Wednesday, April 24, 2024
Home » பம்பலப்பிட்டி பாலம் அகற்றம்; மரைன் டிரைவ் ஒரு பகுதி தற்காலிக மூடல்

பம்பலப்பிட்டி பாலம் அகற்றம்; மரைன் டிரைவ் ஒரு பகுதி தற்காலிக மூடல்

- மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தல்

by Prashahini
November 6, 2023 10:05 am 0 comment

கடற்கரையோர வீதியில் (Marine Drive) பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பயணிகள் மேம்பாலம் சிதைவடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுவதால் இதனை அகற்றும் பணி நேற்று (05) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள மரைன் டிரைவ் வீதி பகுதி மறு அறிவித்தல் வரை முற்றாக மூடப்பட்டுள்ளது.

குறித்த பாதையினூடாக பயணிப்போர் பின்வரும் மாற்று பாதையினை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

  • வெள்ளவத்தையிலிருந்து மரைன் டிரைவ் வழியாக கொள்ளுப்பிட்டி செல்லும் வாகனங்கள், பம்பலப்பிட்டி புகையிரத நிலைய வீதியால் காலி வீதி ஊடாகச் சென்று கொள்ளுப்பிட்டி நோக்கி செல்ல செல்லலாம்.
  • அத்துடன் மரைன் டிரைவால் கொள்ளுப்பிட்டியில் இருந்து வெள்ளவத்தை நோக்கி செல்லும் வாகனங்கள் க்ளென் ஹாபர் பிளேஸால் திரும்பி, காலி வீதிக்குள் பிரவேசித்து பின்னர் டுப்ளிகேஷன் வீதியால் வெள்ளவத்தை நோக்கிச் செல்ல முடியும்

என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கொழும்பு பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்துடன் இணைந்த மேம்பாலம் சேதமடைந்தமை தொடர்பான நிழல் படங்கள் சமூக வலையத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வந்த நிலையில், குறித்த மேம்பாலத்தை புனரமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.

அத்துடன், இந்த மேம்பாலத்தை அகற்றி 10 நாட்களுக்குள் தற்காலிக வீதியை அமைக்குமாறும், ஐந்து மாதங்களுக்குள் புதிய மேம்பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பணிப்புரை விடுத்திருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக, ரயில் நிலையத்திற்குள் பயணிகளை பிரவேசிப்பதற்கான தற்காலிக நுழைவாயிலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னேவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் குறித்த மேம்பாலத்தின் புணரமைப்பு பணிகளை ஆரம்பித்துள்ளதோடு, தற்காலிக நடைபயணிகள் மேம்பாலமும் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT