நீதியான, சுமுகமான தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் | தினகரன்

நீதியான, சுமுகமான தேர்தல் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் இன்று நள்ளிரவுடன் நிறைவுறுகின்றது. இறுதிக்கட்ட தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசாரக் கூட்டங்கள் மகரகம மற்றும் பொலன்னறுவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலும், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கூட்டங்கள் காலி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு-, கிராண்ட்பாஸ் பலாமரச் சந்தியிலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டம் ஹோமாகமவிலும் நடாத்தப்பட உள்ளன. அதேபோன்று இத்தேர்தலில் போட்டியிடும் ஏனைய அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் இறுதிக்கட்ட பிரசாரக் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.

அதேநேரம் இத்தேர்தலை நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளையும் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது. அதன் இறுதிக்கட்ட ஏற்பாடுகளும் நிறைவடையும் தறுவாயில் உள்ளன. அத்தோடு தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளை பொலிஸ் திணைக்களம் கனகச்சிதமாக மேற்கொண்டு வருகின்றது.

இதன் நிமித்தம் மேலதிகப் பொலிஸாரும் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவ்வாறு பரந்த ஏற்பாடுகளுடன் நடாத்தப்படவிருக்கும் இத்தேர்தலுக்காக சுமார் நான்கு பில்லியன் ரூபா செலவாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டிலுள்ள 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 276 பிரதேச சபைகள் அடங்கலான 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் சுமார் நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் முதன் முறையாக ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 8293 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் வாக்களிப்பு பெப்ரவரி 10ம் திகதி காலை முதல் மாலை வரையும் 13,000 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறவுள்ளதோடு 15.8 மில்லியன் மக்கள் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

60 வீத பிரதிநிதிகளை வட்டார முறைப்படியும், 40 வீதப் பிரதிநிதிகளை விகிதாசாரப் படியும் தெரிவு செய்யவிருக்கும் இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் 2017 ஆம் ஆண்டின் டிசம்பர் மாத பிற்பகுதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் ஆரம்பமாகின.

இத்தேர்தல் பிரசார களத்தில் ஒரு முக்கிய விஷேட பண்பை தேர்தல் பிரசாரம் ஆரம்பமானது தொடக்கம் இற்றை வரையும் அவதானிக்க முடிந்தது. அதுதான் கடந்த காலங்களைப் போன்று தேர்தல் வன்முறைகள் மிகவும் குறைந்து காணப்பட்டதே அந்த விஷேட தன்மையாகும்.

அதாவது ஏற்கனவே நடைமுறையில் இருந்த தேர்தல் முறைமையின்படி தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதி ஊருக்கோ, பிரதேசத்திற்கோ பொறுப்புக் கூற வேண்டிய கடமையைக் கொண்டிருக்கவில்லை. அத்தோடு அத்தேர்தல் முறைமையில் விருப்பு வாக்கு முறைமை காணப்பட்டதால் விருப்பு வாக்குகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

அதன் விளைவாக கட்சிக்குள் வேட்பாளர்களுக்கிடையிலான சண்டை, சச்சரவுகள் அதிகரித்துக் காணப்பட்டன. அதற்கு அத்தேர்தல் முறைமையில் காணப்பட்ட விருப்புவாக்கு முறைமை பெரிதும் உதவியது. இந்நிலைமையை முடிவுக்கு வரும் வகையில்தான் தற்போதைய கலப்பு தேர்தல் முறைமை நாட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தேர்தல் முறைமையில் விருப்புவாக்கு முறைமை முற்றாக நீக்கப்பட்டுள்ளது. அதன் பயனாக கிடைக்கப் பெற்றுள்ள பிரதான பயன்களில் ஒன்றுதான் கட்சிக்குள் இடம்பெறக் கூடிய சண்டை சச்சரவுகள் நீங்கி வன்முறைகள் மிகவும் குறைந்த வகையில் தேர்தல்களை நடாத்தக் கூடிய வாய்ப்பு கிடைக்கப் பெற்றிருக்கின்றது.

அதேவேளை ஒவ்வாரு வட்டாரத்திற்கும் பொறுப்புக் கூறக் கூடிய மக்கள் பிரதிநிதி இத்தேர்தலின் ஊடாகத் தெரிவு செய்யப்பட உள்ளனர். இது நல்லதொரு முன்னேற்றமாகும். இதன் பயனாகவே இத்தேர்தல் பிரசார களம் அமைதிமிக்கதாக அமைந்துள்ளது.

இருப்பினும் சிலர் கடந்த காலங்களைப் போன்று இத்தேர்தலிலும் வன்முறைகளைத் தோற்றுவிக்க முயற்சி செய்த போதிலும், அம்முயற்சிகளும் எடுபடவில்லை.

தேர்தல் பிரசாரம் ஆரம்பமானது தொடக்கம் இற்றைவரையும் தேர்தல் கால வன்முறை மிகவும் குறைந்துள்ளது. இன்றோடு பிரசார நடவடிக்கைகள் நிறைவுற்றாலும் 10 ஆம் திகதி வாக்களிப்பு நிறைவுறும் வரையும் இதே அமைதி நிலை நீடிக்கப்படுவது மிகவும் அவசியமானது. அதுவே மக்களின் விரு-ப்பமானது.

அதனால் தேர்தல் சட்டங்களையும், ஜனநாயக விழுமியங்களையும் மதித்து செயற்பட வேண்டியது ஒவ்வொருவரதும் பொறுப்பும் கடமையும் ஆகும். அதனூடாக நீதியாகவும் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் இத்தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். அதற்கான சமிக்ைஞயை தேர்தல் பிரசார களம் ஏற்கனவே வெளிப்படுத்தி விட்டது.


Add new comment

Or log in with...