உள்ளூராட்சித் தேர்தலில் வாக்காளர்களின் பொறுப்பு | தினகரன்

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்காளர்களின் பொறுப்பு

இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தலுக்குரிய தேர்தல் பிரசாரம் நேற்று (7ஆம் திகதி) நள்ளிரவுடன் நிறைவுற்றது. வாக்களிப்பு நாளை மறுதினம் (10 ஆம் திகதி) காலை முதல் மாலை வரை நாடெங்கிலும் நடைபெறவுள்ளது. அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி அடைந்துள்ளன.

இவ்வாறான நிலையில் இத்தேர்தலில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் கடந்த ஆறு வாரங்களுக்கும் மேற்பட்ட காலம் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை நாடெங்கிலும் முன்னெடு-த்தன. இப்பிரசாரத்தின் ஊடாக தமது கொள்கை, நோக்கம் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

குறிப்பாக நாட்டைத் துரித அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லுதல், ஊழல் மோசடி மற்றும் துஷ்பிரயோகங்களை ஒழித்தல் என்பன இத்தேர்தல் பிரசாரத்தின் போது முக்கிய பேசுபொருட்களாக இருந்தன. இவ்விடயங்களைத் தொட்டு எல்லா கட்சிகளுமே பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்தன.

இந்த நாடு இனியும் வளர்முக நாடாக​ேவா மூன்றாம் மண்டல நாடாவோ இருக்கக் கூடாது என்பதுதான் எல்லோரதும் உண்மையான ஒருமித்த விருப்பமாக உள்ளது. நாடு துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பையே நாட்டின் மீது அன்பு கொண்டவர்கள் கொண்டுள்ளனர். இருந்தும் இதற்கென அர்ப்பணிப்புடன் கூடிய வேலைத்திட்டங்கள் மிகவும் அத்தியாவசியமானவை.

ஏனெனில் இந்நாடு சுதந்திரமடையும் போது பொருளாதார ரீதியில் இந்நாட்டை விடவும் கீழ் மட்டத்தில் காணப்பட்ட பல நாடுகள் இலங்கையைப் பின்தள்ளி நீண்ட தூரம் முன்னேறிச் சென்று விட்டன. இதற்கு சிங்கப்பூர் மிகச் சிறந்த உதாரணமாகும். அந்நாட்டைக் கட்டியெழுப்பிய அந்நாட்டுத் தலைவரான லீ கியூவான் யு, 'இலங்கையை முன்னுதாரணமாகக் கொண்டு தான் சிங்கப்பூரைக் கட்டியெழுப்பினேன்' என்று ஒரு முறை பகிரங்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையை முன்மாதிரியாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட நாடு இன்று ஆசியப் பிராந்தியத்தில் கைத்தொழில் ரீதியிலான பொருளாதாரத்தில் அபரிமித வளர்ச்சி கண்ட நாடாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.ஆனால் இலங்கை தொடர்ந்தும் வளர்முக நாடாகவே உள்ளது.

மேலும் இலங்கையை விடவும் பல்வேறு துறைகளில் பின்தங்கிக் காணப்பட்ட பங்களாதேசமும் இன்று பல துறைகளில் இலங்கையை விடவும் முன்னேற்றமடைந்துள்ளது. அத்தோடு ஜப்பான், கொரியா, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகள் யுத்தத்தின் பின்பே கைத்தொழில் பொருளாதாரத்தில் பாரிய முன்னெற்றங்களை அடைந்து கொண்டன.

ஆனால் இந்நாடு சுதந்திரமடைந்து 70 வருடங்கள் கடந்து விட்டன. மூன்று தசாப்த காலம் நீடித்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து ஒன்பது வருடங்களாகின்றன. இருந்தும் இந்நாடு இன்னும் வளர்முக நாடாகவும், மூன்றாம் மண்டல நாடாகவுமே விளங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால் ஒரு நாட்டை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான வளங்கள் அனைத்தும் இங்குள்ளன. அவற்றுக்கு எந்தவித குறைபாடுகளும் இல்லை.

இருந்த போதிலும் நாடு சுதந்திரமடைந்த பின்னர் நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்குடன் கூடிய வேலைத்திட்டங்களும், அர்பணிப்பு மிக்க செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாததன் விளைவாகவே இந்த நாடு தொடர்ந்தும் மூன்றாம் மண்டல நாடாக உள்ளது. இந்த நிலையிலிருந்து இந்நாட்டை மீட்டெடுக்க வேண்டும். அதனைத் தொடர இடமளிக்க முடியாது.

இவ்வாறான சூழலில் கிராம மட்ட மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகின்றது. இத்தேர்தலில் ஒவ்வொரு வாக்காளரும் தம் வாக்குகளை உரிய முறையில் பாவித்து ஊருக்கும் நாட்டு-க்கும் உச்ச பயனைப் பெற்றுக் கொடுக்கத் தவறக் கூடாது.

தாம் தெரிவு செய்யும் மக்கள் பிரதிநிதி ஊரையும் நாட்டையும் துரித அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்காக அர்ப்பணிப்புகளுடன் செயற்படக் கூடியவர் என்பதை ஒரு தரம் மீள உறுதிப்படுத்தித் கொள்வது வாக்காளர்களின் பொறுப்பாகும்.

அதனால் ஜனநாயக விழுமியங்களை மதித்து தாம் அளிக்கும் வாக்கின் ஊடாக ஊரின் சமூக, கலாசார மேம்பாட்டுக்கும், நாட்டின் துரித முன்னேற்றத்திற்கும் அர்ப்பணிப்புடன் பங்களிக்கக் கூடிய நபரையே தமது மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்கின்றோம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது- வாக்காளர்களின் பொறுப்பாகும். அதற்கான சந்தர்ப்பம் இப்போது கிடைக்கப் பெற்றுள்ளது. அதனை உச்ச அளவில் பயன்படுத்தி கொள்வது அவசியமானது.


Add new comment

Or log in with...