனங்களுக்கு கிரீன்லாந்துதான் சரணாலயம். பனிக் கரடிகள், கலைமான்கள், எருதுகள், ஆர்க்டிக் நரிகள், ஓநாய்கள், கழுகுகள், முயல்கள் எனப் பல மிருகங்களை கிரீன்லாந்தில் பார்க்க முடியும்.

புவி வெப்பமயமாதல் என்ற ஒரு நிகழ்வே பொய் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்கள், தற்போது கிரீன்லாந்து சென்றுவிட்டு வந்தால், அவர்கள் எண்ணம் தவறானது என்பதை நிச்சயம் உணர்வார்கள். இந்தத் தீவின் நிலப்பரப்பில்,656,000 சதுர மைல்கள் (1.7 மில்லியன் சதுர கிமீ) தூரத்திற்கு கிரீன்லாண்ட் பனித்தாள் என்பது போர்வையைப் போல விரிந்திருக்கிறது. அன்டார்க்டிக் பனித்தாளுக்குப் பிறகு இதுதான் உலகின் பெரிய பனித்தாள். இதன் பருமன் மட்டும் கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர்கள். இப்போது பிரச்சினை என்னவென்றால், வருடத்திற்கு 1 மிமீ வீதம் இந்த பனித்தாள் உருகி வருகிறது. இதனால் வருடத்திற்கு 23 அடிக் கடல் நீர் மட்டம் உயர்கிறது.

இன்னொரு பிரச்சினை என்னவென்றால், இங்குள்ள ஈரப்பதம் இல்லாத காற்று, பனிப்போர்வைக்குள் கரிய பாசி ஒன்றைப் படரவிடுகிறது. இது சூரிய வெப்பத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால்தான் பனித்தாள்கள் உருகத் தொடங்கியுள்ளன. இது பலதரப்பட்ட ஆய்வாளர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், கிரீன்லாந்து மட்டுமில்லாமல், அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் இது மிகவும் பாதிக்கும் அபாயம் உள்ளது.


Add new comment

Or log in with...