முறையான கல்வி பயிலும் இடங்களல்ல முன்பள்ளிகள் | தினகரன்

முறையான கல்வி பயிலும் இடங்களல்ல முன்பள்ளிகள்

ஒரு நாட்டின் முன்னேற்றத்தை நிர்ணயிப்பதில் பால்ய கல்விமுறைமை முக்கிய பங்கு வகிக்கின்றது. அதற்காக சில வேளைகளில் நம்மைப் பார்த்து 'எங்கு பயின்றீர்கள்?' என அதிகம் கேட்பது இதற்கேயாகும். ஏனெனில் அங்குள்ள கல்வித்தரத்தை வைத்து அளந்து பார்ப்பதற்கே அவ்வினா.

ஆனால் இதில் நமது பெற்றோர் அதிகம் பேர் தவறிழைக்கின்றனர்.

தமது குழந்தைகளுக்கு மிகச் சரியான ஆரம்பக் கல்வியை வழங்குவதுக்கு தயக்கம் காட்டுகின்றனர். தாம் வாழும் சூழலுக்குள் ஏதாவது ஒரு முன்பள்ளியில் சேர்த்து விட்டால் சரியாகி விட்டது என நம்புகின்ற காலமாகி விட்டது. அதற்கும் அப்பால் இவ்வாறான முன்பள்ளியின் பணிகள் பற்றியும் திறந்த அறிவொன்று இல்லாமல் போய் விட்டது.

குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்கு இன்றுள்ள முன்பள்ளிக் கல்வி மிக முக்கியமானது. இந்த பால்ய காலம் உணர்ச்சிமிக்க காலம் அல்லது ஆராயும் பருவம் எனப்படுகிறது. இப்பருவத்தில்தான் குழந்தைகளிடம் தனது திறமைகளை வளர்த்துக் கொள்ள மற்றைய காலங்களை விட அதிகப்படியான செயலாற்றும் திறன் உச்சநிலையிலுள்ளது.

ஒரு குழந்தைக்கு எத்தகைய சாதகமான சுற்றுப்புற சூழ்நிலையிலிருந்தாலும் அக்குழந்தை குறிப்பிட்ட முதிர்ச்சிநிலையை அடையும் வரை அதனால் கற்க இயலாது. முறையான நல்ல வளர்ச்சி ஏற்படுவதற்கு நல்ல சாதகமான சூழ்நிலை அத்தியாவசியமான ஒன்றாகிறது.

நல்ல சூழ்நிலை என்பது குழந்தைக்குத் தூண்டுகோலாகவும், நல்ல (உடன்பாடான) உறுதியான அனுபவங்களை கொடுக்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். அத்தகைய சூழலே குழந்தைக்கு சலிப்பினைப் போக்கி தன்னகத்தே மறைந்துள்ள திறமைகளையும் தனித்தன்மையையும், விருப்பங்களையும் வெளிப்படுத்த உதவுகிறது.

ஆனால் தற்போதுள்ள பெற்றோர் மத்தியில் முன்பள்ளிக் கல்வியில் குழந்தைகள் பாண்டித்தியம் திளைத்தவர்களாகவும், பாடசாலையில் தரம் ஒன்றுக்கு அனுமதிக்கப்படும் முன்னர் எழுத, வாசிக்க தெரிந்திருக்க வேண்டும் எனவும் விரும்புகின்ற அபாயகரமான சூழல் எழுச்சி பெறத் தொடங்கியுள்ளது. குறித்த விடயத்தினை அதிகமான முன்பள்ளி நிலையங்கள் எதிர்கொள்கின்றன. இது பாரிய பிரச்சினையான உருமாறியிருக்கின்றது. அதனை அதிகம் பேர் எம்மிடம் பகிர்ந்து கொண்டுமுள்ளனர்.

இதனை விளக்க முற்படும் முன்பள்ளிகளை சமூகத்தில் பிழையாக சித்தரிக்க அதிகமான பெற்றோர் முனைந்துள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குழந்தை வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் இரண்டும் ஒரு தொடர்ச்சியான நிகழ்வாக இருப்பதால் கற்றலும் முதிர்வடைதலும் அதனைப் பொறுத்தே அமைகிறது. வெறுமையான (வெற்றிடத்தில்) சூழ்நிலையில் முறையான கற்றல் நிகழாது. ஏனெனில் அதற்குத் தூண்டுதலான சூழ்நிலையும் இனிமையான அனுபவங்களும் இருந்தால்தான் குழந்தை உலகினைப் பற்றி ஆராய உதவும்.

