உதயங்க வீரதுங்கவின் பணப்பரிமாற்றம்; புதிய தகவல்கள் அம்பலம் | தினகரன்

உதயங்க வீரதுங்கவின் பணப்பரிமாற்றம்; புதிய தகவல்கள் அம்பலம்

 

மிக் விமானக் கொள்வனவு தொடர்பில் துபாயில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க இலங்கைக்கு பணப்பரிமாற்றம் செய்துள்ளமைப் பற்றி மேலும் பல தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

இவரை துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளும் சட்ட மா அதிபர் திணைக்களமும் இணைந்து ஆராய்ந்து வரும் நிலையிலேயே அவர் பற்றிய மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

2006 ஆம் ஆண்டில் மிக் விமானக் கொள்வனவின்போது விமானப்படையினருக்கு 14.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்காமல் ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வீரதுங்கவின் இரண்டு கடவுச்சீட்டுகள் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தால் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 04 ஆம் திகதி அவர் அமெரிக்காவுக்குச் செல்லும் வழியில் விமானம் மாறிச் செல்வதற்காக துபாயில் வந்திறங்கியபோதே அவரது கடவுச்சீட்டு செல்லுப்படியற்றது என்பதன் காரணமாக துபாய் விமான நிலையத்தின் அதிகாரிகளால் அவர் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டார்.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கமைய உதயங்க வீரதுங்கவின் பணப்பரிமாற்றம் தொடர்பில் சி.ஐ.டியினர் புறம்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதற்கமைய வீரதுங்க 4.1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பணத்தை பல்வேறு நாடுகளின் நிறுவனங்கள் மற்றும் வங்கியிலிருந்து பெற்றிருப்பது அம்பலத்துக்கு வந்துள்ளது. சைப்பிரஸ், பனாமா, ரஷ்யா,லெட்வியா,மார்ஷல் தீவுகள், பெல்ஸி மற்றும் துபாய் ஆகிய நாடுகளின் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிலிருந்தே வீரதுங்கவின் கணக்கிலக்கத்துக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது.

வீரதுங்கவுக்கு அனுப்பப்பட்டுள்ள பணம் சட்டரீதியான வியாபாரம் மூலம் சம்பாதிக்கப்பட்ட பணமாக இருப்பதற்கு வாய்பில்லையென்ற சந்தேகம் விசாரணைகளை முன்னெடுத்து வரும் சி.ஐ.டியினருக்கு எழுந்திருப்பதாக அதிகாரியொருவர் கூறினார். மேலும் இந்த பணப்பரிமாற்றத்துக்கான காரணங்களாக மென்பொருள் அபிவிருத்தி, கட்டிட உபகரணங்கள்,வாடகை,தேநீர் என்றே குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் வீரதுங்கவின் வங்கிக் கணக்கில் அவர் முன்னாள் தூதுவராக இருந்தபோது முன்னெடுக்கப்பட்ட பல சட்டவிரோதச் செயற்பாடுகளின் மூலமே பணம் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதிகாரியொருவர் தெரிவித்தார். இதுவரை சி.ஐ.டி மற்றும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையில் வீரதுங்க எந்தவொரு மென்பொருள் அபிவிருத்தியுடனோ அல்லது கட்டிட நிர்மாணப்பணிகளுடனோ தொடர்பு கொண்டிருப்பதாக கண்டறியப்படவில்லை. அத்துடன் வீரதுங்கவின் பணிகள் அடிப்படையில் அவருக்கு மென்பொருள் அபிவிருத்தி மற்றும் கட்டிட நிர்மாணப்பணிகள் தொடர்பாக எவ்வித தொடர்பும் இருப்பதாக தனது அறிவுக்கு எட்டியவரை தெரியவில்லையென்றும் அவர் கூறினார். 


Add new comment

Or log in with...