காலிதா ஷியாவுக்கு 5 வருட சிறை | தினகரன்

காலிதா ஷியாவுக்கு 5 வருட சிறை

 

பங்களாதேஷின் முன்னாள் பெண் பிரதமர் காலிதா ஷியாவுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 5 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பங்களாதேஷின் விசேட நீதிமன்றினால் மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையை அடுத்தே, இன்றைய தினம் (08) இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஷியா அநாதைகள் நிதியத்தின் வெளிநாட்டு நிதி டொலர் 252,000 மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபணமானதையடுத்து, 632 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பின் ஒரு சில விடயங்களை வாசித்த நீதிபதி, அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான, பங்களாதேஷ் தேசிய கட்சியின் (BNP) தலைவரான காலிதா ஷியா உள்ளிட்ட ஆறு பேருக்கு சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

இவ்வழக்கின் அடிப்படையில், காலிதா ஷியாவின் அரசியல் வாரிசாக கருதப்படும் அவரது மூத்த மகனும் அவரது கட்சியின் பிரதித் தலைவருமான தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட ஐவருக்கு 10 வருட சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தாரிக் ரஹ்மான் கடந்த 09 வருடங்களாக இலண்டனில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலிதா ஷியாவின் கணவர் ஷியாவுர் ரஹ்மான் மரணமடைந்தததை அடுத்து, உருவாக்கப்பட்ட நிதியமே ஷியா அநாதைகள் நிதியமாகும்.

ஆயினும் எதிர்வரும் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலை குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்நாட்டின் அரசியலமைப்புக்கமைய, குற்றவாளியாக கருதப்பட்டு இரு வருடங்கள் சிறை சென்ற ஒருவரால் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதே அதற்கான காரணமாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அவரது கட்சி ஆதரவாளர்கள் அந்நாட்டின் தலைநகர் டாக்காவிலுள்ள வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவவதோடு, அவர்களை அங்கிருந்து அகற்ற பொலிசார் தாக்குதல் நடாத்தி வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பங்களாதேஷின் பிரதமராக இரு தடவைகள் (1991 - 1996, 2001 - 2006) ஆட்சி பீடம் ஏறிய 72 வயதான காலிதா ஷியா, அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்பதோடு, பாகிஸ்தானின் பெனாஷிர் பூட்டோவை அடுத்து முஸ்லிம் ஒருவர் பிரதமராக ஆட்சி பீடம் ஏறிய இரண்டாவது பெண் ஆவார்.

உலகின் முதலாவது பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆவார்.

 


Add new comment

Or log in with...