எல்லாக் குழந்தைகளுக்கும் கற்பதற்கு உரிமை உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை முறையான வழியில் அடைய உதவுதல் வேண்டும். குழந்தைகளின் ஆரம்ப கால பருவங்களைப் பற்றி கல்வியாளர்கள் அதிக அக்கறை கொண்டு கவனம் செலுத்தினார்கள்.

குழந்தையின் வளர்ச்சியில், முதல் ஆறு வருடங்கள் முத்திரை பதிக்கக் கூடியதாக உள்ளது. ஏனெனில் இந்தப் பருவத்தில்தான் அடிப்படை நீதி, உடல், சமூக, மன எழுச்சி, மொழி மற்றும் கலை வளர்ச்சிக்கு வித்திடப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் ஒருங்கிணைந்த வளர்ச்சியைக் கீழ் வரும் முறையில் விளக்கலாம்.

உலகிலே மிகச் சிறந்த கல்விக் கொள்கையினைக் கொண்ட, இந்த உலகினை வெற்றி கொண்ட பின்லாந்தின் கல்வித் திட்டத்தினை நாம் எல்லோரும் ஒருமுறை படித்துப் பார்ப்பது அவசியம். அப்போதுதான் குழந்தைகளை கல்வியின் பெயரால் வதைத்து, வறுத்தெடுக்கும் நிலையிலிருந்து மீள முடியும்.

பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. ஒன்றரை வயதில் விளையாட்டுப் பாடசாலை, இரண்டரை வயதில் ப்ரீ-கே.ஜி, மூன்று வயதில் எல்.கே.ஜி, நான்கு வயதில் யு.கே.ஜி என்கிற எதுவுமே அங்கே இல்லை. அதனையும் தாண்டி 'ரியூஷன்' என்ற அருவருப்பான கல்விக் கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை.

குழந்தைகளுக்கு கற்றலுக்கான சூழலை உருவாக்க துடிக்கும் நாம் அதன் மூளையின் தாங்குதிறன் பற்றி கவனம் செலுத்துவதேயில்லை. வெறுமனே நான்கு வயதானால் முன்பள்ளி சூழலுக்கு அனுப்ப பழகிய நாம், அதே பராயத்தில் எழுத வாசிக்க தெரிந்திருக்க வேண்டும் எனவும் விரும்புகின்றோம். அவ்வாறான நடைமுறைகளை பின்பற்றாத முன்பள்ளி நிலையங்களை கடிந்து கொள்ளும் பெற்றோர் அதிகம். முன்பள்ளிக் கல்வி என்பது சூழலைப் புரிந்து கொள்கின்ற, வர்ணங்களை அடையாளம் காணுகின்ற கலை என்பதனை மறந்து விட்டே நமது பெற்றோர்களின் நாட்கள் நகருகின்றன.

வளர்ச்சி நிலையானது குழந்தைப் பருவத்தில் மிகமுக்கியமான ஒன்றாக உள்ளது. இப்பருவத்தில்தான் குழந்தையின் எண்ணங்கள், ஆர்வங்கள், நேயங்கள் போன்றவை வளர்ச்சியடைகின்றன. பெற்றோர் தங்கள் குழந்தைகளின்பால் மிகுந்த அன்பு கொண்டிருந்தாலும் தங்கள் குழந்தைகளை வழிநடத்திச் செல்லவும், பயிற்சியளிக்கவும் போதுமான திறமையுடையவர்களாய் இருப்பதில்லை. அதைப் பற்றிய அறிவையுடையவர்களும் வறுமையால் வாடுவதாலும் அல்லது நவீன கால வாழ்க்கை முறையாலும் நேரமின்மையால் துன்பப்படுகின்றனர்.

சமூக வாழ்வில் ஏற்படும் மாற்றங்களாலும், தொழில் வளர்ச்சி அடைவதாலும் தற்போது குழந்தைகளின்பால் அதிக கவனம் செலுத்துதல் அவசியமாகிறது. நல்ல தரமான பாலர் பாடசாலை மற்றும் முன்பருவப் பாடசாலைகள் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு உதவும். இப்பள்ளிப் பருவக் கல்வியானது குழந்தைகளின் ஆரோக்கியமான மனம் மற்றும் மன எழுச்சி வளர்ச்சிக்கு முக்கிய தேவையாகிறது.

அகராதிப்படி குழந்தைக்கு முன்பள்ளி என்பது ஆரம்ப நிலை கல்விக்கான ஒரு நிறுவனம். பெற்றோர்களுக்கு அது ஒரு பொதுவான இடம். அதில் ஆசிரியரின் தலைமையில் குழந்தைகள் கூடி, மகிழ்ந்து விளையாடி தங்கள் நேரத்தை ஒன்றாகக் கழிக்கிறார்கள்.

