தமிழக அரசியல்வாதிகளின் வரம்பு மீறிய தலையீடு! | தினகரன்

தமிழக அரசியல்வாதிகளின் வரம்பு மீறிய தலையீடு!

இலங்கையின் மீன்பிடிச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய திருத்தம் அயல்நாடான இந்தியாவின் தமிழக மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ள புதிய சட்டத்திருத்தமானது, எமது நாட்டின் கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்து மீன்பிடிக்கின்ற தமிழ்நாட்டு மீனவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தை மாத்திரம் கொண்டிருக்கவில்லை. இலங்கையின் ஒட்டுமொத்த மீன்வளத்தையும் பாதுகாக்கும் நோக்கத்துக்காகவே மீன்பிடிச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இச்சட்டத் திருத்தமானது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் சம்பந்தப்பட்டது. இலங்கையின் உள்நாட்டு நீர்நிலைகளில் காணப்படுகின்ற வளங்களையும், இலங்கைக்குச் சொந்தமான கடலில் காணப்படும் வளங்களையும் பாதுகாக்கும் நோக்கம் கொண்டது இச்சட்டத்திருத்தம். இந்தியாவினதோ அல்லது வேறெந்த அயல் நாட்டினதோ நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதென்பது இச்சட்டத்திருத்தத்தின் நோக்கமல்ல.

ஆனாலும் அயலிலுள்ள தமிழ்நாடு இலங்கையின் சட்டத் திருத்தத்தை கடும் தொனியில் எதிர்க்கத் தொடங்கியுள்ளது. இலங்கை அரசின் சட்டத் திருத்தத்தைத் தடுத்து நிறுத்தும்படி கோரி, அம்மாநிலத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திரமோடிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் மீன்பிடிச் சட்டத் திருத்தமானது தமிழ்நாட்டு மீனவர்களின் மீன்பிடித் தொழிலைக் கட்டுப்படுத்தும் உள்நோக்கத்தைக் கொண்டதாகுமெனச் சுட்டிக் காட்டி நரேந்திரமோடிக்கு அக்கடிதத்தை எழுதி வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

இலங்கை தனது உள்நாட்டு நீர்நிலை வளங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள சட்டத் திருத்தத்தை மற்றொரு நாட்டின் மாநிலமொன்று தடுத்து நிறுத்துவதற்கு முற்படுகின்ற விசித்திரமான போக்கை இங்கே காணக் கூடியதாக இருக்கின்றது.

இலங்கை தற்போது புதிதாக ஏற்படுத்தியிருக்கின்ற சட்டத்திருத்தமானது தனது நாட்டுக்குச் சொந்தமான கடல் எல்லைக்குள் காணப்படுகின்ற வளங்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டதாகும். இந்திய மீனவர்கள் மாத்திரமன்றி, எந்தவொரு நாட்டின் மீன்பிடிப் படகுகளும் இனிமேல் இலங்கைக் கடல் எல்லைக்குள் பிரவேசிப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் கூடுதலான தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

நீண்டகால சிறைவாசம் ஒருபுறமிருக்க, அவர்களுக்கு விதிக்கப்படுகின்ற அபராதத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எமது கடல் எல்லைக்குள் காணப்படும் வளங்கள் வேறு நாட்டு மீனவர்களால் மோசமாக அழிக்கப்பட்டு வருவதனால், பாதிப்பைத் தடுத்து நிறுத்தும் சட்டத் திருத்தம் தவிர்க்க முடியாததாகும். எனவேதான் இவ்வாறான கடுமையான நடவடிக்கையொன்றை மேற்கொள்ளும் நிலைமைக்கு இலங்கை இப்போது தள்ளப்பட்டிருக்கிறது.

இலங்கையின் புதிய சட்டத் திருத்தத்தை தமிழ்நாட்டின் மீனவர்களும், அம்மாநிலத்தின் அரசியல்வாதிகளும் எதிர்ப்பதற்குக் காரணங்கள் இருக்கின்றன. தமிழகத்தின் இராமேஸ்வரம் போன்ற கரையோரங்களைச் சேர்ந்த மீனவர்களைப் பொறுத்தவரை, அயல் நாட்டின் கடல் எல்லைக்குள் பிரவேசித்து மீன்பிடிப்பதென்பது அவர்களுக்குப் புதியதொன்றல்ல.

இராமேஸ்வரம் போன்ற பிரதேசங்களிலிருந்து மீன்பிடிப்பதற்காகப் புறப்படுகின்ற படகுகள் நேரடியாக இலங்கைக் கடல் பரப்புக்குள்ளேயே பிரவேசிக்கின்றன. தினமும் தமிழ்நாட்டிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகள் இலங்கையின் கடல் எல்லைக்குள் பிரவேசித்து மீன்பிடிப்பதாக இலங்கை அதிகாரிகள் கூறுகின்றனர். செய்மதிப் படங்களும் அதனை உறுதிப்படுத்துகின்றன.

எனவேதான் இலங்கையின் புதிய சட்டத் திருத்தத்தை தமிழ்நாட்டு மீனவர்கள் எதிர்க்கின்றார்கள். அதாவது சர்வதேச சட்டத்துக்கு முரணான வகையில் மற்றொரு நட்டின் கடல் எல்லைக்குள் சென்று மீன்பிடிப்பதை நியாயப்படுத்தி கோஷம் எழுப்புகின்றார்கள்.

மற்றொரு நாட்டின் வளத்தைச் சுரண்டுவது அநீதியென்றோ அல்லது தண்டனைக்குரிய குற்றமென்றோ ஏற்றுக் கொள்வதற்கு தமிழ்நாட்டு மீனவர்கள் தயாராக இல்லை. காரணம் அங்குள்ள அரசியல்வாதிகள்!

தமிழ்நாட்டு மீனவர்களின் விவகாரத்தை தங்களது அரசியலுக்கு சாதகமாகப் பயன்படுத்துகின்ற அரசியல்வாதிகள் அங்கு நிறையவே உள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ள உள்நோக்கமும் அதுதான்!

தமிழகத்தில் அ.தி.மு.க மோசமாக செல்வாக்கு இழந்திருக்கும் இன்றைய வேளையில், தமிழக மீனவர்களின் பிரச்சினையை மக்கள் செல்வாக்கைத் தேடிக் கொள்வதற்காக பயன்படுத்த வேண்டிய தேவை அவருக்கு இருக்கின்றது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, தமிழ்நாட்டின் கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்த உள்ளூர் அரசியல் பிரமுகர்களில் பலர் மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்களாக உள்ளனர். பெருமளவு மீன்பிடிப் படகுகளை வைத்துக் கொண்டு அவர்கள் கடற்றொழில் நடத்தி வருகின்றனர்.

மீன்பிடி விவகாரத்தில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் உரத்துக் குரலெழுப்புவதற்கு இதுவும் ஒரு காரணம்.

மீன்பிடிச் சட்டத் திருத்தத்தைப் பொறுத்தவரை இலங்கையின் நிலைப்பாடு பொருத்தமானது. மற்றொரு நாட்டு மீனவர்களின் நலனுக்காக இலங்கை தனது கடல்வளங்களை தொடர்ந்தும் இழந்து கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது. தமிழ்நாட்டு மீனவர்களின் தவறை அங்குள்ள அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளும் வரை இப்பிரச்சினைக்கு ஒருபோதுமே தீர்வு ஏற்பட்டுவிடப் போவதில்லையென்பது மட்டும் உண்மை! 


Add new comment

Or log in with...