தேர்தல் பிரசாரப் பணிகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு | தினகரன்

தேர்தல் பிரசாரப் பணிகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹமட்
பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹமட்

மீறினால் கடும் சட்ட நடவடிக்கை

உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரப் பணிகள் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருவதாக அறிவித்திருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு நள்ளிரவு முதல் வாக்களிப்பு இடம்பெறும் சனிக்கிழமை வரையிலான காலப்பகுதி அமைதிக் காலம் என்றும் பிரகடனப்படுத்தியுள்ளது.

இக்காலப்பகுதியில் எந்தவொரு பிரசார நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது முற்றாக தடைசெய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.

தேர்தல் பிரசாரங்களுக்கான சிறிய கூட்டங்களோ பொதுக்கூட்டங்களோ மக்கள் சந்திப்புக்களோ வீடுவீடாக சென்று வாக்கு வேட்டையில் ஈடுபடுவதோ அன்றி எந்தவகையிலான ஆதரவு திரட்டும் செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது. கட்சிகளின் ஆதரவாளர்களோ, வேட்பாளர்களோ எந்தவகையிலான ஆதரவு திரட்டும் செயற்பாடுகளில் ஈடுபடுதல் தேர்தல் விதிமுறைகளை மீறும் செயலாகும். தேர்தல் பிரசாரம் தொடர்பான சட்டத்தை மீறி மேற்கொள்ளப்படக்கூடிய சுவரொட்டிகளை ஒட்டுதல், தேர்தல் அலுவலகங்களை திறந்து வைத்தல், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், கட்அவுட், பதாதைகளை காட்சிப்படுத்துதல், ஊர்வலங்களை நடத்துதல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.

தேர்தல் விதிகளை மீறி எவராவது செயற்பட்டால் அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தவறிழைத்தவர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்படுவதோடு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதம், அல்லது சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர். அத்துடன், தவறிழைப்பவர் வேட்பாளராக இருப்பின் அவர்கள் 7 வருடங்களுக்கு எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் முஹம்மத் தெரிவித்தார்.

அமைச்சர்களோ, பாராளுமன்ற உறுப்பினர்களோ உள்ளூராட்சித் தேர்தல் விதிகளை மீறும் வகையில் ஏதாவது ஆதரவு தேடும் செயற்பாடுகளில் ஈடுபட்டால் அவர்கள் தொடர்பிலும் இதே சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் அந்தக் கட்சிக்கும், அதன் மூலம் போட்டியிடும் வேட்பாளர்களுக்குமே அது பாதகமாக அமையலாம்.

எனவே இந்த அமைதிக்காலத்தில் உள்ளூராட்சித் தேர்தல் விதிகளை முற்று முழுதாக கடைபிடிக்குமாறும், கூடுமான வரையில் தேர்தலோடு சம்பந்தப்பட்ட விவகாரங்களிலிருந்து விடுபட்டிருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், இன்று புதன்கிழமை நள்ளிரவு வரை நடைபெறக்கூடிய பிரசாரக்கூட்டங்களின் செய்திகளை மட்டுமே நாளைய (வியாழக்கிழமை) ஊடகங்களில் பயன்படுத்தப்பட முடியும். இது தவிர்ந்த எந்தவொரு தேர்தல் பிரசார விளம்பரங்களோ அறிக்கைககளோ, நிகழ்ச்சிககளோ, செய்திகளோ வெளியிடுவது தேர்தல் விதிகளை மீறும் செயலெனவும் அவர் தெரிவித்தார்.

எம்.ஏ.எம்.நிலாம்


Add new comment

Or log in with...