முன்பள்ளி முறையான கல்வி பயிலும் ஒரு இடமல்ல என்பதனை நாம் முதலில் புரிந்து கொள்ளுதல் வேண்டும். அது குழந்தைகள் முதன்முதலாக தங்கள் சுதந்திரத்தை அனுபவிக்கும், உணரும் ஒரு இடமாகும்.

இன்றைய காலகட்டத்தில் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளின் வாழ்க்கையில் முன்பள்ளி தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக உள்ளது.

இம்முன்பள்ளியில் அனைத்து அடிப்படை கற்றல் முறைகளிலும் பயிற்சிக்கப்படுவதாலும் வெளிப்படுத்துவதாலும் அவர்களுக்கு சுதந்திர உணர்வு விரைவாக ஏற்படுகிறது. இங்கு செய்யப்படும் சில செயல்முறைகள் குழந்தைகளுக்கு தன்னிலை உணர்த்தும் சில செயல்களான தானே உண்ணுதல், உடையணிந்து கொள்ளுதல், சுத்தத்தைப் பராமரித்தல் போன்ற அடிப்படை செயல்கள் உருவாக உதவுகிறது.

இதைப் போன்ற பள்ளியில் ஏற்படும் கற்றல் அனுபவங்கள் குழந்தைகளுக்கு அடிப்படைப் பண்புகளான, வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளுதல், தங்கள் உணவு மற்றும் விளையாட்டுப் பொருட்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளுதல், தங்கள் உடைமைகளைப் பாதுகாத்தல் போன்றவை ஏற்படுத்த உதவுகிறது. தங்கள் வயதை ஒத்த மற்ற குழந்தைகளோடு கலந்துரையாடவும், புதிய வார்த்தைகளைக் கற்பதன் மூலம் விரைவாக மொழி வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது.

விளையாட்டுப் பள்ளிகள், குழந்தைகளை பாடசாலைக் கல்விக்குள் செல்வதற்குரிய தன்னம்பிக்கை மற்றும் தனித்தன்மையை வளர்த்து அவர்களைத் தயார்படுத்துகின்றன.

குழந்தை_- ஆசிரியர் உறவுநிலை சரியாக பேணப்பட்டு வரும் நல்ல முன்பள்ளியில் விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு அதன் அவசியம் உணரப்படுகிறது. அறியாக் குழந்தைகளை வழிநடத்திச் செல்லும் ஒரு நல்ல வெளிச்சமுடைய விளக்காக முன்பள்ளி இருத்தல் அவசியம். அதுவே சிறந்த ஒன்றாக இருக்க காரணமாகின்றது. முன்பள்ளியின் குறிக்கோள்கள் குழந்தைகளுக்கு நல்ல உடல் வளர்ச்சி, மற்றும் தசைதத் திறன் ஒருங்கிணைப்பு, இயக்கத்திறன் வளர்ச்சியை ஏற்படுத்துதல் என்பனவாகும்.

குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான சுகாதார பழக்கங்களை ஏற்படுத்தவும், உணவு உண்ணுதல், கழிப்பறைப் பழக்கங்கள், கைகழுவுதல், சுத்தப்படுத்துதல், நன்கு உடையணிதல் போன்ற தனிப்பட்ட இணக்கங்களை ஏற்படுத்த உதவும் செயல்களை செய்யவும் உதவும். குழந்தைகள் தங்கள் மனஉணர்வுகளை முதிர்ச்சியான முறையில் வெளிப்படுத்தவும், உணர்ந்து கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும், கட்டுப்படுத்தவும் வழிநடத்தும்.

கலை உணர்வினை வெளிப்படுத்தும் தூண்டுகோலாகவும் முன்பள்ளிகள் அமையும்.

தாங்கள் வாழும் உலகினைப் பற்றிப் புரிந்து கொள்ளவும், ஆராய்ச்சி செய்து கண்டறியவும், அவர்கள் அறிவு தாகத்தையும், ஆர்வத்தையும், தூண்டக் கூடிய சூழலையும் ஏற்படுத்தும். குழந்தைகளின் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், அவர்களின் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் சரியான முறையில் உச்சரித்து வெளிப்படுத்த ஏதுவாக இருக்கும்.

முன்பள்ளியானது குழந்தைகளின் சரியான நேர்மையான எண்ணங்களான நம்பிக்கை, அன்பு, பாதுகாப்பு, சாதிக்கும் தன்மை, சகிப்புத் தன்மை, போன்றவற்றைக் கற்கவும் அவற்றை முறையான வழியில் வெளிப்படுத்தும் உதவும்.

றிசாத் ஏ காதர்
 (ஒலுவில் மத்திய விசேட நிருபர்)


Add new comment

Or log in with...