கட்சிகளின் எதிர்கால பலத்தை நிர்ணயிக்கப் போகும் தேர்தல் | தினகரன்

கட்சிகளின் எதிர்கால பலத்தை நிர்ணயிக்கப் போகும் தேர்தல்

 

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற இன்னமும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகளின் பிரசார நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டிக்கொண்டிருக்கின்றன.

பொதுவாக உள்ளூராட்சி தேர்தல் பிரசாரங்களில் உள்ளூர் விஷயங்களுக்கே பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது வழக்கம். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை இங்கு இந்த தேர்தலுக்கான பிரசார மையப் பொருளாக தேசிய பிரச்சினைகளே பல கட்சிகளாலும், சுயேச்சைக் குழுக்களாலும் கையில் எடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக தேசிய பெரும்பான்மையின கட்சிகளை பொறுத்தவரை ஒருவர் மீது மற்றவரது ஊழல் குற்றச்சாட்டுக்கள் பிரசாரத்துக்கு அதிகம் பயன்படுத்தப்படும் நிலையில், வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளைப் பொறுத்தவரை இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரம் அவர்களின் பிரசார நடவடிக்கையில் பெரிதும் முன்னிறுத்தப்படுகின்றது.

சிறிய நாடு என்பதால் அனைத்துக் கட்சிகளின் தேசியத் தலைவர்களும் அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் நேரடியாகச் சென்று பிரசாரம் செய்யும் வாய்ப்பு உள்ளதால், உள்ளூர் அல்லது உள்ளூராட்சித் தலைவர்கள் முக்கியத்துவம் இழந்து போகிறார்கள். அவர்களால் முன்வைக்கப்படும் உள்ளூர் அபிவிருத்தி, வளர்ச்சி போன்ற விடயங்களும் பின் தள்ளப்படுகின்றன.

தேசிய மட்டத்தில் முன்னிலை பெறுகின்ற பெரும்பான்மையின கட்சிகளைப் பொறுத்தவரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன (கூட்டு எதிர்க்கட்சி) ஆகியவற்றுக்கிடையிலேயே கடுமையான போட்டி காணப்படுகின்றது.

அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பிணைமுறி சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரம் மற்றும் கடந்த ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் பல ஊழல்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள்தான் இங்கு ஒருவரை ஒருவர் விமர்சிப்பதற்கான பிரசார பொருளாக இதுவரை இருந்து வருகின்றன. ஒவ்வொரு கட்சியின் வேட்பாளர்களும் இந்த ஊழல் விவகாரங்களை முன்வைத்தே அடுத்தவரை குற்றம் சுமத்தி வருகின்றனர்.

வடக்கு கிழக்கு நி​ைலவரம்:

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு,- கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரை அங்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான கட்சி மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் ஆனந்தசங்கரி ஆகியோர் தலைமையில் தமிழர் விடுதலை கூட்டணி சின்னத்தில் போட்டியிடும் கூட்டணி ஆகியவற்றுக்கு இடையிலேயே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இங்கு தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வு முயற்சிகளே விவாதப் பொருளாக இருக்கின்றன.

இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே அங்கீகரித்திருப்பதாகவும், இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் தாமே தமிழர்களின் பிரதிநிதிகளாக மக்கள் ஆணையை பெற்றிருப்பதாகவும் பார்க்கப்படும் நிலையில், அந்த தீர்வு முயற்சிகளை வெற்றிகரமாக கொண்டு நடத்த மக்கள் தமக்கே வாக்களிக்க வேண்டும் என்கிறார் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் புளொட் அமைப்பின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்.

இனப்பிரச்சினை விவகாரத்தில் தமிழ் மக்கள் தந்த ஆணையை மீறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆளும் ஐக்கிய தேசியக்கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுவதாக குற்றஞ்சாட்டும் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்க தமது கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோருகிறார்.

இப்போது நடக்கவிருப்பது உள்ளூராட்சி தேர்தலாக இருக்கின்ற போதிலும் தேசிய மட்டத்தில் முக்கிய கட்சிகளின் எதிர்கால பலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக இது இருக்கும் என்ற கருத்தை பலர் வலியுறுத்துகின்றனர்.

இதனால், அனைத்துக்கட்சிகளும் இதனை ஒரு தேசிய மட்ட போட்டிக்கான களமாக கருதுகின்றன.

இவற்றைவிட மலையகத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலும் இரு தரப்பு மோதல்கள் நடக்கின்றன. ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களை கொண்ட தமிழ் முற்போக்கு முன்னணி ஆகியவற்றுக்கு இடையே கடுமையான போட்டி காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் போட்டியிடும் முஸ்லிம் கட்சிகள் மத்தியிலும் அபிவிருத்தி சார்ந்த பிரச்சினைகள் முன்னணி பெறுகின்றன.

தேர்தல் முறையில் மாற்றம்:

இலங்கையில் 1977க்கு பிறகு அறிமுகம் செய்யப்பட்ட விகிதாசார தேர்தல் முறையில் அல்லாமல் நேரடி தேர்தல் முறையையும் சேர்த்து கலப்பு முறையில் இந்த உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. ஆகவே கடந்த காலங்களில் கட்சிகளுக்கு இருக்கும் நேரடி ஆதரவை கணக்கில் கொண்டு அவற்றின் பலத்தை கணித்துக் கூறியது போல இந்த முறை செய்வதில் சிரமங்கள் காணப்படுகின்றன.

(பிபிசி)


Add new comment

Or log in with...