எதிர்ப்பாளர்களை விடுதலை செய்யும் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் ரத்து | தினகரன்

எதிர்ப்பாளர்களை விடுதலை செய்யும் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தால் ரத்து

மாலைதீவு அரசியல் பதற்றத்தின் முக்கிய திருப்பமான உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒன்பது எதிர்க் கட்சி அரசியல்வாதிளை விடுதலை செய்யும் தீர்ப்பை அந்த நீதிமன்றம் தற்போது ரத்துச் செய்து மறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் நாட்டில் அவசர நிலையை பிறப்பித்து இராணுவத்திற்கு உச்ச நீதிமன்றத்தை சுற்றிவளைக்க உத்தரவிட்டதோடு ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள் குழாமில் இரு நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சில மணி நேரத்தின் பின்னரே கடந்த செவ்வாய்கிழமை உச்ச நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு வந்துள்ளது.

நீதியரசர் அப்துல்லா சயீத் மற்றும் நீதிபதி அலி ஹமீத் இருவரும் கடந்த செவ்வாய்கிழமை அதிகாலையில் கைது செய்யப்பட்டனர். தம்மை பதவி கவிழ்க்க இவர்கள் சதி செய்ததாக யாமீன் குற்றம்சாட்டியுள்ளார்.

நீதிபதிகள் குழுவின் எஞ்சிய மூன்று நீதிபதிகள் கையொப்பம் இட்ட புதிய தீர்ப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வெளியிட்ட கரிசனையை கருத்தில் கொண்டு ஒன்பது பேரை விடுவிப்பது மற்றும் அவர்கள் மீதான மறு விசாரணை உத்தரவை ரத்துச் செய்ய நீதிபதிகள் தீர்மானித்ததாக அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஒன்பது பேரில் ஏழு பேர் மாலைதீவில் சிறை அனுபவித்து வருகின்றனர்.

இதில் தனது ஒன்றுவிட்ட சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மெளமூன் அப்துல் கையூமையும் கைது செய்ய உத்தரவிட்ட ஜனாதிபதி யாமீன் அவர் மீது ஊழல் மற்றும் அரசை கவிழ்க்க சதி செய்த துரோக குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். கையூம் எதிர்க்கட்சியின் பக்கம் சாய்ந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மாலைதீவு நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. மலைதீவில் இந்தியா தலையிட வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதி மொஹமது நஷீத் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “உச்ச நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்த மறுத்து மாலைதீவு மக்களின் அரசமைப்பு அதிகாரங்களை ரத்து செய்து அவசர நிலையை மாலைதீவு அரசு பிரகடனம் செய்துள்ளதால் நாங்கள் தொந்தரவு அடைந்துள்ளோம். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அரசியல்வாதிகளின் கைதுகள் கவலை தருகின்றன. எங்கள் அரசு தொடர்ந்து உன்னிப்புடன் மாலைதீவு நிலையை கவனித்துவருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாலைதீவில் சிக்கல் நீடிப்பதை அடுத்து, அங்குள்ள இந்தியர்களை மீட்க இந்தியக் கடற்படையின் போர்க் கப்பல்கள் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அங்குள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இந்தியப் போர்க் கப்பல்கள், விமானங்கள், ஹெலிகொப்டர்கள் சுற்றுக்காவல் பணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அப்துல்லா யாமீன் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு கீழ்படிய வேண்டும் என்று வலியுறுத்தி அந்நாட்டின் தலைநகர் மாலேவில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளும் உச்சநீதிமன்ற தீர்ப்பினை மாலைதீவு அரசு மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது. 


Add new comment

Or log in with...