ஐ.எஸ்.ஐக்கு உளவு பார்த்த இந்திய விமானப்படை அதிகாரி டெல்லியில் கைது | தினகரன்

ஐ.எஸ்.ஐக்கு உளவு பார்த்த இந்திய விமானப்படை அதிகாரி டெல்லியில் கைது

 

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு வேவு பார்த்ததாக இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் இருந்தபடி ஐஎஸ்ஐக்கு இராணுவ இரகசியங்களை வட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் மூலம் இவர் பகிர்ந்து வந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் உள்ள இந்திய விமானப்படையில் உளவு தடுப்புப் பிரிவு தனியாக செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவினரின் வழக்கமான சோதனையில் விமானப்படையின் முக்கிய தகவல்கள் டெல்லியில் இருந்து பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு பரிமாறப்படுவது தெரிய வந்தது.

இதையடுத்து விமானப்படையின் தலைமை அலுவலகத்தில் இருந்து தகவல்கள் கசிந்து வெளியே செல்வதாக கண்டறிந்த உளவு தடுப்புப் பிரிவினர், இதுதொடர்பாக விமானப்படை உயரதிகாரிகளை உஷார்படுத்தினர். இதன்பேரில் டெல்லி தலைமையகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டனர்.

அப்போது கெப்டனாக இருக்கும் அருண் மார்வஹா விதிமுறைகளுக்கு எதிராக குறிப்பிட்ட சில இலத்திரனியல் கருவிகளை அலுவலகத்திற்கு எடுத்துவருவது தெரியவந்தது. அவரை சோதனையிட்டபோது அவருக்கு வழங்கப்பட்ட பணியைத் தவிர வேறு சில பணிகளையும் விவரங்களையும் அவர் சேகரித்த விவரம் உறுதியானது.

இதையடுத்து ஜனவரி 31ம் திகதி அவரிடம் உளவு தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் அவரது கையடக்கத்தொலைபேசி உள்ளிட்டவை சோதனையிடப்பட்டது. அதில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் ஏஜெண்டாக இவர் செயல்பட்டு வந்தது உறுதிப்பட்டுள்ளது.

விமானப்படை தொடர்பான தகவல்கள், படங்கள், விவரங்களை வட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலம் இவர் அனுப்பி வந்துள்ளார். இதற்காக பெண் ஒருவரின் பெயரில் போலியான முகவரியில் சமூகவலைதளங்களில் கணக்கு தொடங்கி, ஐஎஸ்ஐ அமைப்பினருடன் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து விமானப்படை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் அவரை டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும் 5 நாட்கள் அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அருணுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அவர் வழியாக ஐஎஸ்ஐ அமைப்பு ஏற்படுத்தியுள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக விமானப்படை அதிகாரிகளும் தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...