Friday, March 29, 2024
Home » உயர்கல்வியின் ஊடாக நாட்டை வலுப்படுத்த ஜனாதிபதி எதிர்பார்ப்பு

உயர்கல்வியின் ஊடாக நாட்டை வலுப்படுத்த ஜனாதிபதி எதிர்பார்ப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்

by damith
November 6, 2023 6:10 am 0 comment

பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிக்கக்கூடிய உயர்கல்வி கற்கைநெறிகளை அறிமுகப்படுத்தி, நாட்டை வலுப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்பார்த்துள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களைத் தனிமைப்படுத்தி பராமரிக்கும் நிலையங்களில் ஒன்றாகப் பயன்படுத்தப்பட்ட மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தின் (பற்றிகலோ கெம்பஸ்) சாவிகளை பல்கலைக்கழக ஸ்தாபகர் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவிடம் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர்,இவ்வாறு தெரிவித்தார்.

இப்பல்கலைக்கழகத்தின் சாவிகளை ஜனாதிபதி சார்பில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் வைபவம் பல்கலைக்கழகத்தின் பிரதான மண்டபத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இவ்வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவ்வைபவத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நாட்டைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னுரிமை அளித்துள்ளார். அதனடிப்படையிலான வேலைத்திட்டங்களில் அவர் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்.

இந்நாடு பொருளாதார நெருக்கடிக்குள்ளான போது பல்வேறு அசௌகரியங்கள், தாக்கங்களை மக்களும் எதிர்கொண்டனர்.

அச்சமயம் நாட்டின் தலைமையைப் பொறுப்பெடுக்க எவரும் முன்வரவில்லை. அவ்வாறான சூழலில் இந்நாட்டை தம்மால் கட்டியெழுப்ப முடியும் என்று அவர் துணிந்து நாட்டின் தலைமையைப் பொறுப்பெடுத்தார். அன்று தொடக்கம் அர்ப்பணிப்புகளுடன் நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

இதன் பயனாக ஏனைய நாடுகளை விடவும் விரைவாக மறுமலர்ச்சிப் பாதையில் நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது.

இதன் பிரதிபலனாக பங்களாதேசத்திடம் பெற்றிருந்த கடன் முழுமையாக திருப்பி செலுத்தப்பட்டுள்ளது.

நாடொன்றைக் கட்டியெழுப்பும் விடயத்தில் பல்கலைக்கழகங்களு ம் பாரிய பங்கு உள்ளது. அவ்வாறான பங்களிப்பை இப்பல்கலைக்கழகமும் வழங்க முடியும். வருடமொன்றுக்கு 2500 – 3000 பட்டதாரிகள் உருவாக்கக்கூடிய வாய்ப்பு இங்குள்ளது.

முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மட்டக்களப்பு மாவட்டம் மாத்திரமல்லாமல் முழு இலங்கையும் முன்னேற வேண்டும் என்ற நோக்கோடுதான் 2016 இல் இப்பல்கலைக்கழகத்தை ஆரம்பித்துள்ளார்.

பொருளாதார ரீதியிலான நலன்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு அவர் இப்பல்கலைக்கழகத்தை அமைக்கவில்லை.

சேவை மனப்பான்மையுடன் ஏனைய பல்கலைக்கழகங்களை விடவும் குறைந்த கட்டண கட்டமைப்புடன் இதனை அவர் இங்கு அமைத்திருக்கிறார்.

இப்பகுதி மக்களுக்கு சேவை செய்வதே அவரது நோக்கமாக உள்ளது.

இப்பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது முதல் முறையாக இயங்கி இருந்தால் சுமார் 10 ஆயிரம் பட்டதாரிகள் உருவாகி இருப்பார்கள். அவர்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிக்கக் கூடியவர்களாக இருந்திருப்பர்.

ரிதிதென்னவிலிருந்து மர்லின் மரிக்கார்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT